October 18 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அய்யர் மலை

  1. அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர் ), ரத்தினகீரிசர்

அம்மன்         :     கரும்பார்குழலி

தல விருட்சம்   :     வேம்பு

தீர்த்தம்         :     காவேரித்தீர்த்தம்

புராண பெயர்    :     திருவாட்போக்கி, ஐயர்மலை,  ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி

ஊர்             :     அய்யர் மலை

மாவட்டம்       :     கரூர்

 

ஸ்தல வரலாறு:

இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்ப பத்திரா நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்திய முனிவரைத்  தன்னுடன் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு நாரதர் வேண்டவே , இருவருமாக புறப்பட்டு, காஷ்மீரம்,பிரபாசம்,வில்வாரண்யம்,கேதாரம்,காசி, பிரயாகை,அவந்தி,கோமதி ஆகிய தலங்களைத் தரிசித்தனர். பின்னர் குசல க்ஷேத்திரத்தைத் தரிசிக்க வேண்டி நாரதர் அகத்தியரிடம் விடை பெற்றுச் சென்றார். பின்னர்  பல சிவக்ஷேத்திரங்களையும் தரிசித்து விட்டு , விந்திய பர்வதத்தில் ஒரு பிரேதத்தைக்கண்டு அதன் வரலாறை அறிந்து கருணை கொண்டவராய், நற்கதி உண்டாக்க வேண்டும் என்று அப்பிரேதத்துடன் அகத்திய முனிவர் கடம்ப வனம் அடைந்தார். அங்குக் காவிரி நீரால் அதன் மீது தெளித்தவுடன், அப்பிரேதம் திவ்விய சரீரம் பெற்று, முனிவரை வணங்கிவிட்டுக் கடம்பவன நாதரையும் அம்பிகையையும் துதித்துப் பின்னர் விமானமேறிக் கயிலாயத்தை அடைந்தது.

கடம்ப வனத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபிரானை  அகத்தியர் இடைவிடாமல்  சூரிய அஸ்தமனத்திலிருந்து பூஜை செய்து வந்தார். மறு நாள் காலை உதயத்தின்போது அவருக்கு அருள் செய்யும்பொருட்டு அவர் முன் காட்சி அளித்தார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த முனிவர் பெருமானைப் பலவாறு தோத்திரம் செய்தார். பிறகு இரத்தினகிரியை அடைந்து, மேற்புறத்தில் தனது பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி, கங்கை முதலிய எல்லாத் தீர்த்தங்களையும் அதில் ஆவாகனம் செய்தார். அதில் தானும் ஸ்நானம் செய்துவிட்டு மத்தியான காலத்தில் வேத மந்திரங்களால் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நிவேதனங்கள் செய்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு,    கருணைக் கடலே, சர்வலோக நாயகா, இரத்தின கிரீசனே, உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம். என்று துதித்தார். அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் சுவாமி அவருக்குக் காட்சி அளித்தவுடன், முனிவர் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, வேத ரகசியமான ஸ்ரீ  பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை அடியேனுக்கு உபதேசித்து அருள வேண்டும். என்று பிரார்த்தனை செய்தார்.  அராளகேசி அம்பிகையோடு சர்வாலங்கார சுந்தரராகக் காட்சி அளித்த பெருமான், அகஸ்தியரின் சிரத்தின் மீது தனது திருக் கரங்களை வைத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளினார். அன்று முதல் அகத்தியர் ஜீவன் முக்தரானார்.

 

ரத்தினம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி, அதைக் காவிரி நீரால் நிரப்பி அதில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று சொன்னார். வேந்தன் எவ்வளவு முயன்றும் நீர்த்தொட்டியை காவிரி நீரால் நிரப்ப முடியவில்லை. கோபமுற்ற அரசன், அந்தணர் மீது கோபம் கொண்டு தன் வாளை ஓங்கி அந்தணரை வெட்ட முயன்றான். அந்தக் கணமே இறைவன் அவ்வாளைப் போக்கி மன்னன் முன் காட்சி கொடுத்து ரத்தினம் தந்த காரணத்தால் இத்தலம் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றது என்று சொல்வர். மன்னனுக்கு ரத்தினம் கொடுத்து உதவியதால், இறைவன் ரத்தினகிரிநாதர் என்றும், மன்னன் வாளைப் போக்கியதால் வாட்போக்கி நாதர் என்றும் வழங்கப்படுகிறார். இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டுப்பட்ட வடுவைக் காணலாம்.

