- அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம்
மூலவர் : சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர்
அம்மன் : கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி
தல விருட்சம் : புன்னை
தீர்த்தம் : பிரமதீர்த்தம்
புராண பெயர் : திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம்
ஊர் : திருப்புறம்பியம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
ஒவ்வொரு யுக முடிவிலும் வெள்ளம் ஏற்பட்டு முற்றாக அழிக்கப்பட்டு புதிய சிருஷ்டிகள் ஏற்படுவது மரபாகவே அமைந்துள்ளது. அவ்வாறு கிருதயுக முடிவில் சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) பொங்கிப் பெருக்கெடுத்து உலகத்தையே அழிக்க பாய்ந்து வந்தன. வெகுபுண்ணியத் தலமாகிய இந்த புன்னாகவனம் மட்டும் அழிந்து விடாமல் காத்தருள திருவுளம் கொண்ட சிவபெருமான், விநாயகப் பெருமானை அழைத்து, ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து இத்தலத்தைக் காத்திடுமாறு பணித்தார்.
விநாயகப் பெருமானும், ஓங்காரத்தைப் பிரயோகித்து ஏழுகடல்களையும் ஒரு கிணற்றினுள் அடக்கி ஈசன் திருவுளப்படி இத்தலத்தைக் காத்தருளினார். மூன்று பனை மர உயரத்திற்குப் பாய்ந்து வந்த வெள்ளம், கிணற்றில் அடைபட்டது போக, பிறவற்றை அழிக்க முயன்று ஆனால் விநாயகப் பெருமானுக்குப் பயந்து, இத்தலத்திற்கு புறம்பாகப் பாய்ந்து ஓடி விட்டதால் அன்று முதல் இப்பகுதி புறம்பயம் என்று பெயர் பெற்றது.
அதுவே திருப்புறம்பயம் என்றானது. இன்று பேச்சு வழக்கில் திருப்புறம்பியம் என்றாகி விட்டது. பிரளய வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய விநாயகப் பெருமானின் பெருஞ்செயலை வியந்து மகிழ்ந்து கடலரசனான வருண பகவான், கடல் பொருட்களான நத்தை ஓடு, மணல், கிளிஞ்சல், கடல்நுரையினைக் கொண்டு விநாயகர் திரு உருவை உருவாக்கி, ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்ற திருநாமம் இட்டுப் போற்றி அழைத்து இங்கு பிரதிஷ்டை செய்தான். விநாயகர், பொங்கிப் பெருகி வந்த ஏழுகடல்களையும் அடைந்த கிணறு ‘சப்த சாகர கூடம்’ என்ற பெயரில் ஆலயத்தின் திருக்குளத்தின் அருகே இன்றும் உள்ளது.
சாட்சி நாதர்:
பூம்புகாரினைச் சேர்ந்த சிவபக்தியில் சிறந்த ரத்தினவல்லி என்ற வணிகப் பெண்ணுக்கு அவளது பெற்றோர், மதுரையைச் சேர்ந்த வணிகன் ஒருவனுக்கு மணமுடிக்க நிச்சயத்திருந்தனர். மணநாள் நெருங்கும் முன்பு ரத்தினவல்லியின் பெற்றோர் காலமாகிவிட, வணிகன், அவளை அழைத்துக் கொண்டு மதுரையிலுள்ள தன் உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்து பூம்புகாரிலிருந்து புறப்பட்டான்.
போகும் வழியில் திருப்புறம்பியம் இறைவன், இறைவியைத் தரிசித்துவிட்டு, அன்றிரவு கோயில் வளாகத்தில் தங்கியிருந்தபோது, வாலிபனை பாம்பு கடித்து விட, அவன் இறந்துவிட்டான். இருந்த ஒரு உறவும் அறுந்துவிட்ட நிலையை எண்ணி ரத்தினவல்லி அந்தத்தலத்து இறைவனிடம் தனது கையறு நிலையைச் சொல்லி அழுதாள். கன்னியின் கண்ணீருக்கு மனமுருகி, அவள் கணவனை உயிர்ப்பிக்குமாறு அங்கு வந்து தங்கியிருந்த திருஞானசம்பந்தர் பதிகம் பாட இளைஞன் உயிர் பெற்றான். தனக்கு மாங்கல்ய பிச்சை அருளிய இறைவன் திருமுன்னே திருமணம் செய்து கொண்டாள், ரத்தினவல்லி.
வருடங்கள் உருண்டோட மதுரையில் வாழ்ந்து வந்த ரத்தினவல்லிக்கு ஒரு மகனும் பிறந்தான். வணிகனின் முதல் மனைவியின் குழந்தைகள் ஒருநாள் தன் குழந்தையை அடிப்பது கண்டு, ரத்தினவல்லி அந்தக் குழந்தைகளை கடிந்து பேசினாள். அப்பொழுது முதல் மனைவி ‘‘உற்றார், உறவினர் யாரும் அறியாமல் நடந்த உனது திருமணம் திருட்டுக் கல்யாணம். அதனை ஒப்புக் கொள்ள முடியாது. யாரோ ஒருத்தியான நீ என் மக்களை ஏசுவதா?” என்று ரத்தினவல்லியை திட்டித் தீர்த்தாள். ரத்தினவல்லி, மதுரை சொக்கநாதரிடம் சென்று ‘‘என் திருமணத்தை, உன் முன் நடந்ததை ஒருத்தி பழிப்பதா? அதை நீ பார்த்திருப்பதா?” என்று முறையிட்டு அழுதாள். அப்பொழுது எல்லோரும் பார்க்கும்படியாக மதுரை திருக்கோயிலில், திருப்புறம்பியம் இறைவன், சாட்சிக்கு தன்னுடன் அழைத்துச் சென்ற திருப்புறம்பியம் மடப்பள்ளி, வன்னி மரம், கிணறு சகிதமாக அவளுக்கு சாட்சி சொன்னார்கள்.
