September 21 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பெரும்புலியூர்

  1. அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்

அம்மன்         :     சவுந்தரநாயகி, அழகம்மை

தல விருட்சம்   :     சரக்கொன்றை

தீர்த்தம்         :     காவிரிதீர்த்தம், கோயில் தீர்த்தம்

புராண பெயர்    :     திருப்பெரும்புலியூர்

ஊர்             :     திருப்பெரும்புலியூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து ‘புலிக்கால் முனிவர்’ என அழைக்கப்பட்டார். இவர் ஐந்து தலங்களில் பூஜித்து அருள் பெற்றவர். பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிருபுலியூர் என்பன அவர் பூஜித்த நான்கு தலங்கள்.

ஐந்தாவது தலம்தான் இப்போது நாம் பார்க்க இருக்கும் பெரும்புலியூர்.

 

சிதம்பரத்தில் தில்லைக் கூத்தனான நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருந்தான். அவனின் செம்பாதங்களை சதாகாலமும் பூஜிக்க வேண்டுமென்ற பேரவா மத்யாயனர் எனும் பக்தரின் உள்ளத்தில் எழுந்தது. பூஜிப்பதற்கு அன்றலர்ந்த, பனி மேவிய பூக்களல்லவா வேண்டும்? மலர்ந்து ஒரு சில மணிநேரமானாலும் அது வாடத் துவங்கும் கட்டத்துக்கு வரக் கூடியதுதானே! அந்தப் பூக்களால் பூஜிப்பது மகாபாவமாயிற்றே என்று எண்ணினார். தேன்சிந்தும் மலர்களால் அலங்கரித்து அழகு பார்க்க வேண்டியவனை வெற்றுப் பூக்களால் அர்ச்சிப்பது முறையாகாது என்று நினைத்தார். புத்தியில் சட்டென்று பிரகாசமாக யோசனை ஒளிர்ந்தது. மலரும்போதே பூக்களைப் பறித்து பெருமானுக்கு மாலையாக்கிப் போடலாமே என்று புதுமையாக சிந்தித்தார். இரவில் மலரும் பூக்களைப் பறிக்க, கூர்மையான கண்களும், வேகமும், தாவிச் செல்லும் கால்களும், கரங்களுமாகத் தனக்கு ஓர் பிறவி வேண்டுமே என்று ஏக்கம் கொண்டார். கண்ணீருடன் தில்லை நாயகனைத் துதித்தார். இறைவன் உடனே அருளினான். வியாக்ர பாதர் ஆனார். வியாக்ரம் என்றால் புலி. புலிக்காலுடையவரானார்.

இரு கரங்களிலும், கால்களிலும் வலுவேறியது. முகம் குறுகி புலியுரு கொண்டது. கண்கள் அதிகூர்மையாகின. சக்தியின் திரட்சி உள்ளுக்குள் வேகமாகப் பொங்கியது. ‘என் மனம் புரிந்து இவ்வுரு அளித்திருக்கிறாயே எம்பெருமானே…’ என்று மகிழ்ந்து, முன்கால்களை நீட்டி, பிடரியையும் முதுகையும் நேர்க் கோட்டில் கிடத்தி, பின்கால்களை வளைத்து நமஸ்கரித்து நன்றி சொன்னார். பிறகு, பெரும்புலியூர் எனும் காவிரி பாயும் தலம் நோக்கிச் சென்றார். வியாக்ரபாதர் அத்தலத்தை அடைந்து, பரவசமிக்கவராக லிங்க ரூபத்தில் எழுந்தருளியிருந்த ஈசன் அடியில் வீழ்ந்து துதித்தார். அந்தி நெருங்கியது; மலர்களின் வாசம் வியாக்ரபாதரை ஈர்த்தது. கூடை கூடையாக பூக்களைப் பறித்து அதிகாலையிலேயே அர்ச்சித்தார். தேவர்களும், வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் பெற்ற பெரும்பேரால் இத்தலம் இன்றளவும் திருப்பெரும்புலியூர் என்றழைக்கப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம். கோபுரத்தின் மீதுள்ள சிற்பங்கள் பழமையானவை. கீழ்ப்பகுதி கருங்கற்களாலும், மேற்புறம் சுதையாலும் ஆனவை. கோபுர வாயிலிலிருந்து நேரே பார்க்க, மூலவர் தண்ணிலவாக பிரகாசிக்கிறார்.

 

  • கோயிலுக்குள் நுழையும்போதே சிவ சாந்நித்யம் மனதை நிறைவிக்கிறது. தறிகெட்டு ஓடும் மனக் குதிரையை கடிவாளம் இருக்குவதுபோல் ஒரு உணர்வு தன்னிச்சையாக நடைபெறும்.

 

  • வியாக்ரபாதர் பூஜித்த லிங்கம், காலங்கள் கரைந்தாலும் அருட்கொடையில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல துலங்குகிறது. இதை அனுபவபூர்வமாக உணர்ந்துதான் தேவாரப் பதிகங்களில் ‘‘பெரும்புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’’ என்று பாடி நெகிழ்ந்திருக்கிறார்கள்.

 

  • திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மீது பதிகங்கள் பாடியுள்ளார். அவை ஒவ்வொன்றையும் தம்மீது ஆணை என்பது போன்ற பாவனையில் பாடியிருப்பதுதான் சிறப்பு.

