October 25 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உய்யக்கொண்டான் மலை

  1. அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     உஜ்ஜீவநாதர்

அம்மன்         :     அஞ்சனாட்சி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு என ஐந்து தீர்த்தங்கள்.

புராண பெயர்    :     கற்குடி, உய்யக்கொண்டான் திருமலை

ஊர்             :     உய்யக்கொண்டான் மலை

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

மிருகண்ட முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார்.

மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும்போது, மிருகண்ட முனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில்தான் மார்க்கண்டேயனுக்கு இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் காட்சி கொடுத்து, அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.

 

இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை “மூதேவி’ என்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே செயல்கள் நடக்காது என்பார்கள். இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். மேரு (மலை) வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு. இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. அதுபோல, உய்யக்கொண்டான் திருமலையிலும் ஜேஷ்டாதேவி இருக்கிறாள். ஆனால் இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள்.

ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது. இவரை “மாடன்’ என்கிறார்கள். மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம். மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள். இவளை வாக்தேவதை (சேடி) என்கிறார்கள். ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள். அவள் தனது சேடியான (பணிப்பெண்) வாக்தேவதையையும் அழைத்து வந்திருக்கிறாள்.

 

கோயில் சிறப்புகள்:

  • தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான்மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது.

 

  • இறைவன் கல்லில் – மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.

 

  • மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி “உஜ்ஜீவநாதர்’ எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் “கற்பகநாதர்’ என்றும் இவருக்கு பெயர் உண்டு

 

  • தேவி அஞ்சனாட்சி என வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகை எனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது.

 

  • குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாழில் வழியே உள்ளே நுழைந்தால், இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்துக்கு எதிரே, ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன. குன்றின் பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம்.

 

  • குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5 பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. மூன்று வாயில்களைக் கொண்ட இவ்வாலத்தின் இரண்டு வாயில்கள் தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. குன்றின் மேலுள்ள வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதில்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது.

 

  • கொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காக்க, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது.

 

  • படிகள் ஏறி உட்சென்றால், முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. எனினும், அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு, இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால், புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

 

  • புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.

 

  • அம்பிகைச் சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது.

 

  • மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது.

 

  • நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜ்யேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜ்யேஷ்டாதேவியை தரிசித்தால், விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள்.

 

  • ராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன், இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான்.

 

  • இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

 

  • தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கற்குடி இறைவன் உஜ்ஜீவனநாதரைக் கண்ணாரக் கண்டதைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தில் இத்தல இறைவனை பலவாறு புகழந்து பாடியுள்ளார்.

 

  • இத்தலத்தில்தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார்

 

  • மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, “உயிர்கொண்டார்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.

 

  • சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார். பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.

 

 

திருவிழா: 

பங்குனியில் பிரம்மோற்ஸவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில்,

திருக்கற்குடி,

உய்யக்கொண்டான் மலை – 620 102

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91-4364 223 207 , 94431 50332, 94436 50493

 

அமைவிடம்:

திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் உய்யக்கொண்டான் திருமலை உள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.

Share this:

Write a Reply or Comment

nineteen − ten =