- அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : காட்டழகிய சிங்கர்
தல விருட்சம் : வன்னி மரம்
ஊர் : ஸ்ரீரங்கம்
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. திருவானைக்காவில் இருந்து, திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பயத்தைத் தோற்றுவித்தன. யானைகளின் தொல்லையில் இருந்து மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோயிலும் கட்டினான். அப்படி உருவானதே இந்த காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில். இதன் பின்னர் யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டுக்குள் குடியிருந்ததால் பெருமாள் காட்டழகிய சிங்கரானார்.
கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது. இருப்பினும், கி.பி.1297ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து, கோயில் அழகுறத் திகழ வழி ஏற்படுத்தினான். இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு. இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது. திருவரங்கப் பெருநகரில் உபய காவேரி மத்தியில் துயிலும் அரங்கனின் திருக்கோயில் எவ்வளவு மகிமையுடன் திகழ்கிறதோ, அதற்குச் சற்றும் குறைவு இல்லாமல் திகழ்கிறது, அதே உபய காவேரி மத்தியில் ஸ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில்.
திருவரங்கம் பெரிய கோயிலில் தாயார் சந்நதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோயில்.
திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் சந்நதிகள் மிகப் பெருமை வாய்ந்தவை. அதிலும் மேட்டழகிய சிங்கர், திருவரங்கம் திருக்கோயிலிலேயே சந்நதி கொண்டிருப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோரும் தரிசிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், காட்டழகிய சிங்கர் சற்று தொலைவில், கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளதால், பலரும் அறியாத நிலை உள்ளது. கம்பரின் ராமாயண அரங்கேற்றம், மேட்டழகிய சிங்கர் சந்நதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் நடந்ததாம். அரங்கேற்றத்தின்போது அழகியசிங்கர் சிரித்த ஒலி இடியென அனைவருக்கும் கேட்டதாம். அழகிய சிங்கரைப் பாட எண்ணியே கம்பர் தம் ராமாயணத்தில் சிங்கப் பெருமானின் பெருமையையும் பக்தன் பிரகலாதனின் மூலம் நாராயண மந்திரப் பெருமையையும் சொல்ல எண்ணி, இரணியன் வதைப் படலம் என்ற ஒன்றையே வைத்துப் பாடினாராம்.
மூல நூலான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றாலும், கம்பர் இந்த மேட்டழகிய சிங்கருக்காகவே பாடியதுதான் இரணியன் வதைப் படலம் என்பர். காட்டழகிய சிங்கர் கோயில் பெரிய கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது.
கோயில் சிறப்புகள்:
- 2500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் வன்னி மரம் தலமரமாக உள்ளது. ஆதியில் யானைகளின் தொந்தரவு அதிகம் இருந்த இந்த காட்டுப்பகுதியில் இந்த அழகிய நரசிம்மரை பிரதிஷ்டை செய்து வழிபாட்டு இருக்கிறார்கள்.
- ஹிம்ஸம் எனும் கொடுமையைக் களைந்த மகாசக்தி ஸிம்ஹம். எங்கெல்லாம் கொடுமை நடக்கிறதோ அங்கெல்லாம் ஸிம்ஹம் தோன்றி ஹிம்சையை அழித்து நல்லதைக் காப்பாற்றும் என்பது புராணம் கூறும் தகவல். மீன், கூர்மம், வராகம் போன்றவை விலங்கு வடிவெடுத்த திருமாலின் திருவடிவங்கள். இவை தீமையை அழிக்கவென்றேத் தோன்றியவை. ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்கள் தீமையை அகற்றியதோடு, மனிதர்கள் தம்மைப் போலவே ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று வலியுறுத்திய திருவடிவங்கள். ஆனால் நரசிம்மர் மனிதமும் விலங்கும் சேர்ந்த திருவடிவம். அதாவது தீமையை அழிக்கும் பராக்கிரமமும் பக்தனைக் காக்கும் கருணையும் கொண்ட அழகிய வடிவம்.
- திருவரங்கத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீகாட்டழகிய சிங்கர் அற்புதமானவர். ரங்கநாதர் இங்கு வந்து தங்கியபோதே சிங்கரும் இங்கே வந்து தங்கினார் என்று வரலாறு கூறுகிறது.
- கருவறையில் மேற்கு நோக்கி, சுமார் 8 உயரத்தில் பிரமாண்ட வடிவில் தனது இடது மடியில் மகாலக்ஷ்மி தாயாரை அமர்த்தியபடி அமர்ந்துள்ளார். இடது கரம் தாயாரை அணைத்திருக்க, வலது திருக்கரத்தில் அபய முத்திரையைக் காட்டுகிறார் பெருமான். மேலிரு கரங்களும் சங்கு சக்கரத்தை ஏந்தியபடி உள்ளன. வெள்ளியில் அமைந்த பற்களின் அமைப்பு நரசிம்மரின் கருணையை வெளிக்காட்டியபடியே உள்ளன.
- காட்டழகிய சிங்கருக்கு உத்ஸவ மூர்த்தி கிடையாது. இது இந்தக் கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளுக்கு காவலாக வீற்றிருக்கும் தெய்வம் ஆதலால், இவரது உத்ஸவராக அந்தப் பெரிய பெருமாளே (ரங்கநாதப் பெருமாள்) அமைகிறார். காட்டழகிய சிங்கரின் பெருமையினையும் சக்தியையும் இந்த உலகிற்குப் பறைசாற்றும் விதமாக, பிரதி வருடமும் விஜயதசமியன்று நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள்) விசேஷ பல்லக்கில் இந்தக் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். கோயிலின் முன் மண்டபத்தில் பீடத்தில் இருந்த வண்ணம் சேவார்த்திகளுக்கு காட்சி தருகின்றார். விசேஷ திருவாராதனம் (பூஜைகள்) மற்றம் அமுதுபடிகள் (நைவேத்தியம்) ஆகியவை அவருக்கு நடக்கும்.
- ஸ்ரீராமாநுஜரின் சீடரான பிள்ளை லோகாச்சார்யர் இந்த கோயில் சிங்கர் மீது வியந்து ஸ்ரீவசநவ பூஷணம் போன்ற 18 கிரந்தங்களை இயற்றியுள்ளார் என்பது சிறப்பு. 1297-ம் ஆண்டு, ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
- சிவனாருக்கு உகந்த விருட்சங்களில் வன்னி மரத்தையும் சொல்லுவார்கள். இங்கே, காட்டழகிய சிங்கர் திருக்கோயிலின் ஸ்தல விருட்சமாக வன்னிமரம் போற்றப்படுகிறது
திருவிழா:
வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி, ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களிலும் ஸ்ரீரங்கத்திலிருந்து தைலகாப்பு, திருப்பணியாரங்கள் அனுப்பப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6.15 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில்,
ஸ்ரீரங்கம், -620 006.
திருச்சி மாவட்டம்.
போன்:
+91- 431- 243 2246
அமைவிடம்:
ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அடிக்கடி பஸ் உண்டு.