மலைமேல் உள்ள கோவிலை அடைய சுமார் 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்ல வேண்டும். மேலேறிச் செல்வதற்கு வசதியாக படிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் கி.பி. 1783-ல் அமைக்கப்பட்டவை. ஏறும் வழியில் அங்கங்கே 4 கால் மண்டபங்களும் இருப்பதால், அவ்வப்போது களைப்பாறி மலை ஏறலாம். அடிவாரத்திலுள்ள பிராதன விநாயகரைத் தரிசித்து ஏறத் தொடங்க வேண்டும். அடிவாரத்தில் நால்வர் சந்நிதிகள், அலங்கார வளைவு உள்ளது. படிகள் ஏறத் தொடங்கும்போது ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. அவரையும் வணங்கிவிட்டு மலை ஏறலாம். சுமார் 75 படிகள் ஏறியவுடன், பொன்னிடும் பாறை என்ற சந்நிதி உள்ளது. 750 படிகளைத் தாண்டிய பின்பு உகந்தாம் படி வருகிறது. இங்கு விநாயகர் சந்நிதியும், கிழக்கு நோக்கியுள்ள அம்பாள் சுரும்பார்குழலி சந்நிதியும் உள்ளன. அவற்றை வலமாக வந்து மேலேறிச் சென்றால் வாட்போக்கிநாதர் சந்நிதியை அடையலாம்.

கோயிலுக்குள் நுழையும்போது நம்மை முதலில் வரவேற்பது தட்சிணாமூர்த்தி சந்நிதிதான். தரிசித்து உள்ளே நுழைந்தால், மேற்கு நோக்கி உள்ள ரத்தினகிரிநாதர் தரிசனம் கிட்டுகிறது. சிவராத்திரி நாட்களில் அல்லது முன்பின் நாட்களில், சூரிய ஒளி சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது. கோயில் உள்ளே நடராஜர், சிவகாமி சந்நிதிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், வைரப்பெருமாள் சந்நிதியும் உள்ளன. இத்தல இறைவன் ரத்தினகிரீஸ்வரருக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி கிழக்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர்.

 

  • மூலவர் அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் (திருவாட்போக்கி – சிவபெருமான்) சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஈசனுக்கு மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்ற திருப்பெயர்களும் உண்டு.

 

  • ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக் கோவிலும், அதன் பிராகாரங்களும் பிரணவ வடிவில் அமைந்திருப்பதால், இத்தலத்துக்கு சிவாயமலை என்ற பெயரும் உண்டு.

 

  • தலவிருட்சம் வேப்ப மரம். இந்திரனால் உண்டாக்கப்பட்ட சிறப்புடையது.

 

  • இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.

 

  • கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், திருகடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருவாட்போக்கி (ரத்தினகிரி) தலத்தில் உள்ள ரத்தினகிரிநாதரை பகலில் தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. இங்கு அகத்தியர் உச்சிக்கால வழிபாடு (மத்தியான தரிசனம்) பெற்றபடியால், இங்கே உச்சிக்கால வழிபாடு சிறந்தது என்பர்.

 

  • ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் நடந்த போரில் வாயுதேவன் மேரு மலையிலிருந்து பெயர்த்து எடுத்த ஒரு முடியே இத்தலம்.

 

  • இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம், இறைவன் ஆணையில் எரிந்துபோனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச் செய்தி. “காகம் அணுகாமலை” என்பர். இதை உறுதிப்படுத்துவதுபோல், இந்த மலையின் உச்சியில் காகம் பறப்பதில்லை.

 

  • 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே இடி பூஜை தடைபெறுகிறது. ஆயினும் ஆலயத்துக்கோ, அதிலுள்ள சிலா மூர்த்தங்களுக்கோ எந்தவொரு பாதகமும் ஏற்படுவதில்லை.

 

  • இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான்.

 

  • இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

 

  • திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஓங்காது நாள் போக்கி நிற்கும் நவை உடையார் நாட அரிது ஆம் வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே” என்று போற்றி உள்ளார்.

 

  • சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.

 

திருவிழா: 

சித்திரைத் திருவிழா – 15 நாட்கள் கார்த்திகை சோமாவாரம் 1017 படிகளில் பக்தர்கள் புரண்டே மேலேறி மலைக்கோயிலுக்கு வருவது சிறப்பு

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில்,

அய்யர் மலை – வாட்போக்கி,

குளித்தலை, சிவாயம் அஞ்சல்-639 120,

கரூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4323-245 522

 

அமைவிடம்:

கரூர் – திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அய்யர் மலை உள்ளது. நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

four × two =