October 15 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஈங்கோய்மலை

  1. அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்          :      மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்)

அம்மன்          :      மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி

தல விருட்சம்   :      புளியமரம்

புராண பெயர்    :      திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை

ஊர்              :      ஈங்கோய்மலை

மாவட்டம்       :      திருச்சி

 

ஸ்தல வரலாறு:

சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட பிருகு முனிவர், எப்போது வழிபட்டாலும் சிவபெருமானை மட்டுமே வழிபடுவார்; அருகில் இருக்கும் அம்பாளை வழிபட மாட்டார். பக்தர் வழிபாட்டில் சக்தி வழிபாடும் உண்டு என்பதையும், சக்திக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் பக்தர்களுக்கு உணர்த்த நினைத்த சிவபெருமான், பிருகு முனிவரின் இச்செயலைக் கண்டதும் பார்வதி தேவிக்கு கோபம் வரவழைத்தார். சிவபெருமானின் எண்ணப்படி பார்வதி தேவிக்கு கோபம் வந்தது. உடனே கைலாய மலையை விட்டு பூலோகம் வந்தடைந்த பார்வதி தேவி, திருஈங்கோய்மலையில் அமர்ந்து தவம் மேற்கொண்டார். பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், தனது இடப்பாகத்தை சக்தி கொடுத்துவிடுவதாக இத்தலத்தில் உறுதியளித்தார்.

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி எழுந்தது. வாயு பகவான் தனது பலத்தை, உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக, காற்றை பலமாக வீசச் செய்தார். இதைக் கண்ட ஆதிசேஷன், தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அந்த சமயத்தில் மலையில் இருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம், நீலம் ஆகியன சிதறி விழுந்தன, அவற்றுள் மரகதம் (பச்சைக் கல) விழுந்த இடமே ஈங்கோய் மலை என்பர். பிற மணிகள் விழுந்த இடங்களும் சிவத்தலங்களாக மாறின. வைரம் திருப்பாண்டிக் கொடுமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும், நீலம் பொதிகை மலையிலும் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும் விழுந்தன.

ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் மோதல் வலுப்பெற்ற நிலையில், சிவபெருமான் இம்மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளி, இருவரையும் சமாதானம் செய்தார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால் மரகதாசலேஸ்வரர் என்று பெயர் பெற்றார் சிவபெருமான். ‘திரணத் ஜோதீஸ்வரர்’ என்றும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • கருவறையில் பச்சை நிற கல்லால் ஆனவர் என்பதால் இறைவன் மரகததாசலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அவரது கருவறை வாயிலில் இடது புறம் விநாயகரும் வலது புறம் அர்த்தனாரீஸ்வரரும் உள்ளனர்.

 

  • அம்பிகைக்கு இடப்பாகம் கொடுத்த இடம் இதுவென்றும், அதன் பின்னரே திருசெங்கோட்டில் கோயில் கொண்டார் என்றும் கூறுகின்றனர் அதனால் தான் இங்கு கருவறை வாயிலில் அர்த்தநாரி கோலம் உள்ளது என கூறுகின்றனர்.

 

  • சக்திக்கு தன் இடப்பாகத்தை தர சிவபெருமான் உறுதி அளித்த மலை என்பதால் இம்மலை சக்திமலை என்று அழைக்கப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாக கோயிலின் முன்மண்டபம் மற்றும் மலையில் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் காணப்படுகின்றன.

 

  • லலிதாம்பிகை எனவும், மரகதாம்பிகை எனவும் அழைக்கப்படும் அம்பிகை, கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் உள்ள விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருக்கும் கோயில்கள் மிகக்குறைவு. அவற்றில் ஒன்று திருச்சி மாவட்டம் காவிரி வடகரைத் தலமான ஈங்கோய்மலை.

 

  • கருவறை கோஷ்டத்தில் இரண்டு துர்கை வடிவங்கள் காணப்படுகின்றன. மகிஷாசுரனை வதம்செய்த துர்கையாகவும், சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும் துர்கையாவும் ஒரே இடத்தில் இரண்டு துர்கைகள் இருப்பது அரிது.

