October 06 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கிணத்துக்கடவு

  1. அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     வேலாயுதர்

ஊர்       :     கிணத்துக்கடவு

மாவட்டம்  :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு:

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் என்ற ஊரில், கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார் என்ற ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். பழநி முருகப் பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட அவர், ஒவ்வொரு தைப்பூச தினத்தை முன்னிட்டும் பழநி முருகப் பெருமானை தரிசிப்பது வழக்கம். அவருக்காக பல நாட்கள் விரதம் இருப்பார்.

ஒருசமயம் தைப்பூசத்தை ஒட்டி, பல நாட்கள் விரதம் இருந்த ஜமீன்தார், தனது உற்றார் உறவினருடன் குதிரை வண்டியில் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றார். மலையடிவாரத்தை நெருங்கி, மலையேறும் சமயம், சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயக்குடி ஜமீன் குடும்பத்தினர் அவரை விருந்துக்கு அழைத்தனர். பழநி முருகப் பெருமானை தரிசிக்காமல் விருந்து உண்பதில்லை என்ற கொள்கையுடன் ஜமீன்தார் இருந்ததால், விருந்துக்கு செல்வதை தவிர்க்க முயன்றார். அதனால் ஏதோ காரணத்தை கூறிவிட்டு விருந்துண்ணாமலும், பழநி தண்டாயுதப் பெருமானை தரிசிக்காமலும் புரவிபாளையம் திரும்பினார். மலையடிவாரம் வரை சென்றுவிட்டு, பழநி முருகப் பெருமானை தரிசிக்காமல் திரும்பியது குறித்து ஜமீன்தார் கவலை அடைந்தார். இதை நினைத்து வருந்தி அவரது உடல்நலம் குன்றியது. அன்றிரவு அவரது கனவில் முருகப் பெருமான் தோன்றி, “கிணத்துக்கடவு என்ற ஊரில் ஒரு மலை உள்ளது. மலையின் உச்சியில் சந்தன மரமும் அதனடியில் பொன்னும் உள்ளன. மலை மீது என் பாதங்கள் பதிந்துள்ளன. அங்கு வந்து என்னை தரிசிக்கவும்” என்று பணித்தார்.

விழித்துக் கொண்ட ஜமீன்தார், உடனே கிணத்துக்கடவு சென்று, பொன்மலையை அடைந்தார். முருகப் பெருமான் கூறியபடி அங்கு அவரது பாதங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்த ஜமீன்தார், பூஜைகள் செய்து பாதங்களை வழிபடத் தொடங்கினார். மறுபடியும் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றிய முருகப் பெருமான், அதே கோலத்தில் மலைமீது மூலவரை பிரதிஷ்டை செய்து சந்நிதி அமைக்க, அவரிடம் கூறினார்.

ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் மைசூர் அரண்மனை திவான், தனது கால் புண்ணுக்காக பல வைத்திய முறைகளைப் பின்பற்றி வந்தார். எந்த மருந்தும் அவரது கால் புண்ணை ஆற்றுவதாக இல்லை. இதுகுறித்து திவான் வருந்திய நிலையில், முருகப் பெருமான் அன்றிரவு அவரது கனவில் தோன்றி, கிணத்துக்கடவு வேலாயுத சுவாமி கோயிலுக்கு வருமாறு அழைக்கிறார். மேலும் அவரது கால் புண்ணுக்கு மருந்து தருவதாகவும் உறுதியளிக்கிறார்.

அதே சமயம், கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகப் பெருமான் தோன்றி, திவானின் கால் புண்ணுக்கு பொன்மலையில் உள்ள மூலிகைகளை வைத்து கட்டினால் அவரது புண் குணமாகும் என்று தெரிவிக்கிறார். ஒருநாள் திவான் கிணத்துக்கடவு வேலாயுத சுவாமி கோயிலுக்கு வருகிறார். அர்ச்சகரும் மூலிகைகளை வைத்து கட்ட, திவானின் புண் இரண்டே நாளில் குணமாகி விட்டது. இந்த விஷயம் குறித்து திவான், மைசூர் மன்னரிடம் தெரிவிக்க, மன்னரும், முருகப் பெருமானின் பெருமைகளை ஜமீன்தார் மூலம் உணர்ந்து அவருக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு தெரிவிக்கிறது. மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை ஜமீன்தார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததாகவும், இன்றுவரை ஜமீன்தார் குடும்பத்தைச் சார்ந்தவர்களே கோயில் திருப்பணிகளை செய்து வருவதாகவும் அறியப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • கோயம்புத்தூர் அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுத சுவாமி கோயில், முருகப் பெருமானின் திருத்தலங்களுள் முக்கியத்துவம் பெற்ற கோயிலாக போற்றப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் உள்ள பொன்மலையில், முருகப் பெருமான் தனது பாதங்களை பதித்துச் சென்றதாக அறியப்படுகிறது.

