October 12 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவாசி

  1. அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)

அம்மன்         :     பாலாம்பிகை

தல விருட்சம்   :     வன்னி

தீர்த்தம்         :     அன்னமாம்பொய்கை, சிலம்பாறு

புராண பெயர்    :     திருப்பாச்சிலாச்சிரமம்

ஊர்             :     திருவாசி

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் திருக்கயிலை மலையில் சிவபெருமானோடு உமா தேவியார் எழுந்தருளி இருந்தார். அப்போது அம்மையார் எழுந்து இறைவனை வணங்கி நின்று, ‘சுவாமி! தாங்கள் அருளிய இருபத்தெட்டுச் சிவாகமங்களில் கூறியவற்றுள், தங்களுக்கு விருப்பமான செயல் ஒன்றை எனக்கு அருள வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பித்தாள். உடனே சிவபெருமான் ‘உமையே! நாம் மிகவும் விரும்புவது பூசனையே. அதுவும் சோழ நாட்டுக் காவிரியின் வடகரையில் தேவர்கள், முனிவர்கள் தவம்புரியும் திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தில் நம்மை ஒருவர் சிவாகம விதிப்படி பூஜித்து வழிபட்டால், அவர்களது எண்ணங்கள் யாவும் கைகூடும்’ என்று அருள் புரிந்தார்.

உமாதேவியார் சிவபெருமானிடம் தான் சிவபூஜை செய்ய விரும்புவதை தெரிவித்து விடைபெற்றுக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமத்திற்கு எழுந்தருளினார். உமாதேவியார் தம் பணிப்பெண்களுடன் திருப்பாச்சிலாச்சிராமம் அடைந்து, அங்குள்ள பொய்கையில் நீராடி நியமத்துடன், பிறர் அறியா வண்ணம் அன்னப்பறவை வடிவம் தாங்கிச் சிவபெருமானை ஆகமப்படி பூஜித்து வழிபட்டு வந்தாள். அம்மையாரின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவகணநாதர்களுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளினார். பின்னர் வேண்டியதை கேட்கும்படி அம்பாளிடம் கூறினார். அன்னையும், ‘இறைவா! நான் அன்ன வடிவுடன் இருந்து நீராடிய இங்குள்ள பொய்கை ‘அன்னமாம் பொய்கை’ என்ற திருப்பெயருடன் விளங்க வேண்டும். இதில் நீராடி உம்மை வழிபடுபவர்களுக்கு, பிணிகள் யாவும் நீங்கி அவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறல் வேண்டும்’ என்றாள். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார்.

திருச்சிராப்பள்ளி வடக்கே உள்ளது கொல்லிமலை. அம்மலைத் தொடரைத் தனக்கு எல்லையாகக் கொண்டவன் கொல்லிமழவன் என்ற சிற்றரசன். அவன் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற சிவத்தலத்தை தனது இருக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். இவ்வரசன் சைவ மரபினன் ஆவான். இவனுக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அக்கன்னி இளங்கொழுந்து போல் ஒளிவீசும் அழகு நிறைந்த மேனியவள். அவளை முயலகன் என்னும் பெருநோய் பற்றி வருத்தியது. தன் பெண்ணின் துன்பத்தைக் கண்ட கொல்லிமழவன் மிகக்கவலை அடைந்தான். அரசன் தன் மகளுக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், அவளுக்கு வந்த நோய் அகலவில்லை. நோயைத் தீர்க்க முடியாதவனாய், தன் மகளைத் திருக்கோவிலுள்ளே கொண்டுபோய் மணிகண்டேஸ்வரர் சன்னிதி முன்பாக கிடத்தினான்.

அப்போது திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருப்பாச்சிலாச்சிராமத்தையும் தரிசிக்க அப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அதை அறிந்த கொல்லிமழவன், தன் மகளை ஆலயத்திலேயே விட்டு விட்டு விரைந்து வெளியே வந்து, தனது குடிமக்களுக்கு நகரத்தை மகர தோரணங்களால் அலங்கரிக்கவும், நிறைகுடங்களையும், மணிகளையும் ஏந்தி நிற்கவும் உத்தரவிட்டான். சம்பந்தருடைய முத்துச் சிவிகைக்கு முன்பு சென்று வீழ்ந்து வணங்கினான். ஞானசம்பந்தர் அவனுக்கு அருள்செய்தார். மழவன் மன மகிழ்ச்சியோடு திருஞானசம்பந்தரை, திருப்பாச்சிலாசிராமத்தின் திருவீதியின் வழியே அழைத்துக் கொண்டு ஆலயம் வந்தான். அங்கே உணர்விழந்து கிடந்த பெண்ணைப் பார்த்து ‘என்ன இது?’ என்று திருஞானசம்பந்தர் வினவினார்.

கொல்லிமழவன் சம்பந்தரை வணங்கி, ‘இவள் என்னுடைய மகள். இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பிடித்துள்ளது. அந்நோய் எவ்வித சிகிச்சையினாலும் தீரவில்லை. அதனால் இவளைச் சிவசன்னிதி முன்னே கிடத்தியுள்ளேன்’ என்றான்.

