November 08 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மானாமதுரை

  1. அருள்மிகு வீர அழகர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வீர அழகர் (சுந்தர்ராஜப்பெருமாள்)

உற்சவர்        :     சவுந்தரவல்லி என்ற மகாலட்சுமி

தீர்த்தம்         :     அலங்கார தீர்த்தம்

புராண பெயர்    :     வானரவீர மதுரை

ஊர்             :     மானாமதுரை

மாவட்டம்       :     சிவகங்கை

 

ஸ்தல வரலாறு:

இத்திருக்கோயிலை மாவலி வாணாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மாவலி வாணாதிராயருக்கு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் உண்டு.இந்த மன்னருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜப்பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. இந்த பெருமாளை பார்க்காமல் எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டார்.இந்நிலையில் ஒரு நாள் மன்னருக்கு சுந்தர்ராஜபெருமாளை பார்க்க செல்ல இயலாத அளவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளை பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார்.உடனே பெருமாள், மன்னரின் கனவில் தோன்றி, மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என கூறி மறைந்தார்.மன்னனும் பெருமாள் கூறியபடி கோயில் கட்ட நினைத்தான். ஆனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவது என குழம்பினான்.பெருமாள் மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விட, அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோயிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோயிலுக்கான குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவே தான் கோயிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

 

அன்று பொன்னிறமான நெற்கதிர் அலங்காரம். அதில் அந்த மண்டபமே காணப் பொன்மண்டபமாக மாற்றியிருந்தது. பொன்னுக்கு நடுவில் மற்றொரு பொன்னாக அழகர் வீற்றிருந்தார். அழகர் தரிசனம் காண எண்ணிலடங்கா மக்கள் கூடிவிட்டனர். கூட்டம் எல்லை மீறுகிறது மக்கள் பக்தியிலும் மகிழ்ச்சியிலும் குதூகலிக்கிறார்கள். வெற்றுக் கூச்சல்கள்தானா அல்லது உள்ளார்ந்த அர்ப்பணிப்பு இவர்களுக்கு உள்ளதா என்று சோதிக்கப் பெருமாள் திருவுளம் கொண்டார் போலும்… மண்டபத்தில் தீ பற்றியது. காய்ந்த கதிர்கள் சடசடவெனப் பற்றிக் கொள்ளக் கேட்க வேண்டுமா… மொத்த மண்டபமும் தீப்பிழம்பின் பிடிக்குக் கணத்தில் மாறிவிட்டது. அரசர் முதற்கொண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் திகைத்தனர். இதுகாறும், கோவிந்தோ… அழகா என்று சிலிர்த்தவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு ஒரு மனிதர் தீக்குள் பாய்ந்தார். பெருமாளைத் தன் கரங்களால் அள்ளி எடுத்தார். தீ அவர் முதுகில் படரத் தொடங்கியது. ஆனால், அது பற்றிய அக்கறை இன்றிப் பெருமாளைத் தூக்கிக்கொண்டு வெளியே மணல்வெளியில் பாய்ந்தார். மக்களும் மன்னரும் ஓடிவந்து பார்த்தனர். அந்த மனிதர் கீழே கிடக்கிறார். அவர் மார்பில் சாய்ந்து அழகரும் கிடக்கிறார். அவர் மேனியில் பற்றிய தீ மணல் வெளியில் புரண்டதால் அணைந்திருந்தது. பிற அர்ச்சகர்கள் ஓடிவந்து பெருமாளை வாங்கினர். அந்த மனிதரின் தீப்புண்களுக்கு மருந்திட்டனர். மன்னன் ஓடிவந்து அவர் அடிகளைப் பணிந்தார்.