 

  • ஒருகாலத்தில் பொன்மலை முழுவதும் சந்தன மரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

  • இந்தக் கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதி வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகு வெளிப்படுவதாக உணரப்படுகிறது. வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடி, திருவதனம், திருவடி குறித்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

 

  • மலையடிவாரத்தில் இருந்து 200 படிகள் ஏறிச் சென்றால் வேலாயுத சுவாமி கோயிலை அடையலாம். பாலக்காடு கணவாயில் இருந்து வீசும் தென்றல் காற்றை சுவாசித்தபடி மலையேறிச் செல்வது பக்தர்கள் வழக்கம்.

 

  • பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் வள்ளி சுனை (தீர்த்தம்) உள்ளது. என்றும் வற்றாத இத்தீர்த்தத்தில் இருந்து சுவாமி அபிஷேகத்துக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தைத் தாண்டிச் சென்றால் முதலில் இடும்பன், அவரைத் தொடர்ந்து விநாயகர் அருள்பாலிக்கின்றனர்.

 

  • வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி அருள்பாலிக்கிறார்.

 

  • மன்னராகவும் வேடராகவும் முருகப் பெருமானுக்கு 2 கோலங்களில் அலங்காரம் செய்யப்படுகிறது. ராஜகிரீடத்தில் உலகை ஆளும் மன்னராகவும், இம்மையில் ஒருவர் செய்த பாவங்களை தனது வேலால் வீழ்த்தும் வேடுவராகவும் அருள்பாலிக்கிறார்.

 

  • வள்ளி, தெய்வயானையுடன் சுப்பிரமணிய சுவாமி உற்சவ மூர்த்தியாக காட்சி அருள்கிறார்.

 

  • பிரதான சந்நிதியின் தென்பகுதியில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, கன்னிமூலை கணபதி சந்நிதிகள் உள்ளன. கோயிலின் பின்புறம் முருகப் பெருமானின் பாதங்கள் பதிந்த பகுதியை ஒரு சந்நிதியாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பழங்கால கோயில் என்பதை உணர்த்தும்விதமாக, பெரிய கற்தூண்கள் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

 

  • ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட முருகப் பெருமான் பழநி மலையில் கோயில் கொண்டார். அவர் பொன்மலையில் பாதம் பதித்ததால், இங்குள்ள மூலஸ்தான முருகப் பெருமானுக்கு பூஜைகள், ஆராதனைகள் செய்யும் முன்பாக, பாறையில் உள்ள முருகப் பெருமானின் பாதங்களுக்கே முதல் பூஜை நடத்தப்படுகிறது.

 

  • முருகப் பெருமானின் தலங்கள்தோறும் சென்று அவரை தரிசிப்பதை நோக்கமாகக் கொண்ட அருணகிரி நாதர், செஞ்சேரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அந்த மலையில் இருந்து பார்த்தபோது எதிரே சற்று தொலைவில் பொன்மலையில் கோயில் எழுப்பப்பட்டிருப்பதை காண்கிறார். பின்னர் பொன்மலைக்கு வந்து வேலாயுத சுவாமியை தரிசித்து அவரைப் புகழ்ந்து ‘அரிவையர்கள்’ எனத் தொடங்கும் திருப்புகழைப் பாடினார். பொன்மலையை கனககிரி என்று அழைக்கிறார். (கனக – பொன், கிரி – மலை)

 

திருவிழா :

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருவிழா, கந்த சஷ்டி பெருவிழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூச திருவிழாவின்போது நடைபெறும் 3 நாள் தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

பௌர்ணமி, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை நட்சத்திர தினங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. காசி விஸ்வநாதரும் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில்,

கிணத்துக்கடவு- 642109,

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4253 – 242 026

 

அமைவிடம்:

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் 20 கி.மீ., தூரத்தில் கிணத்துகடவு அமைந்துள்ளது. கோவையிலிருந்தும், பொள்ளாச்சியிலிருந்தும் அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

4 + seven =