- அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்
தல விருட்சம் : நெல்லி மரம்
ஊர் : கோயம்புத்தூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
ஸ்தல வரலாறு:
இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் விக்ரகங்களையும், சாளகிராமத்தையும் வைகானச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பக்தரிடம் கொடுத்து, இவற்றை வழிபட்டு வா! ஒரு காலகட்டத்தில் இப்பகுதியில் ஓர் ஆஞ்சநேயர் ஆலயம் அமையும். அதில் இந்த விக்ரகங்களை பிரதிஷ்டை செய் எனக் கூறினார்.
சுவாமிகள் அனுகிரகத்தின்படி கோவை பீளமேடு அவினாசி ரோட்டின் அருகே அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கட்டப்பட்டது. அவரது ஆணைப்படி அந்த விக்ரகங்களையும் சாளகிராமத்தையும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. அச்சமயம் நான்கு வருடமாக மழை இல்லாமல், வறட்சியின் பிடியில் கோவை சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அதனால் 48 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜையின்போது, மழைக்காக சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட, மக்களை குளிர்விக்கும் வண்ணம் பெருமழையை பெய்வித்து, நீர்நிலைகள் நிரம்பிவழியும்படி அனுகிரகம் செய்தார் இந்த ஆஞ்சநேயர்.
கோயில் சிறப்புகள்:
- இக்கோவிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
- மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
- இடுப்பில் கத்தியுடன் போர்க்கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார். இதுபோன்ற தோற்றத்தில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம் என்கின்றனர்.
- அபய ஹஸ்தம் கொண்டுள்ளார். எட்டடி உயரத்தில் கோமுகி வடிவில் காணப்படுகிறார். இடது கரத்தில் கதாயுதம் வைத்துள்ளார். வலது உள்ளங்கையில் மஹாலட்சுமி வாசம் செய்கின்றாள்.
- இத்தலத்தில் எந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தாலும் உயிரோட்டமுள்ள ஆஞ்சநேயரின் அருள் பார்வையை உணரமுடிகிறது.
- இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் ஆஞ்சநேயர் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை விடிவில் அருள்பாலித்து வருகிறார்.இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.
- இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது. இடது கையில் கதாயுதம் இரண்டாவது சிறப்பு : மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.
- மேற்கு நோக்கிய முகம் சிறப்பு மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். நாம் இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
- ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவபெருமான் தன் பூத கனம் ஒருவரை ராமாயணத்தில் ஏற்க வைத்த பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
- ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.
திருவிழா:
அனுமத் ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்.
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம்.
போன்:
+91- 94433 34624
அமைவிடம்:
கோயம்புத்தூர் ஜங்ஷனிலிருந்து 6.8 கி.மி தொலைவிலுள்ளது. தண்டு மாரியம்மன் கோவிலிலிருந்து 5.7 கி.மி தொலைவிலுள்ளது. காந்திபுரத்திலிருந்து 4.6 கி.மி தொலைவு. அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கோவை அவினாசி சாலையில் சுகுணா கல்யாணமண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ளது.