அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு
மூலவர் : சுப்பிரமணியசுவாமி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சரவணபொய்கை
ஊர் : குன்றத்தூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு:
திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற முருகப் பெருமான், உக்கிரமாக இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். செல்லும் வழியில் ஓரிடத்தில் சிவபூஜை செய்ய எண்ணினார். அந்த இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்தார். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தார். அந்தக் குன்றில் சிறிது நேரம் அமர்ந்து சிவபெருமானை வேண்டி, தியானம் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சிபுரிந்த குலோத்துங்க சோழன், இக்குன்றின் மீது முருகப் பெருமானுக்கு கோயில் எழுப்பினார். முருகப் பெருமானால் பூஜிக்கப்பட்ட சிவபெருமான், மலையடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் தனி கோயில் மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தப் பெருமானால் வழிபடப்பட்டவர் என்பதால் சிவபெருமானுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
- இதிகாசத் தகவல்களின்படி முருகப் பெருமான் திருப்போரூரில் இருந்து திருத்தணிக்குப் பயணம் மேற்கொள்ளும்போது இத்தலத்தில் தங்கினார் என்று அறியப்படுகிறது.
- குன்றுடன் கூடிய ஊர் என்பதால், இத்தலத்துக்கு குன்றத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது.
- 84 படிகள் கொண்ட மலைக்கோயிலில் மூலவர் வடக்கு திசையை நோக்கி இருப்பது தனிச்சிறப்பு. சிவாகம முறையில் பூஜைகள் நடைபெறும் இக்கோயிலைப் போற்றி முருகனடியார் பலர் பாடியுள்ளனர். இங்குள்ள சரவணப் பொய்கை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
- திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டுமே வடதிசை நோக்கி அருள்பாலிக்கும் முருகப் பெருமான், இத்தலத்தில் வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். இதனால் இத்தலம் தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது.
- முருகப் பெருமான் சந்நிதியில் இருந்து பார்த்தால், முருகப் பெருமான் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண இயலாது. அதேபோல சந்நிதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகப் பெருமானுடன் வள்ளி அல்லது முருகப் பெருமானுடன் தெய்வானையை மட்டுமே தரிசிக்க முடியும். வள்ளி, தெய்வானை இருவரில் ஒருவரை மட்டுமே முருகப் பெருமானுடன் தரிசிக்க முடியும் என்ற வகையில் சந்நிதி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- முருகப் பெருமான் போலவே சந்நிதி முன்பாக உள்ள துவாரபாலகர்களும் வஜ்ரம், சூலம் வைத்துள்ளனர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியே இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
- முருகப் பெருமானின் சந்நிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை உள்ளனர். கோயில் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நாகர் சந்நிதிகள் உள்ளன.
- இக்கோயில் விமானம் ஷட்கோண அமைப்பில் இருப்பது தனிச்சிறப்பு. முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
- இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் மிகப்பெரிய கவிஞராக இருந்தார். அமைச்சர் பதவியைத் துறந்த பிறகு, பெரிய புராணத்தை எழுதினார். குன்றத்தூரில் அவதரித்தவர் என்பதால் இவருக்கு மலையடிவாரத்தில் தனி கோயில் அமைந்துள்ளது. சேக்கிழார் குருபூஜையின்போது, மலைக்கோயிலில் இருந்து முருகப் பெருமான் கீழே இறங்கி வந்து சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கும். சேக்கிழாரின் இளைய சகோதரர் பாலராவாயர் தனது வீட்டுக்கு அருகில் தோண்டிய தண்ணீர் தொட்டி, தற்போது பாலராவாயர் குளம் என்று அழைக்கப்படுகிறது.
- அரச மரத்தின் கிளைகளில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் கட்டியதன் வாயிலாக குழந்தை வரம் கிடைத்துள்ளது என்பது பலருக்கும் அனுபவமாக உள்ளது.
- இங்குள்ள வில்வ மரத்தடியில் வில்வ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம்.
- இத்தலத்தில் முருகன் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் வடக்கு திசை நோக்கியவாறு தமது திருமுக மண்டலத்தை வைத்துள்ள திருத்தலம் தமிழக அளவில் குன்றத்தூர் மட்டும்தான் என்பது ஆச்சரியமானது.
- அசுர சக்திகள் என்பவை மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் குறிப்பவை மும்மலங்களையும் சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், அவற்றிலிருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது தத்துவம்.
திருவிழா:
சித்திரை சஷ்டி, வைகாசி விசாக திருவிழா, ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப் பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திர விழா உள்ளிட்டவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கந்த சஷ்டி விழா இத்தலத்தில் எட்டு நாட்கள் நடைபெறுகிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழா நாட்களில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபாடு செய்கின்றனர்.
கார்த்திகை தீபமும் இக்கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மலைக்கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகளும் சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திரமும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
குன்றத்தூர், 600069.
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 44 – 2478 0436,93828 89430.
அமைவிடம்:
சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது குன்றத்தூர் திருத்தலம்.