October 17 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிறுவாபுரி

  1. அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     பாலசுப்பிரமணியர்

ஊர்       :     சிறுவாபுரி, சின்னம்பேடு

மாவட்டம்  :     திருவள்ளூர்

 

ஸ்தல வரலாறு:

இலங்கையில் ராவணனை வீழ்த்திய ராமபிரான், வெற்றிக் களிப்புடன் அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் கண்டருளினார். அச்சம்பவத்துக்குப் பிறகு அவரது கர்ப்பிணி மனைவி சீதா பிராட்டி மீது ஊரார் பழி சுமத்தினர். இதில் மிகவும் வருத்தமடைந்த ராமபிரான், அவரை காட்டுக்கு அனுப்பி வைத்தார். காட்டில் வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்த சீதா பிராட்டிக்கு லவன், குசன் ஆகிய ஆண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வந்தனர். மற்றொரு சமயம் அசுவமேத யாகம் செய்ய ராமபிரான் எண்ணினார். இதற்காக யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட, அது வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு அருகில் வந்து நின்றது. குதிரையைக் கண்ட லவனும் குசனும், அதை கட்டிப் போட்டனர்.

இதை அறிந்து குதிரையை மீட்டுச் செல்ல வந்த ஆஞ்சநேயரை லவகுசர்கள் கட்டிப் போட்டனர். பின்னர் வந்த லட்சுமணரால் சிறுவர்களை வீழ்த்த இயலவில்லை. அவரையும் லவகுசர்கள் கட்டிப் போட்டனர். பிறகு ராமபிரானே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட்டார். இவ்வாறு சிறுவர்கள் இருவரும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் செய்தியை திருப்புகழ் மூலம் அறிய முடிகிறது. ‘சிறுவராகி இருவர் கரிபதாகி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதான நகர்’ என்ற திருப்புகழ் இந்தச் செய்தியை விரிவாக பதிவு செய்துள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • கோயிலில் உள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணியர், தவிர அனைத்து விக்கிரகங்களும் பச்சைக்கல்லால் (மரகதம்) ஆனவை. கோயிலின் முன்பகுதியில் உயரமான கொடிமரம் உள்ளது. இதன் அருகே உள்ள பச்சை மரகத மயிலின் அழகை வர்ணிக்காத புலவர்களே இருக்கமாட்டார்கள்.

 

  • ராமாயண காலத்தில் குசேலபுரியாக இருந்த இந்த இடமே தற்போது சிறுவாபுரியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

  • நான்கரை அடி உயரத்தில், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிறுவாபுரி முருகப் பெருமானின் முன்வலக்கரம் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறது. பின் வலக்கரம் ஜெபமாலை ஏந்தியும், முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலம் தாங்கியும் உள்ளன.

 

  • மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வேறு எங்கும் காண இயலாது. வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.

 

  • இந்திரன் மற்றும் தேவர்களுக்கு அமுது அளித்து வீடுபேறு கிடைக்க முருகப் பெருமான் அருள்பாலித்த இடமாகவும் சிறுவாபுரி விளங்குகிறது.

 

  • பத்மாசூரனை வீழ்த்தி வதம் செய்த முருகப் பெருமான் வெற்றிக் களிப்புடன் அங்கிருந்து புறப்பட்டார். வரும்வழியில் தங்கி இளைப்பாறிய இடமாக சிறுவாபுரி விளங்குகிறது. அப்படி தங்கியபோது இந்திரன் முதலான தேவர்களுக்கு அமுது அளித்துள்ளார். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, முருகப் பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் இதே இடத்தில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

 

  • சிறுவர் + அம்பு + ஏடு என்பது சின்னம்பேடு என்று ஆனது. அம்பு வைக்கும் கூடு, பேடு என்று அழைக்கப்படும்.

 

  • ராமாயண காலத்தில் ராமபிரானுக்கும் லவ குசனுக்கும் போர் நடந்த இடமாக இவ்விடம் கருதப்படுகிறது.

 

  • லவ-குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபாட்டு உள்ளார்கள்.

 

  • ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள்.

 

  • அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார்.

 

  • இத்தலத்தில் முருகம்மையார் என்பவர் வாழ்ந்து வந்தார். எப்போதும் அவர் முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார். முருக சிந்தனையில் இருந்த அம்மையார் இதை உணரவில்லை. உடனே முருகப் பெருமான் அம்மையாருக்கு காட்சி அருளினார். இதனால் அவரது கை பழையபடி மீண்டும் ஒன்று சேர்ந்தது.

 

  • சிறுவாபுரியின் நுழைவாயிலில் சப்த மாதர் கோயில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில், மேற்கே பெருமாள் கோயில், அதற்குப் பின்னால் விஷ்ணு துர்கை கோயில் உள்ளன. வடக்கு வாயுமூலையில் பாலசுப்பிரமணிய பெருமான் கம்பீரமாக காட்சியருள்கிறார்.

 

  • சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன்

 

  • ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் ‘சொந்த வீடு’ கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது. இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது

 

  • இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

 

திருவிழா: 

தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

சிறுவாபுரி- 601206

திருவள்ளூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 44 2471 2173, 94442 80595, 94441 71529

 

அமைவிடம்:

சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கி.மீ பயணித்த பின்னர், இடதுபுறமாக உள்ள வயல்களைக் கடந்து 3 கி.மீ சென்றால் சிறுவாபுரியை அடையலாம். சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசேலபுரி என்று அழைக்கப்படும் இவ்வூருக்கு சென்னையில் இருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் செல்லலாம்.

Share this:

Write a Reply or Comment

15 − 13 =