November 03 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகர்கோவில்

  1. அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     கிருஷ்ணன்

உற்சவர்   :     ராஜகோபாலசுவாமி

தாயார்     :     ருக்மணி, சத்யபாமா

ஊர்       :     நாகர்கோவில்

மாவட்டம்  :     கன்னியாகுமரி

 

ஸ்தல வரலாறு:

நாகர்கோவில் அருகே வடசேரி என்ற பகுதியில் கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்கு அழகான கிருஷ்ணன் கோயில் இருப்பதால்தான் இந்த ஊரின் பெயர் கிருஷ்ணன் கோயில் என வந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு  இந்தப் பகுதியை ஆண்ட ஆதித்த வர்ம ராஜா, குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் கனவில் வந்த குருவாயூரப்பன், இவ்விடத்தில் கையில் வெண்ணெய்யுடன் குழந்தைக் கண்ணன் வடிவில் தனக்கு கோயில் எழுப்பும்படி சொல்ல, அதன்படி பாலகிருஷ்ணன் சிலையை பிரதிஷ்டை செய்தார் மன்னர். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (வெண்ணெய்க் கண்ணன்) என திருநாமம் சூட்டி வணங்கினர்.

 

கோயில் சிறப்புகள்:

  • குருவாயூர் கிருஷ்ணன் போலவே கருவறையில் மூலவர் பாலகிருஷ்ணனாக குழந்தை வடிவில், தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய்யை வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கிருஷ்ணனுக்கு பாலகிருஷ்ணன், அஜயன், தயாநிதி, ஞானேஸ்வரன், ஜெயந்தன், ஜனார்த்தனன், லட்சுமிகாந்தன் போன்ற பெயர்களும் உண்டு.

 

  • ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளியிருக்கும் உற்சவர் ராஜகோபாலனாக வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்தபோது குழந்தை வடிவில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது வேணுகோபாலன், ராஜகோபாலன் எனவும் அழைக்கப் பெற்றார், அதன்படி  இங்கு மூலவராக கிருஷ்ணரும், உற்சவராக ராஜகோபாலனும் எழுந்தருளியுள்ளனர்.

 

  • காவல்தெய்வம் பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். காவல் தெய்வமான பூதத்தான் சுவாமி இரவு நேரத்தில் கிருஷ்ணன் கோயில் பகுதியை வலம் வந்து காவல் செய்கிறார்.

 

  • மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

 

  • கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்புபூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

 

  • சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது ராஜகோபால சுவாமியே தேரில் எழுந்தருளுவார். வைகுண்ட ஏகாதசியன்றும் இவரே சொர்க்கவாசல் கடக்கிறார்.

 

  • இத்தலத்து கிருஷ்ணர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால், இவரது பெயரில் இந்தக் கோயில் இருக்கும் இடம் கிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 

  • நெல்லி மரம் தல விருட்சமாக உள்ளது. கொன்றை மரத்தடியில் நாகர் சிலைகளும், சிவலிங்கமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் மூலவரின் வலப்புறம்  கன்னி விநாயகர்,  இடப்புறம் சாஸ்தா சந்நிதியும் உள்ளது.  கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளின் நடுவே கோயில் அமைந்திருக்கிறது.

 

  • முக மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் இக்கோயில் கொடிமரம் 1770 -ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28-ஆம் தேதி நிறுவப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • தாந்திரீக ஆகமப்படி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

 

  • இரவு நேர பூஜையின்போது பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறார்கள்.  அதற்கு முன் கிருஷ்ணனுக்கு சார்த்தப்பட்ட வெண்ணெய் மற்றும் நிவேதனப் பாலை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.

 

  • பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி “கேட்டதும் கொடுப்பவன் கிருஷ்ணன்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கிருஷ்ண ஜயந்தி அன்று நள்ளிரவில் மூலவருக்கு கன்றுடன் கூடிய பசு வந்து பால் கறந்து, அப்போதே அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் நடக்கும். அப்போது மூலவர் விசேஷ அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

 

  • மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கிறது. இங்கு கிருஷ்ணரே பிரதானம் என்பதால் கோஷ்ட மூர்த்திகள் இல்லை.

 

  • முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

 

  • வடசேரி கிருஷ்ணன் கோயில். “தென்திசையின் குருவாயூர்’ என்று அழைக்கப்படும் இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

 

  • கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

 

  • கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

 

  • கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவிழா: 

கிருஷ்ண ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில்.

வடசேரி, நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம்.

 

போன்:    

+91 4652 – 274 499.

 

அமைவிடம்:

வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருவனந்தபுரம் செல்லும் ரோட்டில் ஒரு கி.மீ., தூரம். டவுன் பஸ் உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

20 − 4 =