October 06 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவொற்றியூர்

  1. அருள்மிகு கல்யாண வரதராஜர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கல்யாண வரதராஜர்

உற்சவர்        :     பவளவண்ணர்

தாயார்          :     பெருந்தேவி

தல விருட்சம்   :     மகிழம்

புராண பெயர்    :     பத்மபுரம்

ஊர்             :     திருவொற்றியூர்

மாவட்டம்       :     சென்னை

 

ஸ்தல வரலாறு:

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தப் பகுதியை கோலட்துரை என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தீவிர பெருமாள் பக்தர். தினந்தோறும் காஞ்சிபுரத்திலுள்ள பவளவண்ணபெருமாளை தரிசனம் செய்வது இவரது வழக்கம். இப்படி தினந்தோறும் விஜயராகவாச்சாரியார் காஞ்சிபுரம் சென்று வருவதை பார்த்த கோலட்துரை இங்கு ஒரு பெருமாள் கோயில் கட்டி தந்தார். இதையடுத்து விஜயராகவர் இந்த பெருமாளை வணங்கி வந்தார்.

ஆனாலும், அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. மீண்டும் அவர் காஞ்சிபுரம் சென்றார். பவளவண்ணரை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் இருப்பிடம் சென்றார். இது குறித்து விசாரித்த கோலட்துரை, பவளவண்ணநாதரின் அழகில் மயங்கிய விஜயராகவர் தினந்தோறும் இங்கு வந்து செல்வதை அறிந்து கொண்டார். இதன் காரணமாக காஞ்சிபுரத்திலுள்ள உற்சவரை இங்கு கொண்டு வந்தார் கோலட்துரை. விஜயராகவர் அவரை வணங்கினார். சுவாமி அவருக்கு காட்சி தந்து எனக்கு திருமேனியில் எந்த வித்தியாசமும் கிடையாது. என்னை மனதார நினைக்கும் பக்தர்களின் உள்ளங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன். உண்மையை உணர்ந்த விஜயராகவாச்சாரியார் தனது வாழ்நாள் முழுவதும் இத்தல பெருமாளுக்கு சேவை செய்தார். இவ்வாறு பக்தருக்காக பெருமாள் காட்சி தந்த தலம் இது. இங்குள்ள இறைவன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • கல்யாண வரதராஜர் மூலவராக காட்சி தருகிறார். பவளவண்ணர் உற்சவராக திகழ்கிறார்.

 

  • இங்குள்ள உற்சவர் பவளவண்ணப்பெருமாள் பிரசித்தி பெற்றவர். இவர் இடது கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார்.

 

  • தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலதுபுறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

 

  • பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் உற்சவர் பவளவண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அப்போது பவளவண்ணருக்கும்,பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று முழுதும் பெருமாள், தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கும். மறுநாள் காலையில் இவர் மீண்டும் மூலஸ்தானம் திரும்புகிறார்.

 

  • திருக்கல்யாண வைபவத்தின் போது திருமணமாகாதவர்கள் சுவாமிக்கு மட்டைத்தேங்காய் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்கிறார்கள். அதன் பிறகு அந்த மட்டைதேங்காயை எடுத்து வந்து வீட்டு பூஜையறையில் வைத்து வணங்குகிறார்கள். இவ்வாறு செய்வதால், நல்ல வரன் அமையும். திருமண வரன் அருளும் பெருமாள் என்பதால், இத்தல சுவாமிக்கு கல்யாண வரதராஜப் பெருமாள் என்ற பெயர் வந்தது

 

  • தினந்தோறும் காலையில் சுவாமியின் சன்னதி முன்பாக கோமாதா பூஜை நடக்கிறது.

 

  • ராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

 

  • வைகாசியில் தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. அப்போது சக்கரத்தாழ்வார் தீர்த்த நீராடுகிறார்.

 

  • ராமநவமியை ஒட்டி இங்கு 9 நாட்கள் விழா நடக்கிறது. ராமர் பிறந்த பின்பு கொண்டாடப்படும் விழா என்பதால் இதனை ஜனன உற்சவம் என்பர். ஆனால், இத்தலத்தில் ராமர் பிறந்த தினத்திற்கு முன்னதாக விழா தொடங்கி நவமியன்று விழா முடிகிறது. ராமர் பிறக்கும் முன்பு கர்ப்பத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் விழாவாக கருதுவதால், கர்ப்ப உற்சவம் என்றே அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் கர்ப்ப உற்சவம், ஜனன உற்சவம் என்று மொத்தம் 18 நாட்கள் விழா நடந்தது. தற்போது உள்ள காலகட்டத்தில் வெறும் 9 நாட்கள் கர்ப்ப உற்சவம் மட்டுமே நடக்கிறது.

 

  • இங்கு திரிதள விமானம் உள்ளது.

 

திருவிழா: 

சித்திரையில் ராமானுஜர் விழா 10 நாள், வைகாசியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, மாசிமகம், பங்குனி உத்திரம், ராமநவமி.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,

காலடிப்பேட்டை,

சென்னை -600 019.

 

போன்:    

+91- 99401 73559.

 

அமைவிடம்:

சென்னை எக்மோர் இருந்து 12 கி.மீ., சென்ட்ரலில் இருந்து 7 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் திருவொற்றியூர் இருக்கிறது. எலக்ட்ரிக் ட்ரெயினில் பீச் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். இங்குள்ள காலடிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து செல்லலாம். நேரடி பஸ் வசதியும் உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

five × 2 =