September 16 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வடகுரங்காடுதுறை

  1. அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :  தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர்

உற்சவர்        :  குலை வணங்கி நாதர்

அம்மன்         :  ஜடாமகுடநாயகி, அழகுசடைமுடியம்மை

தல விருட்சம்   :  தென்னை

புராண பெயர்    :  கபிஸ்தலம், ஆடுதுறை, திருவடகுரங்காடுதுறை

ஊர்             :  வடகுரங்காடுதுறை

மாவட்டம்       :  தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான்.

குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி. சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.

 

செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள்.  சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலைவணங்கிநாதர் என்ற பெயரும் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் வாலியால் வழிபடப்பட்ட இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது.

 

  • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

 

  • கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் தயாநிதீஸ்வரர். வாலிக்கு வால் வளர அருள் செய்ததால் வாலிநாதர் என்றும், கர்ப்பிணியின் தாகம் தீர்க்க தென்னைமரக் குலையை வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்குநாதர் என்றும், ஒரு சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்ததால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் மற்ற பெயர்களால் இத்தல இறைவன் அறியப்படுகிறார். இறைவன், அழகுசடைமுடிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

  • அருள்மிகு அழகுசடைமுடியம்மை எனும் பெயருடன் அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி, கேட்டதெல்லாம் தருபவள்.

 

  • இறைவன் சந்நிதி முன் உள்ள முகமண்டபத் தூண் ஒன்றில் சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்சநேயரைக் காணலாம். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கியச் சிவத்தலங்களில் வடகுரங்காடுதுறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர் ஒரு பிரார்த்தனாமூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்துகொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார்.

 

  • ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரமும் இரண்டு பிரகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது.

 

  • வாலி இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீசுவரர் என்ற பெயரும் உண்டு. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

 

  • மூலவர் பின்புறக் கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருப்பதற்கு பதில் இங்கு அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவம் மிகமிக அழகாகவுள்ளது.

 

  • இங்கு முருகப்பெருமான் ஒரு திரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமான் மீது 3 பாடல்கள் உள்ளன.

 

  • இறைவன் சந்நிதி முன் உள்ள முகமண்டபத் தூண் ஒன்றில் சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்சநேயரைக் காணலாம். அனுமன் சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில் வடகுரங்காடுதுறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர் ஒரு பிரார்த்தனா மூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார்.

 

  • இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற நடராஜப் பெருமான் மூலவராக, சிலாரூபமாக (கற்சிலை) காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும் நடராஜரும் மூலவர்களாக இங்கு தரிசனம் தருவது வெகு சிறப்பு.

 

  • சிவன் கோயிலில் துர்கை சந்நிதி அமைந்திருக்கும். இந்த துர்கையை சிவ துர்கை என்பார்கள். ஆனால் விஷ்ணு துர்கை அமைந்திருக்கும் ஆலயம் இது.

 

  • பொதுவாக சிவாலயத்தில் இருக்கும் துர்கையை சிவதுர்கை என்றே அழைப்பார்கள். ஆனால், கையில் சங்கு- சக்கரத்துடன் பெருமாள் அம்சமாகத் திகழ்வதால், ஸ்ரீவிஷ்ணுதுர்கை என்று போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணுதுர்கைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்தத் துர்கைக்குப் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீலநிறத்தில் காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்

 

  • திருவிடைமருதூருக்கு அருகாமையில் சுக்ரீவனால் வழிபடப்பட்ட ஆடுதுறை (தென்குரங்காடுதுறை – காவிரி தென்கரைத் தலம்) என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில் பெருமாள்கோவில் என்றோர் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்துவதற்கு, வடகுரங்காடுதுறை என்ற இந்த தேவாரத் தலம் இன்று ஆடுதுறை பெருமாள்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 

  • இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்வதுண்டு. ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

 

  • திருஞான சம்பந்தர், அருணகிரி நாதரால் பாடல் பெற்றது.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “உய்யும் வகை, காத்தும் படைத்தும் கலைத்து நிற்போர் நாள்தொறும் ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா:

பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில்,

வடகுரங்காடுதுறை – 614 202.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91 9688726690, 63796 9925

 

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இந்த தலம் 20வது கி.மீ. தூரத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 57 கி.மீ.

 

Share this:

Write a Reply or Comment

four × two =