October 31 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் எஸ்.கண்ணனூர்

  1. அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :      ஆதிமாரியம்மன்

ஊர்        :      எஸ்.கண்ணனூர்

மாவட்டம் :      திருச்சி

 

ஸ்தல வரலாறு:

சமயபுரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ தொலைவில் உள்ள  எஸ். கண்ணனூரில் கண்டுபிடிக்கப்பட்ட தேவி சமயபுர மாரியம்மனின் மூலச் சிலை  இங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னர்களின் படையினர் தொலைத்து விட்டுச் சென்ற அம்மன் சிலை என்றும், இன்னும் சிலர் இல்லை, அது பூமியில் வைத்துவிட்டு தூக்க  முடியாமல் அங்கேயே ஒரு சிறு வழிபாட்டுத் தலம் அமைத்து விட்டுச் சென்ற விஜயநகர மன்னர்கள் விட்டுச் சென்ற சிலை என்றும் கூறுகிறார்கள்.  ஆனால் எஸ். கண்ணனூரில் அந்த சிலை கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் அந்த அம்மனின் சக்தியைக் காட்டும் விதத்தில் தேவி ஆதி மாரியம்மன் எனும் பெயரில் சிறிய அளவில் இன்னொரு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.  அந்த ஆலயத்தில் உள்ள தேவி மாரியம்மனை தேவி சமயபுரம் மாரியம்மனின் தாயார் என்று கருதுகிறார்கள்.

இந்த ஆலயம் எழுந்த கதையும் விசித்திரமானதுதான். கிராமியக் கதையின்படி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வனப்பிரதேசமாக இருந்த அங்கு இருந்த ஒரு  புதரில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டதாம். அதைக் கேட்ட உள்ளூர் மக்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது அங்கு பெரிய பாம்புப் புற்று இருந்ததாம். அப்போது அங்கிருந்த ஒருவர் உடலில் புகுந்து கொண்ட தேவி மாரியம்மன் அந்த புற்றில் தான் அமர்ந்து உள்ளதாகவும் தன்னை அங்கேயே வழிபடுமாறும் கூறினாளாம்.  அதைக் கேட்ட கிராமவாசிகள் அங்கேயே சிறு சிலையை நிறுவி  அந்த  புற்றை வழிபட்டு வந்துள்ளார்கள்.

 

அது முதல் ஒவ்வொரு வருடமும் அதே இடத்தில் இருந்து அந்த சிலையை ஒரு பல்லக்கில் வைத்து கொள்ளிடம் நதிக்கு எடுத்துச் சென்று நீராடியபின் திரும்பி வந்து வருடாந்திர விழாவை நடத்தினார்கள். இப்படியாக இருக்கையில் ஒருமுறை அந்த பல்லக்கை அவர்கள் எஸ். கண்ணனூரில் இருந்த ஒரு வேப்ப மரத்தின் அடியில் வைத்துவிட்டு இளைப்பாறிய பின்னர்  மீண்டும் கிளம்பியவர்கள் அதை தூக்க முடியாமல் திண்டாடினபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் உடலில் புகுந்து கொண்ட தேவி மாரியம்மன் தானே சமயபுரம் தேவியான மாரியம்மனின் தாயார் என்றும் என்றும் தனக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் உத்தரவு கொடுக்க விஜய நகர மன்னர்கள் எஸ். கண்ணனூரில் ஒரு சிறு ஆலயம் எழுப்பி சமயபுரத்து ஆலயத்தில் இருந்து ஒரு பிடி மண்  எடுத்து வந்து அதையும் சேர்த்து அங்கு தேவி மாரியம்மனின் ஒரு சிலையை பிரதிஷ்டை செய்து அதை கண்ணபுரம் தேவி ஆதி மாரியம்மன் எனும் பெயரில் வழிபடலானார்கள். அது முதல் தேவி சமயபுர மாரியம்மன் ஆலயத்துக்கு சென்றவர்கள் அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  தேவி ஆதி மாரியம்மனையும் வழிபடலானார்கள். இப்படியாக தேவி சமயபுரம் மாரியம்மனும், அவளது தாயாராக கருதப்படும் தேவி ஆதி மாரியம்மனும் தாயும் சேயுமாக வணங்கப்பட்டு வருகின்றார்கள்.

