November 01 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆரம்முளா

  1. அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :      திருக்குறளப்பன் (பார்த்தசாரதி)

தாயார்          :      பத்மாசனி

தீர்த்தம்         :      வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி

புராண பெயர்  :      ஆரம்முளா

ஊர்              :      திருவாறன் விளை

மாவட்டம்       :      பந்தனம் திட்டா

மாநிலம்        :      கேரளா

 

ஸ்தல வரலாறு:

மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமிக்குள் பதிந்துவிட்டது. தேரை தூக்கி நிறுத்திவிட்டு மீண்டும் போர் புரிய, கர்ணன் எண்ணும் சமயத்தில் அர்ஜுனன் கர்ணன் மீது அம்பு எய்தியதால், கர்ணன் உயிரிழந்தான். ஆயுதம் ஏதும் இன்றி நின்ற ஒருவரை போரில் வீழ்த்தியது, அர்ஜுனனுக்கு நியாயமாகப் படவில்லை. தர்மயுத்தத்தின்படி அது பெரிய பாவம் என்று எண்ணி அர்ஜுனன் மனம் வருந்தினான். ஒருசமயம் பஞ்ச பாண்டவர்கள் கேரள நாட்டுக்கு பயணம் மேற்கொண்டபோது, ஒவ்வொருவரும் ஒரு பெருமாள் தலத்தைப் புதுப்பித்து வழிபட்டனர். அர்ஜுனன் இத்தலத்தை புதுப்பித்து வழிபட்டதாகவும், தனது ஆயுதங்களை, இத்தலத்தருகே உள்ள வன்னி மரத்தடியில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அர்ஜுனன் இத்தலத்தில் பெருமாள் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய தீர்மானம் செய்து, ஆறு மூங்கில் துண்டுகளால் ஆன மிதவையில் அந்த விக்கிரகத்தைக் கொண்டு வந்ததால், இத்தலம் திரு ஆறன் விளை (6 மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வன்னி மரத்தில் இருந்து உதிரும் காய்களை இத்தல துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து விற்பனை நடைபெறுகிறது. வன்னி மரக்காய்களை வாங்கி தலையைச் சுற்றி எறிந்தால், அர்ஜுனன் அம்பால் எதிரிகளின் அம்புகள் சிதைவது போல், நோய்கள் சிதையும் என்பது ஐதீகம். துலாபாரம் கொடுக்கும் வழக்கம் இத்தலத்தில் இருப்பதால், துலாபாரமாக வன்னி மரக்காய்களை கொடுப்பது நடைபெறுகிறது.

போரில் யுத்த தர்மத்துக்கு மாறாக கர்ணனை கொன்றதால், மன நிம்மதிக்காகவும், போரில் பிற உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும் அர்ஜுனன் இத்தலத்தில் தவம் மேற்கொண்டான். தவத்தில் மகிழ்ந்த பெருமாள், பார்த்தசாரதியாகவே அர்ஜுனனுக்கு காட்சி அளித்தார்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் 84-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • வாமன விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவர் மீது தங்கக் கவசம் சாத்தப்பட்டிருக்கிறது.

 

  • இத்தல இறைவி பத்மாசனி தாயார் என்று அழைக்கப்படுகிறார். கோவில் சுற்றுப் பாதையில் சாஸ்தா, யட்சியம்மன், நாகராசா, பகவதி மற்றும் பரசுராமர் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு வேத வியாசர் தீர்த்தம் மற்றும் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் உள்ள பம்பை நதி தீர்த்தம் ஆகியவை உள்ளன.

 

  • கோயில் மதிலை ஒட்டி பம்பா நதி ஓடுகிறது. பரசுராமருக்கு தனிச்சந்நிதி உண்டு.

 

  • பிரம்மதேவர் இத்தலத்தில் தவம் மேற்கொண்டுள்ளார். பிரம்மதேவர் வைத்திருந்த வேதங்களை, மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். வேதங்களை மீட்டுத் தருமாறு பிரம்மதேவர் திருமாலை வேண்டினார். திருமாலும் வேதங்களைக் காத்து பிரம்மதேவரிடம் அளித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருமாலை நோக்கி பிரம்மதேவர் இத்தலத்தில் தவம் மேற்கொண்டார்.

 

  • திருமாலின் வாமன அவதாரத்தைக் காண இத்தலத்தில் பிரம்மதேவர் தவம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

  • சபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் இத்தலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு, மகரஜோதியின்போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

 

  • இங்கும் குருவாயூர் போல துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. தங்களது கோரிக்கை நிறைவேற இங்கு வன்னிமரக்காய்களை துலாபாரமாக கொடுக்கிறார்கள்.

 

  • இத்தலத்தில் அர்ஜுனனர் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலை உள்ளது. இதற்கு தற்போது தங்கக்கவசம் சாற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது.

 

  • இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

திருவிழா: 

தைமாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,

ஆரமுளா (திருவாறன்விளை ) – 689 533

பந்தனம்திட்டா மாவட்டம்,

கேரளா மாநிலம்

 

போன்:    

+91- 468 – 221 2170.

 

அமைவிடம்:

செங்கணூரிலிருந்து (10கி.மீ) ஆரமுளா வழியாக பந்தனம்திட்டா செல்லும் பஸ்சில் வஞ்சிப்பாடியில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும். கேரளாவின் அனைத்து மாவட்டத்திலிருந்-தும் செங்கணூருக்கு பஸ் வசதி உள்ளது

Share this:

Write a Reply or Comment

eleven − 7 =