October 11 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்காக்கரை

  1. அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     காட்கரையப்பன் (அப்பன்)

தாயார்          :     பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி

தீர்த்தம்         :     கபில தீர்த்தம்

புராண பெயர்    :     திருகாட்கரை

ஊர்             :     திருக்காக்கரை

மாவட்டம்       :     எர்ணாகுளம்

மாநிலம்        :     கேரளா

 

ஸ்தல வரலாறு:

மகாபலி சக்கரவர்த்தி மிகுந்த வள்ளல் தன்மை கொண்டவர். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், மிகவும் நல்லவராக இருந்து அரசாட்சி புரிந்து வந்தார். இருப்பினும், தன்னைவிட வள்ளல்தன்மை கொண்டவர் இவ்வுலகில் யாருமில்லை என்ற ஆணவம் அவரிடம் மேலோங்கி இருந்தது. திருமால், மகாபலிக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். அதனால் குள்ள (வாமன) வடிவம் எடுத்து மகாபலியின் முன் நின்றார் திருமால். தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று மகாபலியிடம் கேட்டார். குள்ளமானவருக்கு எதற்காக மூன்றடி நிலம் என்று மகாபலி திருமாலிடம் கேட்கும்போது, வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்தார் குரு சுக்கிராச்சாரியார். அவருக்கு தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவருக்கு இல்லை என்று கூறினால், இதுவரை செய்த தானங்களுக்கு பலன் இருக்காது என்று நினைத்த மகாபலி, நிலம் கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதுவரை குள்ளமாக இருந்த திருமால், இப்போது விஸ்வரூபம் எடுத்தார், ஓரடியால் பூமியையும், மற்றொரு அடியால் வானத்தையும் அளந்த திருமால், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என்று கேட்டார். உடனே மகாபலி தலை வணங்கி, தன் தலையைத் தவிர தன்னிடம் ஏதும் இல்லை என்று கூற, திருமால், அவரை அப்படியே பூமியில் அழுத்தி தன்னுடன் இணைத்துக் கொண்டார். வருடத்துக்கு ஒருமுறை தனது மக்களை சந்திக்க வேண்டும் என்று திருமாலிடம் மகாபலி விண்ணப்பம் வைக்க, அதை ஏற்று அருள்பாலித்தார் திருமால். திருமால் மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நட்சத்திர தினம் ஆகும். இதை நினைவுகூரும் வகையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாபலி இவ்விழாவில் பங்கேற்று தன் நாட்டு மக்களை வாழ்த்துவதாக நம்பிக்கை.

இந்தப் பெருமாளின் பேரெழிலிலும், அருளிலும் வயப்பட்ட யோகி ஒருவர், திருக்காட்கரையப்பன் சந்நதியைத் தன் வாழ்விடமாகக் கொண்டார். இமைப்பொழுதும் பெருமாளை நீங்காது அவருக்கு சேவை செய்தார். அப்போது அந்த ஊரில் ஒரு செல்வந்தனுக்குப் பெருந்துக்கம் ஏற்பட்டது. அவனது வாழைத்தோப்பில் எந்த மரமும் குலை தள்ளாமலேயே அழிந்து மடிந்தது. இதை எண்ணிப் பெரிதும் வருந்திய அவன், காட்கரையப்பனை சரணடைந்தான். பொன்னாலான ஒரு வாழைக் குலையை அவருக்குப் பரிகாரமாக சமர்ப்பித்தான்.

தன் வாழை மரங்கள் இயல்பான வளர்ச்சியடைய வேண்டும் என்று நேர்ந்து கொண்டான். அடுத்த சில நாட்களிலேயே அந்த வாழைமரங்கள் எல்லாம் பெருமகிழ்ச்சியுடன் குலை தள்ளி செல்வந்தனை சந்தோஷப்படுத்தின. தன் குறை தீர்க்குமாறு செல்வந்தன் நேர்ந்துகொண்டதால், அதற்குப் பிறகு விளைந்த வாழைக் குலைகள் ‘நேந்திரம் பழம்’ என்று அழைக்கப்படலாயிற்று. இன்றளவும் கேரளத்தின் பிரதான அடையாளமாக நேந்திரம் பழம் விளங்குகிறது. ஆனால், சில நாட்கள் கழித்து, தான் நேர்ந்து கொண்டு, சமர்ப்பித்த பொன் வாழைக் குலை, கருவறையிலிருந்து காணாமல் போய்விட்டதைக் கண்டு திடுக்கிட்டான் செல்வந்தன். அப்போது அதே சந்நதியில் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருந்த யோகியின் மீது சந்தேகம் விழுந்தது. அவன் உடனே மன்னனுக்குத் தகவல் சொன்னான். விஷயம் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அந்த யோகியை அடித்துத் துன்புறுத்தினர். மன்னனும் கடுமையாக தண்டித்தான்.