ஐயா, தாங்கள் யார்… இந்த உற்சவத்தில் முதல் மரியாதை பெறுபவன் நான். ஆனால், அந்தக் கொடுங்காட்சியை வேடிக்கை பார்க்கதான் என்னால் முடிந்தது. ஆனால் தாங்களோ துணிந்து தீயில் பாய்ந்து அப்பனின் திருமேனியை அள்ளி வந்துவிட்டீர்கள். உங்கள் மேனியில் தீ பற்றிய போது என் மேனியில் வெட்கம் பற்றியது. காக்க முடியாதவனுக்கு எதற்கு மாலைகள்… மரியாதைகள்… பரிவட்டங்கள்… இனி இந்த உற்சவத்தில் உங்களுக்குதான் முதல் மரியாதை தரப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்” என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான் மன்னன். “மன்னா, நான் இந்த வீரராகவப் பெருமாள் கோயிலில் சாதாரண அர்ச்சகர். என் பெயர் அமுதார். வீரராகவப் பெருமாளின் வீட்டுக்கு அல்லவா அழகர் விருந்துக்கு எழுந்தருள்கிறார். வந்த விருந்தினரைக் காக்கவேண்டிய பொறுப்பு அந்தப் பெருமாளுக்கு உள்ளதல்லவா… அவன் என்னுள் புகுந்து இந்தச் செயலைச் செய்தான் என்றுதான் எண்ணுகிறேன். உலகில் அம்புக்கு என்றும் பெருமை இல்லை. எய்தவனுக்குதான் பெருமை. அப்படி என்னை எய்தவன் இந்த வீரராகவப் பெருமாள் அல்லவா… எனவே, அழகர் உற்சவத்தில் தாங்கள் தருவதாகச் சொன்ன முதல் மரியாதையை இனி அந்த வீரராகவப் பெருமாளுக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று தம்மைத் தாழ்த்தி இறைவனை உணர்த்தினார் அமுதார். தன் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தவர் என்பதால் அவர் அதன்பிறகு ‘தியாகம் செய்த அமுதார்’ என்றே வழங்கப்பட்டார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில். இன்றும் இந்தப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ‘தியாகம் செய்த அமுதார்’ உற்சவம் 15 நாள்கள் இங்கு நடைபெறுகிறது. ஆபத்துக்காலத்தில் இந்த பெருமாள் கோயிலுக்கு நாடிவந்து வேண்டினால் அவர் ஓடிவந்து காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாயிற்று.

அழகர் சித்திரை உற்சவத்தின் போது இங்கு வந்து வையாழி சேவை கண்டருள்கிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • சித்திரைத் திருவிழா, சித்ரா பெளர்ணமி என்றதும் மதுரை மாநகரம்தான் நினைவுக்கு வரும். அங்கு மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், திக்விஜயம், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் எல்லாம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதற்கு சற்றும் குறையாத வகையில் இதே திருவிழா காலம்காலமாக மானாமதுரையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

  • மதுரையின் அரசி மீனாட்சி என்றால் மானாமதுரையில் அவள் பெயர் ஆனந்தவல்லி. அங்கு சொக்கநாதர்; இங்கு சோமநாதர். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி சகோதரியின் திருமணத்தைக் காண வருகிறார் கள்ளழகர். அவருக்கு நிகராக மானாமதுரையில் எழுந்தருளுபவர் வீர அழகர். இப்படி மதுரைக்கு இணையாக சித்ரா பெளர்ணமி திருவிழா மானாமதுரையிலும் விழா களைகட்டும்.

 

  • இந்த அற்புதமான திருக்கோயிலில் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இதை முறையாக விரிவுபடுத்திக் கட்டியவர் சொக்கப்பநாயக்கர் என்கிறது வரலாறு.

 

  • இங்கு கருவறையில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி தாயாருடன் சேவைசாதிக்கிறார். திருவாச்சியோடு ஆதி சேஷன் குடைப்பிடிக்க இங்கு பெருமாள் கருணாமூர்த்தியாகக் காட்சி கொடுக்கிறார்.

 

  • இங்கு அருளும் தாயாருக்கு கனகவல்லி என்று திருநாமம். கனகம் என்றால் தங்கம். இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வறுமையை நீக்கி செல்வ வளம் அருள்பவள் இந்தத் தாயார் என்பது ஐதிகம்.

