September 27 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோளூர்

  1. அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வைத்தமாநிதிபெருமாள்

உற்சவர்        :     நிஷோபவித்தன்

தாயார்          :     குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி

தீர்த்தம்         :     தாமிரபரணி, குபேர தீர்த்தம்

புராண பெயர்    :     திருக்கோளூர்

ஊர்             :     திருக்கோளூர்

மாவட்டம்       :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு:

செல்வத்துக்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான குபேரன் ஒருசமயம் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றான். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் சேர்ந்து காட்சி கொடுத்தனர். அப்போது செய்த தவறு காரணமாக பார்வதிதேவியின் சாபத்துக்கு ஆளாகிறான் குபேரன். அவனது உருவம் விகாரம் ஆகவேண்டும், அவனது நவநிதிகள் அவனை விட்டுச் செல்லட்டும், அவனது ஒரு கண் பார்வை கெடட்டும் என்று சாபமிட்டார் பார்வதி தேவி. தனது தவற்றை உணர்ந்து குபேரன் மன்னிப்பு கேட்டதால், மூன்று சாபங்களில் இரண்டு விலகின. நவநிதிகள் மட்டும் அவனை விட்டு விலகி திருமாலிடம் சென்றன. திருமாலை வணங்கி அவற்றைப் பெறுமாறு குபேரனுக்கு பார்வதி தேவி அறிவுறுத்தினார். அப்போது பார்வதி தேவி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

சுவர்த்தனனின் மகன் தர்மகுப்தனுக்கு 8 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இதன் காரணமாக வறுமையில் தவித்தான் தர்மகுப்தன். அப்போது நர்மதா நதிக்கரையில் பரத்வாஜ முனிவரை சந்தித்தான். அவர், “முன் ஜென்மத்தில் நீ பெரும் செல்வந்தனாக இருந்த போதும், செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல் பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அதனால் அது தேவையானவர்களுக்கு பயன்படாமல், தீயவர்கள் கைகளில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் தவித்து நீ உயிரிழந்தாய். இப்போது தாமிரபரணியின் தென்கரையில் உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகள் உள்ளன. அங்கு கோயில் கொண்டுள்ள வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால், உனது செல்வத்தைப் பெறலாம்” என்று கூறினார்.

தர்மகுப்தனும் திருக்கோளூர் வந்து பெருமாளை வழிபட்டு, செல்வத்தைப் பெற்றான். இந்தக் கதையை பார்வதி தேவி குபேரனிடம் கூறி, திருமாலிடம் வேண்டி தன் நிதியைப் பெற அறிவுறுத்தினார். இந்த நிதிகளை பெருமாள் பாதுகாத்து வைத்திருந்ததால் இத்தல திருமாலுக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற பெயர் கிட்டியது. பெருமாளே தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டு, குபேரன் இழந்த நவநிதிகளில் பாதியைப் பெற்றான். பெற்ற அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வண்ணம் திருமகளிடம் கொடுத்தான்.

ஒரே நபரிடம் செல்வம் இருந்தால் அங்கு தர்மம் நிலைக்காது. அதர்மம் தலை தூக்கும். அதனால் செல்வம் ஒரே இடத்தில் நிலையாக இருக்காமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது திருமாலின் விருப்பம். அதனால் தர்மதேவன் இங்கேயே நிலையாகத் தங்கி, இத்தல பெருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம். இவ்வாறு அதர்மத்தை வென்று தர்மம் இங்கேயே தங்கி விட்டதால், மற்ற இடங்களில் அதர்மம் இருந்தது. இதனால் தேவர்கள் அச்சம் கொண்டு தர்மத்தைத் தேடி நிதிவனத்துக்கு வந்தனர். இங்கும் அதர்மத்தை தர்மம் வென்றதால், இத்தலத்துக்கு அதர்மபிசுனம் என்ற பெயர் உண்டானது.

 

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள். அத்தகைய இந்த ஊருக்கு முன்னர், ராமானுஜர் வைத்தமாநிதி பெருமாளை தரிசிப்பதற்காக வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்ணுற்ற ராமானுஜர், ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே’ என்று கேட்கிறார். அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்’ என்று சாதுர்யமாக பதில் அளிக்கிறார்.

அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தின் பெருமைகளை விவரிக்கிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இத்தகைய ஞானம் இருக்குமானால் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார். இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ நமக்கு பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில், 96-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

  • இத்தலத்தை நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

 

  • இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.

 

  • பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

 

  • ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.

 

  • குபேரன் தான் இழந்த செல்வத்தை மாசி மாத சுக்ல பட்ச துவாதசியில் (அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசி) பெற்றதால், இன்றும் அந்த நாளில் பக்தர்கள், குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபாடு செய்கின்றனர்.

 

  • கருவறையில் ஸ்ரீகர விமானத்தின் கீழ் ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார், வைத்தமாநிதி பெருமாள்.

 

  • பெருமாள் சன்னதிக்கு வலப்புறம் தனி சன்னதியில் பூமகளாகிய ஸ்ரீ தேவியின் அம்சமாகிய கோளூர்வல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

 

  • பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் தனி சன்னதியில் நிலமகளாகிய பூ தேவியின் அம்சமாகிய குமுதவல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்

 

  • இங்கு உற்சவர் நிஷேபவித்தன் என்னும் திருநாமம் கொண்டு, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் காட்சித்தருகிறார்.

 

  • இங்கு வசித்த விஷ்ணு நேசர் என்பவரது மகனாகப் பிறந்தவர் மதுரகவியாழ்வார். இவரது வாழ்க்கை வரலாற்றில் இருந்து, குருபக்தி ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதை அறியலாம். 80 வயதான மதுரகவி, தமது வடதேச பயணத்தின்போது தனக்கு ஒரு குருநாதர் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி தெற்கு நோக்கி பயணித்து, 16 வயது நிரம்பிய நம்மாழ்வாரை குருவாக ஏற்றார், தனது ஆச்சாரியரின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடினார் மதுரகவியாழ்வார். பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூட பாடவில்லை. குருவின் மூலமாகவே ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது.

 

  • ராமானுஜர் திருக்கோளூருக்குள் நுழையும்போது, ஒரு பெண்மணி தன் உடமைகளை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு புறப்படுகிறார். அவள் ஊரைவிட்டுச் செல்வதற்கான காரணத்தைக் கேட்கிறார் ராமானுஜர். அவள் அதற்கு 81 அர்த்தத்தைக் கூறி, இதைப் போல வாழ தனக்குத் தகுதி இல்லை என்று கூறுகிறாள். அந்த 81 அர்த்தங்கள் கேள்விகளாக, நம் வாழ்க்கையின் சாரமாக 81 ரகசியங்களாகப் போற்றப்படுகின்றன. அப் பெண்மணியை சமாதானப்படுத்தி, அவள் வீட்டுக்குச் சென்று அவள் கையாலேயே உணவு தயார் செய்யச் சொல்லி, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை சேவித்துவிட்டு உணவருந்துகிறார் ராமானுஜர்.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்

திருக்கோளூர் – 628 612

தூத்துக்குடி மாவட்டம்

 

போன்:    

+91 4639 273 607

 

அமைவிடம்:

திருநெல்வேலியிலிருந்து -37 கி.மீ. தூரத்தில்திருக்கோளூர் உள்ளது. திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

15 + 1 =