November 07 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலைத்திருக்காட்டுப்பள்ளி

  1. அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     அக்கினீசுவரர், தீயாடியப்பர்

அம்மன்        :     சௌந்தரநாயகி, அழகம்மை

தல விருட்சம்  :     வன்னி, வில்வம்

தீர்த்தம்         :     சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி,அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது.

புராண பெயர்   :     மேலைத்திருக்காட்டுப்பள்ளி

ஊர்             :     திருக்காட்டுப்பள்ளி

மாவட்டம்      :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

புராண காலத்தில், தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன், தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகிவிடுகிறதென்றும், அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டும் என்றும் இறைவனிடம் முறையிட்டான். அக்னிதேவன் முன் இறைவன் சிவபெருமான் தோன்றி, இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்தக் குளத்து நீரால் தன்னை அபிஷேகம் செய்தால், என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும், அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.

உறையூர் சோழமன்னனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திருக்காட்டுப்பள்ளியிலும், மற்றொருத்தி உறையூரிலும் வாழ்ந்து வந்தனர். மன்னனின் பணியாளன், கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மனைவிகளிடம் கொடுக்க வேண்டும் என்பது அரசனின் ஆணை. திருக்காட்டுப்பள்ளியில் வாழும் மனைவி, பூக்களைப் பெற்று இறைவனை அர்ச்சித்தாள். உறையூரில் இருந்தவள், பூக்களைத் தன் தலையில் சூட்டி மகிழ்ந்தாள். ஒரு முறை இயற்கை சீற்றத்தால், மண் மாரி பெய்து உறையூரை அழித்தது. திருக்காட்டுப்பள்ளி மட்டும் இந்த அழிவிலிருந்து தப்பியது என்று ஒரு வரலாறு தெரிவிக்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில், பாடல் பெற்ற தலங்கள் இரண்டு உள்ளன. காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். அது திருவெண்காட்டுக்கு அருகில் உள்ளது. மேலைத்திருக்காட்டுப்பள்ளி எனப்படும் இத்தலம், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்று. இங்குதான் குடமுருட்டியாறு பிரிகிறது.

 

  • மேலைத்திருக்காட்டுப்பள்ளி சிவாலயம், ஐந்து நிலை கோபுரத்துடனும், மூன்று பிராகாரங்களைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது.

 

  • மூலவர் அக்னீஸ்வரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது.

 

  • இத்தலத்தில் இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு “அக்னீஸ்வரம்” என்று பெயர் வந்தது. சிவபெருமானை அக்னி பகவான் வழிபட உண்டாக்கிய அக்னி தீர்த்தம், இன்று கிணறு வடிவில் உள்ளது.

 

  • மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. லிங்கத்தின் சிரசு மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றத்தைக் காணலாம்.

 

  • மூலவர் சற்றே தாழ்வான பள்ளத்தில் உள்ளார். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்துதான் இறைவனை வழிபட வேண்டும்.

 

  • இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள்.

 

  • இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது.

 

  • இத்தலத்தில் விஷ்ணுவுக்கு தனி ஆலயம் இல்லை. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்ணு, ஸ்ரீனிவாசப் பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

 

  • இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, குரு தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம்

 

  • மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். லிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் தனி சந்நிதியில் காணப்படுகிறார். லிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், பக்கத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன.

 

  • இக்கோயிலில் குருபகவான் இரண்டு கரங்களுடன், மகர கண்டி, ருத்ராட்ஷம் அணிந்து யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு.

 

  • திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

 

திருவிழா:

மாசி மகம், பங்குனி பெருவிழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை

 

திறக்கும் நேரம்:     

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்,

திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் – 613 104

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:   

+91 94423 47433

 

அமைவிடம்:

திருவையாறு – கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை போன்ற இடங்களில் இருந்தும் இத்தலத்துக்குப் பேருந்துகள் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

14 − seven =