February 04 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வைரவன் சுவாமி திருக்கோயில்

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில்

 

மூலவர்                        :           வளரொளிநாதர்(வைரவன்)

தாயார்                       :           வடிவுடையம்பாள்

தல விருட்சம்         :           ஏர், அழிஞ்சி

தீர்த்தம்                      :           வைரவர் தீர்த்தம்

புராண பெயர்      :           வடுகநாதபுரம்

ஊர்                              :           வைரவன்பட்டி

மாவட்டம்                :           சிவகங்கை

 

திருத்தல வரலாறு:

சிவபெருமானுடைய பல வடிவங்களில் பைரவரும் ஒருவராகவே கருதப்படுகிறார். மூன்று கண்களுடன், கைகளில் சூலத்தோடு, உடுக்கை, கபாலம், பாசம் போன்றவற்றை ஏந்தியும், காலில் சிலம்பும், மார்பில் தலைகளால் ஆன மாலையும் அணிந்தவர். கோரைப்பற்களும் செஞ்சடையும் கொண்டவராக காணப்படுகிறார்.

சிவபுராணமும், கந்தபுராணமும் பைரவரை பற்றி பாடுகின்றன. பிரம்மாண்ட புராணத்தில் பைரவரை  பற்றிய குறிப்பு உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக, தனது நெற்றி புருவ மத்தியில் இருந்து பைரவரை உருவாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், தன்னை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று பைரவர் சிவனிடம் கேட்க, பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஐந்தாவது தலையை கொய்ய  சொன்னார். அவ்வாறே செய்தார் பைரவர். இதனாலேயே, பைரவருடைய தோற்றம் குறித்து சொல்லும் போது, ஒரு கையில் தண்டமும், மற்றொரு கையில் பிரம்மனுடைய தலையும் கொண்டும், காலில் சிலம்புடனும், முத்துமாலையும், தலை மாலையும் கழுத்தில் அணிந்தும் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறாக, அசுரர்களின் கொடுமை தாங்காமல் வேதனைப்பட்ட தேவர்களுக்காக, காசியில் ப்ரகதாரணன் என்ற முனிவர் செய்த யாகத்தில் தோன்றிய பைரவர், அசுரர்களை கொன்று சூலத்தில் அவர்களது தலையை கோர்த்துக்கொண்டார். நான்கு வேதங்களையும் நாய் உருவத்திற்குள் அடக்கி அதனையே தனது வாகனமாக்கி  கொண்டார். எல்லா திருக்கோயில்களையும், அதனை  சுற்றியுள்ள பகுதிகளையும் காக்கும் கடவுளாக பைரவர் உள்ளார். எல்லா சிவ ஆலயங்களிலும், விநாயகரில் ஆரம்பிக்கும் பரிவார தெய்வங்கள் பைரவருடன் முடிவதை அனைவரும் பார்த்திருக்கலாம். பைரவரே காவல் தெய்வம். இதன் காரணமாகவே முற்காலத்தில், திருக்கோயில் முழுவதும் பூட்டி அந்த சாவிகள் அனைத்தையும் பைரவரின் காலடியில் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்தது. இன்றைய கால மாற்றத்தில், இது போன்ற பழக்கம் மாறிவிட்டது.

 

வைரவன் கோயில் பைரவர், பிரம்மனின் கபாலத்தையும், திருமாலின் தோலையே சட்டையாகவும் அணிந்து காணப்படுவதாக வைரவன்கோவில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

முன்னொரு காலத்தில், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்கள் இழைத்த பெருங்கொடுமை தாங்காத தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, அவர் அந்தணர் கோலத்தில் இவர்கள் முன் தோன்றி, கோலவனம், அழிஞ்சில் வனம், புராதன வனம் என பெயர் கொண்ட இடத்திற்கு சென்று உங்களது துயரங்களை போக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினார். அவ்வாறே தேவர்கள் தன் தலைவனுடன் அந்தணர் சொன்ன இடத்திற்கு வந்த போது, அங்கே வளரொளிநாதரும், வடிவுடையம்பாளும் கோயில் கொண்டிருப்பதை  கண்டனர். அப்போதுதான் தேவர்களுக்கு, முன்பு திருமாலும், பிரம்மனும் தானே பிரம்மம் என்ற போட்டி வந்த போது ஒளி வடிவமாக சிவன் தோன்றி, பின்பு மலையாக குளிர்ந்ததும், அவருக்கே வளரொளிநாதர் என்ற பெயர் உருவானதும் நினைவில் வந்தது. அத்தகைய வளரொளிநாதரே அகந்தை அடங்கிய தேவர்களுக்காக பைரவர் வடிவம் கொண்டார்.

 

இந்த வைரவன்பட்டி திருத்தலம் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது. இத்தலம் அழிஞ்சிக்காடாய் இருந்ததாகவே கூறப்படுகிறது. வைரவன்கோயிலில் இரண்டு அழிஞ்சி மரங்கள் காணப் படுகின்றன. பொதுவாக இரண்டு விதமான அழிஞ்சி மரங்கள் உள்ளன. ஏறழிஞ்சி மரம், இறங்கழிஞ்சி மரம் என்பன அவை. இந்த வைரவன்பட்டியின் தலவிருட்சமாகக் கருதப்படும் அழிஞ்சி மரம் ஏறழிஞ்சி மரம் ஆகும். இயற்கையையே கடவுளாக வழிபடும் ஒரு மிக நல்ல பழக்கத்தை நாம் காலம் காலமாக கடைபிடித்து வருகிறோம். மரங்களை கடவுளாய் நினைத்து தலவிருட்சமாய் வளர்த்து வந்துள்ளோம். அவற்றில்தான் எத்தனை அழகான உள்நோக்கங்களை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

 

கோயில் சிறப்புகள் :

 

  • இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத் தூணுடன் அமைந்துள்ளது. நகரத்தார்களின் ஒன்பது நகர கோவில்களுள் ஒன்றாகும்.