அதனைக்கேட்ட சம்பந்தர் அருள்கூர்ந்து, அந்நிலையில் நின்றபடியே சிவபெருமானை நோக்கி, ‘துணிவளர் திங்கள்’ என்ற திருப்பதிகம் தொடங்கிப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ‘மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு’ என்று வைத்துப்பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தி அருளி வணங்கினார். உடனே கொல்லிமழவன் மகள், பிணி நீங்கப்பெற்று எழுந்து தந்தை அருகே சென்று நின்றாள். அது கண்ட மழவன் பெருமகிழ்ச்சி கொண்டு, திருஞானசம்பந்தர் திருவடிகளில் தனது மகளுடன் விழுந்து வணங்கினான். பிறகு அனைவருமாக சிவெபருமானை தரிசித்தனர்.

 

சிவத்தல யாத்திரையாக இத்தலம் வந்த சுந்தரர், தம் அடியவர்கள் பொருட்டு இத்தல ஈசனிடம் பொன் கேட்டார். ஈசன் சுந்தரரிடம் விளையாட விரும்பி, பொன்னை உடனே கொடுக்கவில்லை. இதனால் சுந்தரர், கோபத்தில் இறைவனை நோக்கி பதிகம் பாடினார். அப்போது ஈசன் தோன்றி சுந்தரருக்கு பொற்கிழி அளித்து மறைந்தார். இப்போது சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘நாம் கோபத்தில் ஈசனை நோக்கி பதிகம் பாடியும், ஈசன் பொற்கிழி கொடுத்துள்ளாரே! ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ?’ என்று எண்ணினார்.

சுந்தரரின் எண்ணத்தை அறிந்த ஈசன், தம்முடன் மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு, வணிகர்கள் வடிவில் சுந்தரரிடம் சென்றார். பின்னர் அவரிடம் இருந்த பொற்காசுகளை உரசிப் பார்த்து, ‘இந்த பொன் தரமானது தான் என்று உறுதியளித்தாராம். இதனால் தான் இத்தல ஈசனுக்கு ‘மாற்றுரைவரதர் என்று திருநாமம் வந்ததாம்.

 

கோயில் சிறப்புகள்:

  • கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார்.

 

  • கல்லில் தூண் செய்து,அதன் நடுவே ஒரு உருளை ஏற்படுத்தி அந்த உருளை சுழல ,மூன்று பக்கமும் இடைவெளி விட்டு அதனை சுழலும் விதமாக செய்திருப்பது மிகவும் அதிசயம்.

 

  • கருவறை சிவலிங்கப் பெருமானுக்கு சமீவனேசுவரர், பிரமபுரீசுவரர், மாற்றறிவரதீசுவர் ஆகிய திருநாமங்கள் உள்ளன. மாற்றறிவரதீசுவர் என்ற பெயர்தான் உருமாறி மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இங்கு விளங்குகிறது.

 

  • இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது நடனமாடுகின்றார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு.

 

  • அம்பாள் பாலாம்பிகை, இத்தலத்தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள். இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள். இவளது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை.

 

  • அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

 

  • திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் ‘திரு+ பாச்சில்+ ஆச்சிராமம்’ என்ற மூன்று சொற்கள் உள்ளன. ‘திரு’ என்பது தெய்வத்தன்மை, அழகு, செல்வம் ஆகும். ‘பாச்சில்’ என்பது ஊர்ப்பெயர் ஆகும். ‘ஆச்சாரமம்’ என்பது கோவிலின் பெயர். இது ஊர்ப் பெயருடன் வழங்கல் ஆயிற்று.

 

  • இந்த ஆலயத்தில் ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்னும் ஸ்தபன மண்டபம் உள்ளது. அதாவது சுந்தரருக்கு பொற்கிழி கொடுத்த திருத்தலம் இது.

 

  • கர்மவினைகளால் தான், நம்மை நோய்கள் பீடிக்கின்றன. அந்த கர்மவினைகளை அடியோடு களைந்து நம்முடைய தீராத நாட்பட்ட வியாதிகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்த இத்தலம் வந்து வழிபட்டு, சம்பந்தரின் பதிகம் பாடி வழிபட தீராத நோய்களும் அடியோடு நீங்கும்.

 

  • இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

 

  • திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “எஞ்ஞான்றும் ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சிலாச்சிராமம் சேர் அருள் நிலையே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா:

இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்திற்கு வைகாசி மாதம் பௌர்ணமியை முடிவாகக் கொண்டு பெருவிழா நடைபெறும். புனர்பூச நாளில் கொடியேற்றி, பத்தாம் நாளாகிய விசாக நாளில் தீர்த்தவாரியும், சுவாதி நாளில் திருத்தேரும் சிறப்பாக நடைபெறும். ஐந்தாம் நாள் இடப வாகனக் காட்சியும், ஏழாம் நாள் திருக்கல்யாண காட்சியும் நிகழும். 11ஆம் நாள் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா வரும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்,

திருவாசி-621 216.

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91-431 – 6574 972, +91-94436 – 92138.

 

அமைவிடம்:

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் திருவாசி உள்ளது. திருச்சியில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

twenty + 9 =