May 25 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருநீர்மலை

  1. அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர்

தாயார்          :     அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி

தல விருட்சம்   :     வெப்பால மரம்

புராண பெயர்    :     நீர்மலை, தோயாத்ரிகிரி

ஊர்             :     திருநீர்மலை

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு :

பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் சயன கோலத்தை தரிசித்த பிறகு, திருநீர்மலை வழியே அவரவர் இருப்பிடத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாளின் சயன கோலம், கண்களை விட்டு அகலாமல் இருந்ததால், இருவருக்கும் மீண்டும் அந்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இதுகுறித்து இருவரும் திருமாலிடம் வேண்டினர். இத்தலத்திலேயே அந்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்று இருவரும் விரும்பியதால், திருமால், திருநீர்மலையில் போக சயனத்தில் ரங்கநாதராகக் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேய முனிவர்கள் உள்ளனர்.

நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் நான்கு தோற்றங்களில் பெருமாள் அருளும் தலம் திருநீர்மலை. இது ஒரு மலைக்கோயில் ஆகும். மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலங்களில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு மூன்று ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் உண்டு.

 

 

கோயில் சிறப்புகள் :

  • மலையிலும், மலைக்கு கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன.

 

  • பெருமாள் நான்கு நிலைகளில் மூன்று அவதாரக் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • 3 ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் தெப்பக்குளத்துடன் கோயில் அமைந்துள்ளது.

 

  • மூலவருக்கு இங்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் மட்டும் தைலக்காப்பு செய்யப்படும். ராமபிரான் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

 

  • பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இத்தத்தில் பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார்

 

  • ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கு ராமபிரானை மணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், இத்தலத்துக்கு வந்து தவம் மேற்கொண்டார். திருமால் அவருக்கு, ராமபிரானாக, சீதாபிராட்டியுடன் மணக்கோலத்தில் தரிசனம் கொடுத்தார். உடன் லட்சுமணர், பரதன், சத்ருக்கனன் ஆகியோரும் இருந்தனர். அதே கோலத்தோடு இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று பெருமாளை, வால்மீகி வேண்டியதால், மலையடிவாரத்தில் தனிகோயிலில் அருள்பாலிக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததாலும், நீல நிற மேனி உடையவராக இருப்பதாலும், பெருமாள் ‘நீர்வண்ணப் பெருமாள் என்றும் நீலவண்ணப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அருகே வால்மீகி முனிவர் உள்ளார்.

 

  • திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார்.

 

  • இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

 

  • நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

 

  • கொடிமரம் நீர்வண்ணருக்கு. கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.

 

  • இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, “அணிமாமலர்மங்கை’ எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

 

  • மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார்.

 

  • நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர்.

 

  • சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர், ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கிறது.

 

  • கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார்.  தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.

 

  • கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களில் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, “முக்கோட்டி துவாதசி’ என்று அழைக்கிறார்கள்.

 

  • தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, “ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்’ எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும்.

 

  • மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.

 

  • இம்மலைக்கு “தோயாத்ரிமலை’ என்ற பெயரும் உண்டு. தோயம் என்றால் “பால்’ எனப்பொருள். சுவாமி தோயகிரி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது இவருக்கு புஷ்பாங்கி அலங்காரம் செய்கின்றனர்.

 

  • நீர் வண்ணப் பெருமாள் என்ற திருநாமம் சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும் ஆழ்ந்த அர்த்தத்தை தன்னிடத்தே உடையது. நீருக்கு ஏது வண்ணம்? அது போல் பகவானுக்கு குறிப்பிட்ட எந்த உருவமும் இல்லை. நீர் எந்த இடத்தைச் சார்கிறதோ அதன் நிறத்தைப் பெறுவதுபோல் நாம் பகவானை அவருடைய எந்த கோலத்தில் தரிசிக்கப் பிரார்த்திக்கிறோமோ அந்தத் திருவுருவில் நமக்கு தரிசன சேவை சாதிக்கிறார். அவரது வண்ணம் என்பது நம் பக்தி தோய்ந்த எண்ணம் என்பதைத் தவிர வேறில்லை.

 

  • நீர் எல்லாவற்றிலும் கலந்து அந்தந்த தன்மைக்கேற்ப இணைந்து விடுவதைப்போல், இறைவனின் கருணை எந்த பேதமுமின்றி அனைவருக்கும் சென்று அவர்களுக்கு வாழ்வளிக்கிறது. பஞ்ச பூதங்களுக்குள் ஒன்றாகிய நீரின் வண்ணமாய் நமக்கு அருட்பாலிக்கும் பரந்தாமனை வணங்குவோம்

 

திருவிழா: 

சித்திரையில் பிரம்மோற்சவம் 10 நாட்கள், வைகாசி வசந்த உற்சவம், ஆனி கோடை உற்சவம், புரட்டாசி சனி பவித்ர உற்சவம் கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள்,

ஸ்ரீரங்க நாதப் பெருமாள் திருக்கோயில்,

திருநீர்மலை- 600 044

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91- 44-2238 5484,98405 95374,94440 20820.

 

அமைவிடம் :

சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

9 + seventeen =