 

  • பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

 

  • இங்கு கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை

 

  • அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய்வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது.

 

  • இக்கோயில் ஏறழிஞ்சி மரம் அதிசயத்தின் ஊற்றாகவே அமைந்துள்ளது. இந்த அழிஞ்சி மரத்து விதைகள் கீழே விழுவதில்லை. அந்த மரத்து காய் கனிகளில் இருந்து வெளிவரும் விதைகள் கீழே விழாமல் நேராக சென்று மரப் பட்டைகளில் ஒட்டிக் கொள்கின்றன.

 

  • இந்த அழிஞ்சி மரம் உருவானதற்கு வேறு கதையும் கூறப்படுகிறது. சிறுகூடல்பட்டியில், முன்னொருகாலத்தில், செட்டியார் தம்பதியர் தங்களுக்கு குழந்தை வரம்வேண்டி துறவி ஒருவரிடம் வேண்டி நின்றனர். அவர் அய்யனாரை வேண்டி சிவத் தலம் ஒன்றில் அழிஞ்சி மரக் கன்று ஒன்றை நீங்கள் நட்டு வளருங்கள். அந்த கன்று செழித்து வளர வளர தங்களது குலம் தழைக்கும் என்று அருளினார். அவ்வாறே நன்மை அக்குடும்பத்திற்கு நடந்தது. அந்த மரமே இன்று இக்கோயிலில் அமைந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

 

  • இக்கோயில் விமானம், உபபீடம் (துணை பீடம்) அதிட்டானம் (பீடம்) சுவர் (கால்) பிரஸ்தரம் (கூரை) கிரீவம் (கழுத்து) சிகரம் (தலை) ஸ்தூபி (குடம்) என ஏழு பகுதிகளுடன் நுண்ணிய வேலைப் பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

 

  • மகாமண்டபத்தூண்கள் முழுவதும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இலைகளுடன் கூடிய கொடிகளை அலகினால் பிடித்திருக்கும் அன்னப்பறவை,

வட்டக் கருவியை கையில் ஏந்தி நிற்கும் கந்தர்வர்,

மா  னோடும், சிவகணத்தோடும் தாருகாவனத்தில் தோன்றிய பிச்சாடனர்,

தாமரை மலரில் வீணை மீட்டும் வனிதா,

மீனாட்சி கல்யாண திருக்கோலம்,

மயில் மேல் சுப்பிரமணியர்,

சிவனும் பெருமாளும் ஒன்றாய் சங்கரநாராயணனாய்,

ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாள்,

ரிஷபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் சிவன் பார்வதி ரிஷபாருடர் கோலத்தில்,

ஹிரண்யனை மடியில் போட்டு அவன் குடலை மாலையாய் போட்டுக்கொள்ளும் நரசிம்ம  மூர்த்தி,மார்க்கண்டேயரின் பக்திக்கு இணங்கி காலனை அழிக்கும் கால சம்ஹாரமூர்த்தி,

ஆறுமுகப் பெருமான் மயில் மேலே,

அங்குசம், பாசம் ஏந்திய நடனமாடும் நர்த்தன கணபதி.

 

  • வைரவன் கோயிலில் சிறியதும், பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகைப் பகுதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி வகையை சேர்ந்தது. ஆலமரமும், முனிவர்களும் இல்லாமல் தனித்து காணப் படுகிறது.

 

  • மற்றொரு தட்சிணாமூர்த்தி அளவில் பெரியதாகவும், கருவறை வெளிச் சுவரின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது. கருமை நிறக் கல்லில் ஆன மரத்தின்கீழே ஆசனத்தில் அமர்ந்து, முனிவர்களுக்கு தத்துவம் போதிக்கும் வண்ணம் உள்ளது. இவரைச் சுற்றி இசைத் தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.

 

  • இத்தலம் பைரவரின் இதயமான தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள். இத்தல பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றும் அழைக்கப் படுகிறது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஸ்ரீ வைரவர் தனது சூலத்தை கோயிலின் தென் திசைப் பக்கம் ஊன்ற, அங்கு ஓர் ஊற்று தோன்றியது. இன்றும் வற்றாத ஊற்று இங்கு பெருகுவதாக சொல்கிறார்கள் மக்கள்.

 

திறக்கும் நேரம்:      

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும்

 

திருவிழா:     

சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு.

 

கோயில் முகவரி :

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோவில்,

வைரவன்பட்டி – 630 215,

சிவகங்கை மாவட்டம்.

 

தொலைபேசி எண் :

04577- 264 237.

 

திருக்கோயில் அமைவிடம்:

சிறப்புமிகு வைரவன் கோவில், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதையில் திருப்பத்தூரில் இருந்து 7 km தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 14 km தொலைவிலும், குருஸ்தலம் பட்டமங்கலத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருக்கோஷ்டியூரில்  இருந்து 5 km தொலைவிலும் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

3 × 5 =