October 27 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முக்கீச்சுரம்

  1. அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,

அம்மன்         :     காந்திமதியம்மை.

தல விருட்சம்   :     வில்வம்.

தீர்த்தம்         :     சிவதீர்த்தம், நாக தீர்த்தம்.

புராண பெயர்    :     முக்கீச்சுரம்

ஊர்             :     உறையூர்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்க  கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது.

யானையை அடக்கிய கோழி யானை அளவு எதிரியின் பலம் இருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் எதிரியை வென்றிடலாம்

 

கோயில் சிறப்புகள்:

  • இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

 

  • தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைவண்ணம் ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்குக் காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு.

 

  • ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.

 

  • உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது. சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.

 

  • ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோவிலில் கொடுத்த திருநீறை அணியாமல் அலட்சியம் செய்ததால் மறுபிறவியில் அவன் பன்றியாகப் பிறந்து சேற்றில் உழன்றானாம். தன் முந்தைய பிறவித் தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடிப் பாவ விமோசனம் பெற்றான் என்கிறது புராணம்.

 

  • இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

 

  • இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். “காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும்” காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார்.

 

  • உதங்க முனிவரின் சந்நிதி இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற ஆவுடையார் மீது தான்தோன்றீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். மூலமூர்த்தி மிகவும் சிறிய சிவலிங்கத் திருமேனி. சுயம்பு மூர்த்தியாகத் திகழும் இத் திருவுரு உள்ளங்கையளவே உள்ளது. உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் “யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்” உள்ளது.

 

  • இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள்.

 

  • திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள்ளன. உறையூர்க் கோவிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை என்பதுபோல, கருவறையின் வெளிபக்கச் சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன. சுற்றியுள்ள தூண்களில் பலவகையான சிற்பங்கள் உள்ளன.

 

  • பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

 

  • யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.

 

  • புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். “தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனார்

 

  • உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். மற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு உண்டு:

 

  • தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட கோயில்.

 

திருவிழா: 

சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்,

உறையூர்-620 003.

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91- 431-276 8546, 94439-19091, 97918 06457

 

அமைவிடம்:

திருச்சி ஜங்ஷன் மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து உறையூர் செல்ல பஸ்கள் உள்ளன. கடைவீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.

 

Share this:

Write a Reply or Comment

thirteen + thirteen =