இதைக் கண்டு பதைபதைத்தான் பரந்தாமன். தன்னுடைய சந்நதியிலேயே தன் பரம பக்தன் அநியாயமாக தண்டிக்கப்படுவதைக் காண மனம் பொறுக்கவில்லை அவனுக்கு. உடனே தனக்குத் திருமஞ்சனம் செய்த அபிஷேகப் பொருட்கள் தேங்கிக்கிடப்பதை அவர்கள் காணச் செய்தான். அவை வெளியேறாமல் தடுப்பது எது என்று சோதித்தபோது, கருவறை நீர் வெளியேற்றும் வழியை பொன் வாழைக் குலை அடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கண்டு செல்வந்தனும், மக்களும், மன்னனும் வெட்கித் தலைகுனிந்தார்கள். தாங்கள் யோசியாமல் செய்த அபவாதத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறு யோகியிடம் வேண்டிக் கொண்டார்கள்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் 78-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்று.

 

  • அரக்க மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை, திருமால் வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடமாக இருப்பதால் இத்தலம் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

 

  • இந்த ஆலய இறைவனை போற்றி, நம்மாழ்வார் 10 பாசுரங்கள் பாடியிருக்கிறார்

 

  • தமிழர்களின் வழிபாட்டுத் தலமாக இத்தலம் இருந்துள்ளது. கிபி 9 முதல் 12-ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் இத்தலத்தை பராமரித்துள்ளனர். 1825-ம் ஆண்டுக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்துக் கொண்டது.

 

  • புஷ்கல விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்கரையப்பன் பெருமாள் அருள்பாலிக்கிறார். வாமன அவதாரப் பெருமாளாக இருப்பதால் இவருக்கு கதாயுதம் கிடையாது. பெருஞ்செல்வ நாயகி தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை.

 

  • கோயில் நுழைவாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் / சிம்மாசனம் உள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். முகப்பு மண்டபத்தில் திருமால் வாமனராக குள்ள வடிவம் எடுத்த காட்சி மரச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்‌ஷி, கோபால கிருஷ்ணர், நாகர் ஆகியோர் தனி சந்நிதியில் உள்ளனர்.

 

  • காட்கரையப்பன் கொலுவிருக்கும் கோயிலுக்கு முன்னால் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. திருமாலால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி பிரதிஷ்டை செய்து ஸ்தாபித்த கோயில் இது என்கிறார்கள். அதனாலேயே இந்த சிவன் கோயில், பக்கத்தில் உள்ள காட்கரையப்பன் கோயிலை விடவும் தொன்மையானது என்றும் சொல்கிறார்கள்.

 

  • கேரளாவின் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில், திருக்கோவிலூர் திருவிக்கிரமன் கோயில் போன்றவை ஓணத்தின் பெருமை கூறும் ஆலயங்கள். உலகளந்த வாமனரைப் போற்றும் ஆலயங்கள்.

 

  • இந்தக் கோவிலைப் பரசுராமர் ஸ்தாபித்தார் என்பது நம்பிக்கை.

 

  • மகாபலி சிறந்த சிவபக்தன். அவன் வழிபாடு செய்ததாகச் சொல்லப்படும் லிங்கம் ஒன்றும் இங்கே இருக்கின்றது. சைவர், வைணவர் இருவரும் இந்தத் தலத்தில் வந்து வழிபடுகின்றனர்.

 

  • இந்தக் கோவிலிலே வாமனருக்குக் கருவறை தனியாக உள்ளது. சிவபெருமானுக்குக் கருவறை தனியாக உள்ளது. 5 கால பூஜைகள் நடைபெறுகின்றன. வாமனரை வழிபடுவதற்கு முன்பு சிவபெருமானை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.

 

திருவிழா:

ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது. இப்போது பத்து நாள் திருவிழா நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில்,

திருக்காக்கரை-683 028

எர்ணாகுளம் மாவட்டம்

கேரளா மாநிலம்

 

போன்:    

+91 99952 16368, 97475 36161

 

அமைவிடம்:

எர்ணாகுளத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்காக்கரை அமைந்துள்ளது. அடிக்கடி பஸ் வசதி உள்ளது. கேரளாவில்- எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் எடப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். த்ரிக்காக்கரா என்றால், கேரள மக்களுக்கு சுலபமாகப் புரிகிறது.

 

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை

ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிர் உண்டான்

சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்

கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே.

 

நம்மாழ்வார் மங்களாசாசனம்

Share this:

Write a Reply or Comment

4 + 5 =