June 01 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் கரூர்

  1. அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்                    :     பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர் )

அம்மன்                   :     அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி

தல விருட்சம்       :     வஞ்சி

புராண பெயர்    :     கருவூர், திருக்கருவூர் ஆனிலை

ஊர்                              :     கரூர்

மாவட்டம்               :     கரூர்

 

 ஸ்தல வரலாறு :

பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன் காமதேனுவிடம் நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப் போல் படைப்பு தொழில் செய்வாய் என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான். இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

 

புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் இவ்வூரிலேயே பிறந்துள்ளார். கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோயிலில் லிங்கத்திற்கு எதிரில் கொடிமரமும், அடுத்து பலிபீடமும், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். இறைவனை காமதேனு வழிபட்டுள்ளார். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம்.

 

கோயில் சிறப்புகள் :

  • சுவாமி சுயம்பு மூர்த்தி.

 

  • ஊரின் பெயர் கருவூராயினும், இங்குள்ள கோவிலுக்கு, காமதேனு வழிபட்டதால் ஆனிலை என்று பெயர்.

 

  • பசுபதிஸ்வரர் ஆநிலையப்பர். இரண்டடி உயரம் உள்ள இறைவன் சதுர ஆவுடையாராக சிறிது சாய்ந்த நிலையில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.

 

  • புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட பதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதார தலம்.

 

  • முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்த புராதான சிறப்பு பெற்ற தலம் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடனான முருகப்பெருமானது திருமண வைபவத்திற்கு முசுகுந்தனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக இத்தல புராணங்கள் கூறுகின்றன.

 

  • கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார் கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு சிவலிங்கத்தை நாவால் வருடுவது போலவும் அதன் பின் கால்களுக்கிடையில் பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது.

 

  • பதினென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். பற்றற்றவராக வாழ்ந்திருந்த இவர் மீது அந்தண இனத்தைச் சார்ந்தவர்கள் வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் குறை கூற மன்னன் இவரிடம் எக்குறையும் காணாது குறை கூறியவர்களைத் தண்டித்தான். மீண்டும் மீண்டும் அந்தணர்கள் தொல்லை தரவே இவர் தைப்பூசத்தன்று ஆனிலையப் பருடன் ஐக்கியமாகி விட்டார். ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.

 

  • மாசி மாதத்தில் ஐந்து நாட்கள், பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது.

 

  • கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக காட்சி தருகிறார்.

 

  • மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில்.

 

  • கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நினக கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கன் உள்ளது.

 

  • பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர்.

 

  • சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று.

 

திருவிழா: 

பங்குனி உத்திரதிருவிழா – பிரம்மோற்சவம் 12 நாட்கள் ,

ஆருத்ராதரிசனம் – 10 நாட்கள்,

நவராத்திரி – 10 நாட்கள்,

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,

கரூர்-639 001.

கரூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4324 – 262 010

 

அமைவிடம் :

கரூர் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம் திருச்சி – ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.

 

 

Share this:

Write a Reply or Comment

six + twenty =