 

  • சம்பந்தர் ‘‘மண்ணுமோர் பாகமுடையார்’’ எனும் பதிகத்தில் ஈசனின் சகல உயர்நிலைகளையும் காட்டி, இந்தப் பெரும்புலியூரானைப் பிரியாதவர்கள் சிவத்திற்கு சமமாவார் என்கிறார். அதுமட்டுமல்லாது இந்தப் பெரும்புலியூர் பெருமானை வழிபடுவோர் ‘‘தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சினராய் நீடுலகத்திருப்பாரே’’ என்று நம்பிக்கையோடு ஆசி கூறுகிறார்.

 

  • சகல ஞானிகளும் வீழ்ந்து பரவித் துதித்த பெரும்புலியூர்நாதரை பணிந்தால் அவர் பெருவாழ்வு தந்தருள்வார் என்பது திண்ணம்.

 

  • கருவறையில் இறைவி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரண்டு கரங்களில் பத்மமும், ெஜபமாலையும், கீழே ஒரு கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தரும் அன்னை, தனது இன்னொரு கரத்தை பூமியை நோக்கி தொங்க விட்ட நிலையில் காட்சி தருகிறாள். அன்னை இங்கு சதுரபீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவராய் நின்று அருள்புரியும் அன்னையும் இவளே. துர்க்கையாய் நின்று மங்கையரைக் காப்பவளும் இவளே. அளப்பரிய சக்தி கொண்ட அன்னை இவள். எனவே இந்த ஆலயத்தில் துர்க்கை பிரதிஷ்டை செய்யப்படவில்லை.

 

  • அம்பாள் நின்ற கோலத்தில் அழகிய வடிவம். மெல்லிய புன்னகை பேரின்பம் பெருக்கும் தேவி இவள். ‘வேண்டுவன கேள் தருகிறேன்’ என்பது போல அபயஹஸ்தமும், இடக்கரத்தை சற்றே மடித்திருக்கும் கோலமும் ஆனந்தம் தருகின்றன. மாயை எனும் கடலில் வீழ்வோரை நேசக்கரம் கொண்டு தூக்குவாள் அன்னை. ஞானத்தைத் தந்து பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவிப்பாள்.

 

  • வேறெங்கும் காணமுடியாத ஒரு அற்புதமாக வெளிப்பிராகாரத்திலுள்ள கருவறை பீடம், தாமரையின் மீது அமைந்திருக்கிறது. சிற்ப நுட்பங்கள் வாய்ந்த அந்த கமலபீடம் பார்ப்பதற்கு அரிதானது, அழகானது.

 

  • தாமரையின் மீது அமைந்துள்ள இந்த பீடம், மகாலட்சுமியை நினைவுபடுத்தும். அருவமாக லட்சுமி தேவியார் இங்கு அமர்ந்து பூஜிக்கிறாரோ என்று நமக்கு எண்ணத் தோன்றும்.

 

  • குண்டலினி எனும் யோக சக்தியானது சகஸ்ராரம் எனும் ஆயிரம் தாமரை இதழ்களாக விரிவடைவதுபோல், இத்தலத்தை தரிசிப்போர் யோகசக்தியில் சிறந்து விளங்குவர் என்கிறார்கள். ஏனெனில், வியாக்ரபாதரோடு எப்போதும் உடனிருக்கும் பதஞ்சலி முனிவர் யோகத்திற்கே அதிபதியாவார்.

 

  • வியாக்ரபாதரும், பதஞ்சலியும் இரட்டையர்கள் போல விளங்கினார்கள் என்பது வரலாறு. வியாக்ரபாதரோடு அவரும் இங்கு அமர்ந்து யோகத்தை போதித்திருக்கலாம் என்றும் அந்தச் சக்தியை இங்கு பதித்திருக்கலாம் என்றும் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக மலர்ந்திருக்கும் இந்த தாமரை பீடத்தையும், அதன் மேல் எழுப்பப்பட்டிருக்கும் கருவறை விமானத்தையும் காட்டுகிறார்கள்.

 

  • பிராகாரத்தில் சூரியன், விநாயகர் சந்நதிகள் உள்ளன. சுப்ரமணியர் சந்நதி அழகுற அமைந்துள்ளது.

 

  • அருணகிரிநாதரின் திருப்புகழ் பெருமை பெற்றது. மேலும் கோயிலை நாடறியச் செய்த மகான் சுந்தரசுவாமிகளின் திருவுருவச் சிலை உள்ளது.

 

  • கருவறை கோஷ்டமூர்த்தங்களாக தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அர்த்தநாரீஸ்வரரும், வடக்கே சண்டேசரும் அமர்ந்திருக்கிறார்கள்.

 

  • இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்வது, சிதம்பரம் நடராஜர் – சிவகாமி அம்பாளை தரிசனம் செய்வதற்கு சமம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

 

திருவிழா: 

தினசரி ஒரு காலம் மட்டுமே இங்கு பூஜை நடைபெறுகிறது.

பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, சோம வாரங்கள், மார்கழி 30 நாட்கள் என இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 10 மணி முதல் இரவு 11 மணி மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,

திருப்பெரும்புலியூர்- 613 203.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 94434 47826,+91- 94427 29856

 

அமைவிடம்:

திருவையாறிலிருந்து(2 கி.மீ) திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) இறங்கி வடக்கே 3 கி.மீ. தூரத்தில் பெரும்புலியூர் உள்ளது.

 

 

Share this:

Write a Reply or Comment

eight − 1 =