- அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : நித்யகல்யாணி, மேகலாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
புராண பெயர் : திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை
ஊர் : திருப்பாற்றுறை
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு:
சோழமன்னன் ஒருவன் கொள்ளிட ஆற்றின் தென்கரையில் வரும்போது, காடாக இருந்த இவ்வூரில், புதர் ஒன்றிலிருந்து வெண்மையான பறவை ஒன்று பறந்து சென்றதைப் பார்த்தான். அப்பறவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், வினோதமாகவும், வசீகரமாகவும் இருந்தது. பறவை வெளிப்பட்ட இடத்தில் அவன் மனம் ஈர்க்கப்பட்டு அதன் அருகில் சென்றான். நறுமணம் கமழ்ந்தது. காவல்காரர்களை விட்டு அவ்விடத்தைத் தோண்டச் செய்தான். புதையுண்டிருந்த சுவாமியின் சிரசில் மண்வெட்டி பட்டு, அதிலிருந்து பால்பெருகி ஒடுவதைக் கண்ட மன்னவன் மனம் பதைத்து, அச்சிவலிங்க மூர்த்திக்கு அங்கேயே திருக்கோயில் கட்டி வழிபாடுகள் பல சிறப்புறச் செய்தான். . பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி “பாற்றுறை நாதர்’ என்றும், தலம் “பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.
இவ்வாலயம் முதற்பராந்தகச் சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக இத்திருக்கோயிலின் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகிறது.
கோயில் சிறப்புகள்:
- இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- மார்க்கண்டேய முனிவர் இப்பகுதிக்கு வந்தபோது சிவபூஜை செய்வதற்கு பால் கிடைக்காமல் வருந்தியபோது, சிவபெருமான் அங்கு பால் பெருகும்படி செய்து அருள்புரிந்தார். சிவபூஜைக்கு பால் சுரந்த இடமாதலால் இத்தலம் ‘திருப்பாற்றுறை’ (பால் + துறை) என்று அழைக்கப்படுகிறது.
- கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது.
- மூலவர் ‘ஆதிமூலநாதர்’, ‘பாற்றுறைநாதர்’ என்னும் திருநாமங்களுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.
- அம்பாள் ‘மேகலாம்பிகை’, ‘நித்திய கல்யாணி’ என்னும் திருநாமங்களுடன் சிறிய வடிவில் தரிசனம் தருகின்றாள்.. இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது.
- கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
- சூரிய பகவான், தட்சிணாய, உத்தராயணக் காலத்தில் புரட்டாசி 3 ஆம் தேதியும், பங்குனி மாதம் 3 ஆம் தேதியும் சூரிய ஒளிக்கதிர் ஆதிமூலேஸ்வரர் சிரசின் மேல் தம் ஒளிக்கதிர்களை மேலிருந்து கீழாகப் படரவிட்டு வணங்கியுள்ளார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது.
- இவ்வாலயத்தின் அம்பாள் சந்நிதியின் மஹா மண்டபத்தின் வடமேற்குத்திசையில் உள்ள சுவரில் எழுந்தருளியுள்ள “அனுக்ஞை விநாயகர்’ என்னும் “நர்த்தன விநாயகரை’ விசேஷ பூஜைகள் செய்து பிரார்த்தித்து வணங்கியவர்களுக்கு அவரவர் நினைத்த செயல்களை நிறைவு பெற்று பேரானந்தமடைகின்றனர் என்பது சிறப்பாகும்.
- நந்தி, பலிபீடங்கள் மதில்சுவருக்கு வெளியே அமைந்துள்ளன. மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கோயிலுக்கு அழகுபட அமைக்கப் பட்டுள்ளது.
- கோபுரவாயிலில், தென்புறம் காவல் தெய்வம் கருப்பரும், ஸ்ரீவிநாகயரும் வடபுறம் ஸ்ரீபாலதண்டாயுபாணியும் உள்ளனர். கோபுர வாயிலைக் கடந்தவுடன் முன்மண்டபம், தொடர்ந்து மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீவிநாகயர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீகஜலெட்சுமி கோயிலும், வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீசண்டேசர் கோயிலும், கிழக்கே பைரவர், கர்ப்பகிரகக் கோஷ்டத்தின் வெளிப்புறம் தெற்கே பிட்சாடனரும், வீணா தட்சிணாமூர்த்தியும், மேற்கே சங்கரநாராயணரும் வடக்கே பிரம்மா, விஷ்ணு துர்க்கை சிற்பங்களும் அழகுபட காட்சியளிக்கின்றன.
- கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவரது இடது கால் சற்றே மடங்கி நளினமாக இருக்கிறது. இதனை, வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. தெட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார்
- சுவாமிக்கு ஆதிமூலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அர்த்தமண்டபத்தில் நான்கு தூண் களுடன் ராஜசபை இருக்கிறது. இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். திருஞானசம்பந்தர் சுவாமியை “மூலநாதேஸ்வரர்’ என்றும், தலத்தை “கறார் கொன்றை’ என்றும் பாடியுள்ளார். இங்கு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
- பொதுவாக, மேற்கே லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் சிலை தான் இருக்கும். இக்கோயிலில் சங்கரநாராயணர் சிற்பம் இருப்பது சிறப்பான அமைப்பாகும்.
- ஆலய மூலலிங்கம், ஆதிமூலநாதர் என வழங்கப்படுகிறார். அம்பாள் நித்யகல்யாணி என்றும் பாடலில் மேலாம்பிகை, மோகநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவிழா:
மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாற்றுறை- 620 005.
திருச்சி மாவட்டம்.
போன்:
+91- 431 – 246 0455.
அமைவிடம்:
திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழியாக கல்லணை செல்லும் பஸ்களில் 12 கி.மீ., கடந்தால், பனையபுரத்தில் இறங்கலாம். அங்கிருந்து 1 கி.மீ., நடந்து சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி இல்லை. கோயில் வரை நேரடி பஸ்கள் இல்லாததால் திருச்சியில் இருந்து பிற வாகனங்களில் செல்வது நல்லது.