 

மற்றுமொரு கிராமியக் கதையின்படி  ஒருமுறை அங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னரின் போர்வீரர்கள் அந்த கிராமத்தினர் வணங்கி வந்திருந்த சிலையை தம்  நாட்டில் கொண்டு போய் மன்னன் முன்னால் அதை உடைக்க வேண்டும் என்பதற்காக தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். வழியில் அவர்கள் நதி ஒன்றைக் கடக்க வேண்டி இருந்தது. அனைத்து பொருட்களையும், சிலையையும்  நதிக்கரையில் வைத்தப் பின் களைப்பினால் சற்று ஒய்வு எடுத்துவிட்டு அங்கேயே குளித்தப் பின்னர் மீண்டும் புறப்பட்டார்கள். ஆனால் கிளம்பும்போது அந்த சிலையைக் காணவில்லை. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை என்பதினால் வெறுத்துப் போய் ஊருக்கு சென்று விட்டார்கள். படைவீரர்கள் அங்கிருந்து சென்ற சில தினங்களுக்குப் பிறகு அந்த சிலை  வேப்ப மரங்களின் அடியில் இருந்த புதர் ஒன்றில் இருந்ததை அந்த ஊர் ஜனங்கள் கண்டு பிடித்தப் பின்னர் மீண்டும் அதை எடுத்து வைத்து வணங்கத்  துவங்கினார்கள். அது எப்படி அங்கு சென்றது என்பது யாருக்கும் தெரியவில்லை.

 

கோயில் சிறப்புகள்:

  • திருச்சி எஸ்.கண்ணனூரில் அமைந்துள்ளது ஆதிமாரியம்மன் கோவில். இங்கு அம்மன் மூலவராக அமர்ந்துள்ளார். இவரை கண்ணபுரம் மாரியம்மன் என்றும் அழைப்பார்கள். இந்த இடமே சமயபுரத்தாள் பிறந்த தலமாகும்.

 

  • கண்ணனூரில் அம்மன் குடிகொண்டாலும், தன் பிறப்பிடமான சமயபுரத்தின் பெயரால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப்பட்டாள். தற்போது கண்ணனூரில் இருக்கும் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தவறாமல் அம்மன் பிறப்பிடமான ஆதிமாரியம்மன் கோயிலுக்கும் வந்து தரிசனம் செய்கின்றனர்.

 

  • இன்றும் தேவி சமயவரம் மாரியம்மனின் வருடாந்திர திருவிழாவில் உற்சவ மூர்த்தியை தேவி ஆதி மாரியம்மன் ஆலயம்வரை எடுத்து வந்து சற்று தங்கிவிட்டு திரும்பவும் எடுத்துச் செல்வார்களாம். இப்படி செய்வதின் மூலம் ஐதீகமாக தாயும், மகளும் ஒன்று சேர்ந்து  உறவாட வகை செய்வதாக நம்புகின்றார்கள்.

 

  • தேவி சமயபுர மாரியம்மன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  காலத்தில் அங்கு எழுந்தருளி உள்ளாள் என்றும்,  ஆனால் அதற்கு முன்னரே அவளது தாயாராக கருதப்படும் தேவி ஆதி மாரியம்மன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அங்கு எழுந்தருளி உள்ளாள் என்றும் நம்பிக்கை உள்ளது.

 

  • ஆதிமாரியம்மன் நான்கு கரத்தோடு காட்சியளிக்கிறாள். எஸ்.கண்ணனூரை நோக்கி, (தென் திசை) மூலஸ்தானம் அமையப்பெற்று இருப்பது இந்த கோயிலின் தனி சிறப்பாகும்.

 

  • இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வரும் ஆதிசக்தி நாக கன்னியாகவும் காட்சி தருகிறாள்.

 

  • ஆதிமாரியம்மன் கொள்ளிடம் காவிரிக்கு அழைத்து சென்றதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் S.கண்ணனூர் மாரியம்மன் சித்திரை திருவிழாவின் போது சித்திரை முதல் ஞாயிறு அன்று சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலுக்கு அம்மன் அழைத்து வரப்பட்டு தங்கி விட்டு செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.

 

  • திருச்சி அருகே உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். தனது பக்தர்களுக்கு சமயம் அறிந்து உதவுவதால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள். இவ்விடத்தை எஸ்.கண்ணனூர் என்று அழைப்பர்.

 

திருவிழா: 

இங்கு ஆண்டுதோறும் தைமாதம் பூச்சொரிதல் விழாவும், மாசிதிருவிழாவும், விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில்,

எஸ்.கண்ணனூர்,

திருச்சி மாவட்டம்.

 

அமைவிடம்:

சமயபுரத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவில் எஸ்.கண்ணனூர் இருக்கிறது. எஸ்.கண்ணனூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஆதிமாரியம்மன் கோயில் உள்ளது.

 

 

Share this:

Write a Reply or Comment

5 × five =