 

  • இந்த ஆலயத்தில் பெருமாள் நின்ற கிடந்த அமர்ந்த திருக்கோலங்களில் காட்சியருள்கிறார். மூலவர் வீரராகவப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க ஸ்ரீரங்கநாதரார் கிடந்த கோலத்திலும் யோக நரசிம்மராக அமர்ந்த கோலத்திலும் பெருமாள் காட்சி அருள்கிறார். எனவே இங்கு வந்து பெருமாளை வேண்டிக்கொள்வதென்பது மிகவும் விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள்.

 

 

  • ராமாயண காலத்தில் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடி ஸ்ரீராமன் இலங்கைக்குச் செல்லும்போது இத்தலத்துக்கு வானரப் படையுடன் வந்து சோமநாதரை வழிபட்டார். அப்போது, ராமனிடம் ‘சீக்கிரமே சீதையை அடைவாய்’ என்று ஆசி வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வந்தபோது ராமபிரான் உடன் வந்த வானரச் சேனைகளின் பசியைத் தீர்த்த இடம் என்பதால் வானர மதுரை எனப் பெயர் பெற்று பின்னர் இதுவே மருவி மானாமதுரை என மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

 

  • மானாமதுரையில் அருள் காட்சி தரும் சுந்தரராஜ பெருமாள் எனும் வீர அழகர் கிழக்கு நோக்கி திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். நிலமகளும் திருமகளும் உடன் காட்சி தருகின்றனர். செளந்தரவல்லித் தாயார் எனும் பெயரில் மகாலட்சுமியின் தரிசனத்தையும் இங்கே காணலாம்.

 

  • பெருமாளின் வலப்புறம் ஆழ்வார்கள் சேவை சாதிக்கிறார்கள்.

 

  • தென் திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீர அனுமன் காட்சியளிக்கிறார்.

 

  • பெருமாளைப்போலவே இங்கு அனுமன் மிக விசேஷம். இந்த அனுமனுக்கு சாற்றப்படும் வடை மாலை ஒருமாதம் ஆனாலும் கெடாது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம். மறுபடியும் ஒரு ராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இத்தல ஆஞ்சநேயர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார்.

 

  • ஆடித்திருவிழாவின் போது காஞ்சி வரதராஜப்பெருமாள் போல பெருமாள், தாயாரிடம் சென்று திருமணம் முடிப்பார்

 

  • இக்கோயில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

  • மாவலி வானதிராயா எனும் அரசனின் கனவில் தோன்றிய நாராயணன், ஓர் எலுமிச்சையை இரண்டாகப் பிளந்து வீசும்படி கூறியதுடன், அதன் ஒருபாகம் விழுந்த இடத்தில் பெருமாளுக்கு ஒரு கோயிலையும், மறுபாகம் விழுந்த இடத்தில் திருக்குளத்தையும் அமைக்கும்படியும் கூறுகிறான். அதன்படியே மன்னன் செய்ய, இங்கிருக்கும் திருக்குளம் நூபுர கங்கை என அழைக்கப்படுகிறது. திருக்குளத்தின் நீர் எலுமிச்சைச் சாறு போல அமிலத் தன்மையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

  • மதுரையில் நடப்பது போலவே அழகருக்கு எதிர் சேவை, திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.

 

  • பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வீரராகவப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும்.

 

  • இங்கு ஆண்டாள், சிறிய திருவடி, பெரிய திருவடி, மணவாள மாமுனிகள், யோக நரசிம்மரோடு கூடிய சக்கரத் தாழ்வார் ஆகியோரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள்

 

திருவிழா: 

மதுரை அழகர்கோவிலைப்போலவே, சித்திரை மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. 4ம்நாள் எதிர்சேவையும்,5ம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பவுர்ணமியில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து, பகற்பத்து இக்கோயிலின் முக்கிய விசேஷங்களாகும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில்,

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம்.

 

போன்:

9942226962, 9629673713, 9443286951.

 

அமைவிடம்:

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 46கி.மீ தூரத்தில் மானாமதுரை அமைந்துள்ளது. ஊரில் நடுவில் இந்த அழகர் கோயில் அமைந்துள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது.

 

Share this:

Write a Reply or Comment

5 + 7 =