October 21 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பராய்த்துறை

  1. அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)

அம்மன்         :     பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பாள்

தல விருட்சம்   :     பராய் மரம்

தீர்த்தம்         :     அகண்ட காவேரி

புராண பெயர்    :     அகண்ட காவேரி

ஊர்            :     திருப்பராய்த்துறை

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள், தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும், அதனால் இறைவனைத் துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்துகொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான், பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனத்துக்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். இறைவனை அழிக்க முனிவர்கள் மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்தில் இருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று, தோலை ஆடையாக அணிந்துகொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அதை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ, சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக ஆக்கிக்கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்துகொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று, வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்துகொண்டு மமதை அடங்கி, இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து, அவர்களுக்குத் தாருகாவனேஸ்வரராகக் காட்சி அளித்தார். கருவறை அர்த்த மண்டபத்தில், பிச்சாடனர் வேடம் பூண்டு வந்த சிவபெருமானின் உற்சவத் திருமேனி உள்ளது. பிராகாரத்திலும் பிச்சாடனர் உருவச்சிலை இருக்கிறது.

ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல்மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கப் பள்ளி நடைபெறுகிறது. நேரே ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது. முகப்பில், விநாயகர் காட்சி தருகிறார். ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதனுடன் பலிபீடம், நந்தி இரண்டும் சேர்ந்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.

அடுத்து உள்ள கோபுரம் ஐந்து நிலைகளை உடையது. உள்ளே நுழைந்ததும், நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகிறது. உள்சுற்றில், வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், அறுபத்து மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.. பைரவரும் உள்ளார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டிகேசுவரர் சந்நிதி உள்ளது. நடராசர் சந்நிதியும் இங்குள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன் தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

  • பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ‘பராய்த்துறை’ எனப்படுகிறது. இத்தலத்திற்கு ‘தாருகாவனம்’ என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் ‘தாருகா விருக்ஷம்’ எனப்படுகிறது.)

 

  • இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலம்.

 

  • இத்தலத்து இறைவன், ஒரு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரர், பராய்த்துறைநாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன்மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.

 

  • காவிரியின் தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மையான ஒரு கோவிலாகும்.

 

  • இந்த இடத்தில் காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது. இதை திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் ‘பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் திருப்பராய்த்துறை மேவிய செல்வரே’ என்று குறிப்பிடுகிறார்.

 

  • ஒரு காலத்தில், பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர் திகழ்ந்ததால், பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் அரிய வகை பராய் மரம். மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் வெளிப்பிராகாரத்தில் உள்ள இத்தல விருட்சம், புற்றுநோயையும் மற்றும் எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

 

  • பராய் மரத்தின் இலையானது சீதபேதி மற்றும் ரத்தபேதியைக் குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் குணமாக்கும். இத்தகைய நோய்களால் பீடிக்கப்பட்டு, குறிப்பாக புற்றுநோயினால் வருந்தும் மக்கள், இத்தல விருட்சத்துக்கு நீரூற்றி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி, வலம் வந்து வணங்கினால் இந்நோய் நிவர்த்தியாகும் அல்லது கட்டுப்படும் எனத் தல வரலாறு தெரிவிக்கிறது.

 

  • புற்றுநோய்க்கு நிவர்த்தித் தலமான திருப்பராய்த்துறையில் சுயம்பு லிங்கமாக உறையும் இறைவன் தாருகாவனேஸ்வரர் மற்றும் இறைவி ஹேமவர்ணாம்பிகையை வழிபட்டுப் பலன் பெற்றவர்கள் பலர்.

 

  • இத்தலம், அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான், ஆறுமுகமும் 12 திருக்கரங்களும் கொண்டு, வள்ளி தெய்வானை அருகில் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். உற்சவரும் இதே அமைப்பில் உள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.

 

  • ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வதை முதல் முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம், இறைவன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி, காவிரிக் கரையில் தீர்த்தம் கொடுத்தருளுவார். (ஐப்பசி கடைசி நாளன்று, காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் ஸ்நானம் செய்வதைக் கடை முழுக்கு என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால், பாவங்கள் நீங்கப்பெறும் என்பது ஐதீகம்.

 

  • மனிதர்களின் வாழ்க்கை முறை இல்லறம், துறவறம் எனும் இருமுறைகளைக் கொண்டது. ஒருவன் இல்லறத்தில் நிலம், செல்வம், பெண் போன்ற சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டும், வறுமை, போட்டி, பொறாமை, பயம் என பற்பல இன்னல்களுக்கு ஆட்பட்டு வருந்தினாலும் முறைப்படி இல்லற தர்மங்களை கடைப்பிடித்தால் மோட்சம் பெறலாம்.

 

  • புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.

 

  • கருவறைக்கு பின்புறம் கோஷ்டத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

 

  • தெட்சிணாமூர்த்தி தனி மண்டபம் போன்ற அமைப்பில் கோஷ்டத்தில் காட்சி தருகிறார்.

 

  • ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்றகோலத்தில் இருக்கிறார். இவரை “பரளி விநாயகர்’ என்கின்றனர். பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது.

 

  • வேத நெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறைவிளங்க பூத பரம்பரை பொலிய, புனித வாய் மலர்ந்தருளிய  திருஞான சம்பந்தப் பெருமானும், அலகில் கலைத்துறை  தழைப்ப, அருந்தவத்தோர் நெறிவாழ, உலகில் வரும்  இருள் நீக்கி ஒளி விளங்கு கதர்போல் மலரும் திருநாவுக்கரசர் பெருமானும், தேன்கலந்து பால்கலந்து  செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து  உவட்டாமல் இனிக்கும் ஒருவாசகமாம், திரு வாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானும், வாக்கிற் கோர் அருணகிரியும், பாரனைத்தும் பொய் யடா, மெய்ப்பொருளாம் பரம்பொருளை ஒன்றையே நாடுக!  என்று இறைவனை நாடிய பட்டினத்தாரும் பாராய்த்துறை மேவிய பரமனின் பெருமையினைப் பாடிச் சிறப்பித்துள்ள திருத்தலம் “திருப்பராய்த் துறை”  என்னும் திவ்ய ஸ்தலம் ஆகும்.

 

 

திருவிழா: 

வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் முதல் துலா முழுக்கு விழா.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்,

திருப்பராய்த்துறை,

திருச்சி. 639 115.

 

போன்:    

+91- 99408 43571

 

அமைவிடம்

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் முக்கொம்பு அணை அமைந்துள்ளது. அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பராய்த்துறை இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

11 − 10 =