அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்
1 திருவிலஞ்சிக் குமாரர் கோயில் :
மூலவர் திரு . இலஞ்சி குமாரர்
(வரதராஜப் பெருமானாக நமக்கு காட்சி தருகிறார்)
சிவன்_ ஸ்ரீ இருவாலுக நாயகர்
அம்பாள் – ஸ்ரீ இருவாலுக ஈசர்க்கினியாள்
ஸ்தல விருட்சம் – மகிழமரம்
விசேசமாய் சாற்றப்படும் பூ செண்பகப்பூ
தீர்த்தம் – சித்திரா நதி.
திருக்கோவில் வரலாறு:
ஆதி காலத்தில் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், துர்வாச முனிவர், காசிப முனிவர் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் சந்திப்பின் போது பல ஆன்மீக கருத்துக்களை பற்றி உரையாடிக் கொண்டிருக்க, மூம் மூர்த்திகளில் நிமித்த காரண கடவுள் யார் என்ற சந்தேகம் தோன்றுகிறது. காசிப முனிவரோ படைக்கும் கடவுளான பிரம்மனே என்றும், துர்வாச முனிவரோ காக்கும் கடவுளான திருமாலே என்றும், கபில முனிவரோ அழிக்கும் கடவுளான சிவனே என்றும் மாறுபட்ட கருத்துக்களை கூறினார்கள். அப்போது துர்வாச முனிவர் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வணங்கி தங்கள் ஐயம் தீர்த்து வைக்க பணிகிறார். அவரின் வேண்டுகோளை ஏற்ற முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும், ஆடகப் பொன் மேனியும் கொண்ட கட்டிளமை கோலத்தில் தோன்றி பிரம்மாவாகவும், திருமாலாகவும், ருத்திரனாகவும் இணைந்த மும்மூர்த்தி வடிவில் காட்சியருளி தாமே நிமித்த காரண கடவுள் என்பதை தெளிவுபடுத்தியதாகவும், அந்த தரிசனத்தை கண்டு தங்கள் ஐயம் தீர்ந்த முனிவர்கள் தங்களுக்கு காட்சியளித்தது போலவே இத்தலத்தில் எழுந்தருளி இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டதற்கு இணங்க, இங்கு முருகப் பெருமான் வரதராஜ குமரனாக அருள்பாலிப்பதாக இலஞ்சி தல புராணம் கூறுகிறது.
- அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இருவாலுகநாயக்ரெனும் சிவலிங்கப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
- அகத்திய முனிவர் பூஜை செய்ததும் அருணகிரிநாதரால் பாடப்பெற்றுதுமான வரலாற்று சிறப்பு வாய்ந்தது இத்திருக்கோவில் .
- இங்கு நடக்கும் கந்த சஷ்டி விழாவைப்பற்றி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடி இருக்கிறார்.
- திருக்குற்றாலத் தலபுராணத்தில் வெற்றிவேற் குமரன் விரும்பி அமர்ந்த தலம் என்றும் , பிரம்மா, இந்திரன் குமரனை அர்ச்சித்து வாழ்ந்த இடம் என்று குறிப்பிடுகிறது.
- அகத்தியர் திருக்குற்றாலம் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டி இங்கு சிவபூசை செய்த வெண் மணல் லிங்கமே இத்தலத்தின் ஈசனான இருவாலுக நாயகர் ஆகும்.
- இங்கு முருகப் பெருமான் அழகிய இளமைக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
- இக்கோவிலில் முறையே திருவனந்தல், விளா பூஜை, கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய ஆறுகால வழிபாடுகள் நித்தம் நடைபெற்று வருகிறது.
- இந்த கோவில் மகுட ஆகப்படி முறையே கருவறை, அர்த்த மண்டபம், மணி மண்டபம், மகா மண்டபம் ஆகிய அங்கங்களை கொண்டு அமையப் பெற்றுற்ளது.
- இந்த தலத்தின் இலஞ்சிக் குமரனே திருக்குற்றாலத்தின் துவார சுப்பிரமணியராகவும், பிரத்யேக பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராகவும் திகழ்வது சிறப்பு.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்
.
பூஜை விவரம் : தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் : சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
அருகிலுள்ள நகரம் : குற்றாலம்,தென்காசி
கோயில் முகவரி : அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி -627805,
தொலைபேசி எண் : 04633-283201,226400,223029.