அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : புருஷோத்தமர்
தாயார் : புருஷோத்தம நாயகி
தல விருட்சம் : பலா, வாழை மரம்.
தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம்
புராண பெயர் : திருவன் புருஷோத்தமம்
ஊர் : திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்)
மாவட்டம் : மயிலாடுதுறை
ஸ்தல வரலாறு :
வியாக்ரபாதர் என்ற மகரிஷிக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. இதுகுறித்து புருஷோத்தமப் பெருமாளிடம் தினம் வேண்டிக் கொண்டு வந்தார். பெருமாளின் அனுக்கிரகத்தால் மகரிஷி, உபமன்யு என்ற ஆண்மகனை அருளப் பெற்றார். பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்துக்கு தினம்தோறும் சென்று, பூப்பறித்து, அதை மாலையாகத் தொடுத்து, பெருமாளுக்கு அணிவித்து வந்தார். ஒருநாள் வியாக்ரபாதர், நந்தவனத்துக்கு கிளம்பும்போது, குழந்தை உபமன்யுவும் அவருடன் வருவேன் என்று அடம்பிடித்து அழுதான். குழந்தையின் அழுகுரலுக்காக, நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். நந்தவனத்தின் வாசலிலேயே குழந்தையை அமரச் செய்துவிட்டு, வியாக்ரபாதர் மட்டும் நந்தவனத்துக்குள் சென்றார். சுற்றும் முற்றும் பார்த்த குழந்தை, தந்தையைக் காணாது அழுதது. மேலும் பசியாலும் துடித்தது. குழந்தையின் அழுகுரலுக்கு ஓடோடி வந்த பரந்தாமனும் புருஷோத்தம நாயகியும், உடனே அங்கு திருப்பாற்கடலை தோற்றுவித்து, அதில் இருந்து பாலை எடுத்து குழந்தைக்கு அளித்தனர்.
கோயில் சிறப்புகள் :
- சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர்.
- மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்கிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
- உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமபிரான், சீதாப்பிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர், சேனை முதலியார் சந்நிதிகள் உள்ளன.
- இத்தலத்தில் 3 ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. ராமபிரான் சந்நிதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்திய நிலையில் உள்ளார்,
- இத்தல தீர்த்தத்தில் பாசி படிவதில்லை. இத்தல பெருமாளின் விருப்ப மலராக செண்பகப் பூ உள்ளது.
- மணவாள மாமுனிகள் இத்தலத்தில் தங்கியிருந்து 2 வருடங்கள் சேவை புரிந்துள்ளார்.
- இந்த சிறிய ஊரில் ஒரே தெருவில் திருமணிமாடக் கோயில், திருஅரியமேய விண்ணகரம், திருத்தேற்றியம்பலம், திருவண் புருஷோத்தமம் ஆகிய 4 கோயில்கள் அமைந்துள்ளன.
- குமேதஸ் என்ற படிப்பறிவில்லாத ஒருவனை, இத்தலப் பெருமாள் மிகச் சிறந்த பண்டிதன் ஆக்கினார் என்று கூறப்படுகிறது.
- தமிழக வைணவத் தலங்களுள் இத்தலத்தில் மட்டுமே புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் திருமால் அருள்பாலிக்கிறார். அவரது வள்ளல்தன்மையை உயர்த்திக் காட்டும் பொருட்டு, வண்புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார்.
- திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களில் பெரிய திருமொழியில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாளை அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்து, பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் அனைத்து நலன்களும் கிட்டும் என்று பாடியுள்ளார்.
- திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை.
திருவிழா:
பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது.
தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில்,
திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்)
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364-256221
அமைவிடம் :
சீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. செல்ல வேண்டும். சீர்காழியிலிருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.