இந்தப் புராண நிகழ்வு மதுரை திருக்கோயிலின் ஈசான மூலையிலே கற்பலகையில், மடப்பள்ளி, வன்னிமரம், கிணறு, திருப்புறம்பயம் இறைவன் சாட்சிநாதரின் லிங்கத் திருமேனி உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. காட்சிக்கு எளியவராய், ஏழைப்பங்காளனாய் இத்தலத்து இறைவன் உதவும் எண்ணத்தோடு நமக்காகக் காத்திருக்கிறார். சிலப்பதிகார உரையாசிரியர் இளங்கோ அடிகளும் இப்பெண்ணை சிலாகித்து வன்னிமரம், மடப்பள்ளி சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்” என்று தனது சிலப்பதிகாரத்தில் வர்ணித்துள்ளார்.
கோயில் சிறப்புகள்:
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தேனபிஷேக பெருமான், பிரளயம் காத்த பெருமான் என பெயர் கொண்டுள்ள தேனபிஷேக விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
- இத்தலத்தின் இறைவி கரும்படு சொல்லியம்மை என அழைக்கப்படுகிறார். கடுஞ்சொற்களைப் பேசுவோர் இவ்வம்மையை வழிபட இனிமையான சொற்களைப் பெறுவர். வாக்கு வன்மை பெறும். திக்குவாய், குழறிப் பேசும் குழந்தைகள் இவ்வம்மைக்கு அபிஷேகம் செய்த தேனை நாக்கில் தடவிவர சொல்லாற்றல் பெறுவர்.
- ஆறுமுகனாம் (குழந்தை வடிவ) குகப் பெருமானை அன்னை தன் மகனை இடையில் ஏற்றியிருப்பது போல ஏற்றி அரவணைத்தவாறு அற்புதக் காட்சி தரும் அருள்மிகு குகாம்பிகை. இவ்வன்னைக்கு பெளர்மணி நாளன்று சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.
- ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்துக்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது.
- பிரளயம் ஏற்பட்டபோது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
- செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம் என்பது தொன் நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46-ஆவது தலம்.
- பிற்கால சோழப் பேரரசு உருவாகக் காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோயிலாக மாற்றிக் கட்டினார்.
- பெரிய திருக்குளத்திற்கு முன்பாக தட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்திக்கு உரிய 24 முக்கியத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலுக்கு தினமும் விறகு சுமந்து வந்த ஏழைக்கு இறைவன், தட்சிணாமூர்த்தி வடிவில் திருக்காட்சியளித்ததால், அந்த பெருங்கருணையை போற்றி வழிபட என தனியாக அமைக்கப்பட்டது, இந்த திருக்கோயில்.
- இத்தலத்து இறைவன் நியாயம் கிட்டாதவர்களுக்கு சரியான தீர்ப்பினை வழங்குகின்றார். மிகவும் நொந்து போய், நீதி கிடைக்காமல் தவிப்போர் மனதாலே நினைத்து இத்தலத்து இறைவனை சாட்சி கூற வருமாறு வேண்டிக்கொள்ள கண்டிப்பாக ஏதோ ஒருவிதத்தில் அவர் அருளுவார்.
- இத்திருக்கோயில் ஒரு நீதிமன்றம் போலவே செயல்படுகின்றது. காரணம், தலபுராணத்தின்படி இறைவன் ஒரு பெண்ணுக்காக சாட்சி சொல்ல, அதனால் அவர் சாட்சிநாதர் என்று பெயரும் பெற்றதால் பரஞ்சோதியார் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் 64வதான சாட்சி பகர்ந்த படலத்தின் நாயகரே இத்தலத்து இறைவன் ஆவார்.
- பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும், விடிய, விடிய தேனபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் எந்தப் பொருட்களைக் கொண்டும், திரவியங்களாலும் அபிஷேகம் நடைபெறுவதில்லை. தேன் முழுக்கின்போது விநாயகர் செம்பவள மேனியராய் அற்புதமாகக் காட்சியளிப்பதுடன் ஒரு சொட்டு தேன் கூட கீழே சிந்தாமல் அத்தனையையும் தன் திருமேனியில் உறிஞ்சிக் கொள்ளும் பேரதிசயமும் நடக்கின்றது.
- இத்தலத்தை அழியாமல் காத்தருளிய பிரளயம் காத்த விநாயகரை மக்கள் செல்லமாக தேனபிஷேகப் பிள்ளையார் என்று தித்திப்பாக அழைத்து மகிழ்கின்றனர்
- திருவிழா:
- மாசிமகத்தில் 10 நாட்கள் உற்சவம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
- திறக்கும் நேரம்:
- காலை 6 மணி முதல் 1 மணி வரை,
- மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
- முகவரி:
- அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்,
- திருப்புறம்பியம் -612 303.
- தஞ்சாவூர் மாவட்டம்.
- போன்:
- +91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429
- அமைவிடம்:
- கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பூர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற இந்தத் தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.