May 31 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பார்த்தன் பள்ளி

  1. அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்    :      தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி

உற்சவர்   :      பார்த்தசாரதி

தாயார்     :      தாமரை நாயகி

தீர்த்தம்    :      கட்க புஷ்கரிணி

ஊர்        :      பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)

மாவட்டம் :      நாகப்பட்டினம்

                        

ஸ்தல வரலாறு :

கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறான். அவர் அருகே கமண்டலம் இருப்பதைக் கண்டதும், அதில் தண்ணீர் இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்தான். முனிவர் தியானம் செய்து முடிக்கும்வரை தன்னால் பொறுத்திருக்க முடியாது என்பதால், அவர் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தைத் திறந்து பார்த்தால் அதில் நீர் இல்லை.

அகத்திய முனிவர், “நமக்கு எது வேண்டும் என்றாலும், கொடுக்கும் கடவுளான கிருஷ்ணரிடம் தானே கேட்டிருக்க வேண்டும்” என்று அர்ஜுனனிடம் கூறினார். உடனே அர்ஜுனன் கிருஷ்ணரை அழைத்தான். கூப்பிட்ட குரலுக்கு உடனே கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றினார். தன் கையில் இருந்த கத்தியை அர்ஜுனனிடம் கொடுத்த கிருஷ்ணர், அதைப் பயன்படுத்தி எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தார். கிருஷ்ணர் கூறியபடி, அர்ஜுனன், கத்தியால் தரையை கீறி, கங்கையை வரவழைத்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான். அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிருஷ்ணர் (பார்த்தசாரதி) இங்கேயே கோயில் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் பார்த்தன்பள்ளி என்று தல வரலாறு தெரிவிக்கிறது.

 

கோயில் சிறப்புகள் :

  • ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.

 

  • உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள்பாலிக்கிறார்.

 

  • மூன்றுநிலை ராஜகோபுரம் 75 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ளது.

 

  • அயோத்தியை ஆளும் தசரத மன்னர், குழந்தை வரம் பெற, புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது, ஸ்ரீமன் நாராயணனே தனக்கு மகனாக (ராமபிரானாக) அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்தார் தசரதர். தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக திருமாலை அழைத்தார். அப்போது யாக குண்டத்தில் இருந்து நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தோன்றி, தான் எவ்வாறு இருப்பேன் (ராமபிரான்) என்பதை தசரதருக்கு உணர்த்தினார். ராமாவதாரத்தின்போது, ராமபிரானுடன் இருவரும் (ஸ்ரீதேவி, பூதேவி) வாழ முடியாது என்பதால், அப்போதே ராமபிரானை தரிசித்தனர். ராமபிரான் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல காட்சி தரும் நிகழ்ச்சி, சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் இரு தேவியரும் உள்ளனர் என்பது தனிச்சிறப்பு.

 

  • ராஜகோபுரம் 3 நிலை கொண்டதாக அமைந்துள்ளது. நாராயண விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் கையில் கத்தியுடன் அருள்பாலிக்கிறார், அருகே கோலவல்லி ராமர் கையில் சங்கு, சக்கரம், கதை, வில், அம்புடன் உள்ளார். அர்ஜுனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் திருமால் தரிசனம் கண்டுள்ளனர்.

 

  • பார்த்தனுக்காக உண்டான கோயில் என்பதால் பார்த்தன்பள்ளி ஆயிற்று. அர்ஜுனனுக்கும் இவ்விடத்தில் ஒரு கோயில் உண்டு. வருணன் இத்தல பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, தனக்கு பார்த்தசாரதியாக காட்சி தருமாறு வேண்டியதால், பெருமாளும் அவ்வாறே அருள்பாலித்ததால், பார்த்தசாரதி பள்ளி என்று இவ்வூருக்கு பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

  • திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்யதேசம் ஆகும்.

 

திருவிழா :

வைகுண்ட ஏகாதசி விழா, ஸ்ரீராம நவமி உற்சவம், தைப்பூச தீர்த்தவாரி, தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருடசேவை, ஆடி அமாவாசை தீர்த்தவாரி உற்சவ தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்,

பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)-609 106.

நாகப்பட்டினம் மாவட்டம்

 

போன்:    

+91- 4364-275 478.

 

அமைவிடம் :

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது பார்த்தன்பள்ளி. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து பஸ் வசதி உள்ளது. திருவெண்காட்டில் இருந்து 4 கிமீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

1 + twelve =