 

  • சுமார் 2 மைல் சுற்றளவு கொண்டது திருஈங்கோய்மலை. மலையடிவாரத்திலிருந்து 900 அடி உயரத்தில் (சிறிது சாய்வானது), சுமார் 500 படிகள் முடிவுபெறும் இடத்தில் இக்கோயிலின் ராஜகோபுரம் அமைந்துள்ளது. திருஈங்கோய்மலைக்கு மரகத மலை என்ற பெயரும் உண்டு. (மரகத+அசலம்: மரகதாசலம்), (மரகதம்: பச்சை, அசலம்} மலை). தற்போது திருஈங்கோய்மலை திருவிங்கநாதமலை, திருவீங்கிநாதமலை, திருவேங்கிநாதமலை, திருவங்கிநாதமலை எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது.

 

  • திருக்கயிலைச் சிரங்களில் ஒன்றை தன்னகத்தே கொண்டது, தென்கயிலாயம் எனப் புகழ்பெற்று விளங்குவது, பற்பலத் தீர்த்தங்களைப் பெற்று விளங்குவது, புளியமரத்தைத் தல விருட்சமாக உடையதால் திந்திரிணி வனம் எனப் பெயர் கொண்டு விளங்குவது, சுயம்பு சோதி மரகதலிங்கத்தை மூலலிங்க மூர்த்தியாகப் பெற்றுத் திகழ்வது போன்றவை இக்கோயிலின் சிறப்பாகும்.

 

  • அகத்திய மாமுனிவர் ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு.

 

  • இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

 

  • இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.

 

  • ஒருமுறை இறைவனை காண சுந்தரர் வருகிறார், அப்போது அவரை சிறிது அலைக்கழிக்க எண்ணி இறைவன் புளியமரத்தில் மறைந்து கொள்கிறார், சுந்தரர் பலவாறு வேண்டியும் காட்சி கொடுக்கவில்லை, மாறாக பாடியதற்காக ஒரு பொன் புளியங்காயை அவரிடம் எறிகிறார். இறைவன் புளியமரத்தில் இருப்பதை அறிந்து கொண்ட சுந்தரர். எனக்கு காட்சியளிக்காமல் இடம் கொடுத்த புளியமரம் இனி யாருக்கும் மறைவிடமாக இருத்தல் வேண்டாம் என கூறி சென்றுவிடுகிறார். அது முதல் இத்தலத்தில் புளியமரங்கள் இல்லாது போயிற்று.

 

  • அம்பிகைக்கும் இறைவன் சன்னதிக்கும் இடையில் தண்டாயுதபாணியாக முருகன் தனி சன்னதி கொண்டு உள்ளார்.

 

  • உமாதேவியார், திருமால், பிரம்மன், இந்திரன், இமயன், நவசித்தர்கள், அகத்தியர், சுப்பிரப அரசன் முதலியோர் தங்கிப் பூசித்துப் பேறுபெற்றது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பொற்புளியங்காய் வழங்கியது, அகத்தியர் ஈ வடிவு கொண்டு பூசித்ததால் ஈங்கோய்மலை எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒன்றும், நக்கீரதேவநாயனாரின் திருஈங்கோய்மலை எழுபது என்ற ஒரு சிறுபிரபந்தம் பெற்றது, ஆண்டுதோறும் மாசி மாத சிவராத்திரி  விடியற்காலையில் உதயமாகும் சூரியனின் ஒளி மரகதாசலநாதர் மீது விழுந்து பிரகாசிக்கும் பெருமை உடையது போன்றவை இத்திருக்கோயிலின் பெருமையாக விளங்குகின்றன.

 

  • மாசி சிவராத்திரியின் போது மூன்று நாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “நீச்சு அறியாது ஆங்கு ஓய் மலைப் பிறவி ஆர்கலிக்கு ஓரு வார் கலமாம் ஈங்கோய் மலை வாழ் இலஞ்சியமே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா:

தைப்பூச தினத்தில் சுவாமி, அம்பாள் இருவரும் காவிரிக்கரையில் எழுந்தருள்வது வழக்கம். ஆடிக் கிருத்திகை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். பங்குனி பிரம்மோற்சவம், மாசிமகம் உற்சவம் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வருவது உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்,

ஈங்கோய்மலை – 621 209.

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91- 4326 – 2627 44, 94439 – 50031

 

அமைவிடம்:

திருச்சியில் இருந்து 43 கி.மீ., தூரத்திலுள்ள முசிறி சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள இவ்வூருக்கு டவுன்பஸ்சில் செல்லலாம்.

 

Share this:

Write a Reply or Comment

eighteen + one =