May 18 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் குமாரவயலூர்

  1. வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுப்ரமணியசுவாமி , ஆதிநாதர் (அக்னீஸ்வரர்)

அம்மன்         :     வள்ளிதேவசேனா , ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி)

தல விருட்சம்   :     வன்னிமரம்

தீர்த்தம்         :     சக்திதீர்த்தம்

புராண பெயர்    :     ஆதிவயலூர்

ஊர்             :     குமாரவயலூர்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு :

உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்..

 

1934ல் பெற்றோருடன் தலயாத்திரையாக முருகன் குடிகொண்டிருக்கும் தலங்களைத் தரிசித்துக் கொண்டே வந்த வாரியார் திருச்சி அருகே வயலூரை வந்தடைந்தார். கோயில் அர்ச்சகர் ஜகந்நாத சிவாச்சாரியார் என்ற இளைஞரின் இனிமையான குரலில் அழகான உச்சரிப்பில் செய்த சண்முக அர்ச்சனையில் மெய்மறந்தார் வாரியார். அர்ச்சனைத் தட்டில் எட்டணாக்காசைக் காணிக்கையாக அளித்தார். கோயிலின் பார்வையாளர் புத்தகத்தை நிர்வாகிகள் நீட்டிய போது அதில் தன் பெயரையும், முகவரியையும் குறித்து விட்டுத் திரும்பினார்.

அன்றிரவே சந்நியாசியைப் போல் ஒருவர் கோயில் தர்மகர்த்தா கனவில் வந்து, ‘கோயில் பெயரில் எட்டணாவைக் காணிக்கையாகப் பெற்ற உன்னால் கோயிலுக்கு கோபுரமா கட்டமுடியும்?’ என்று கேட்டார். கனவில் வந்தவர் தான் வணங்கும் வயலூர் முருகனே என்று உறுதியாக நம்பினார் தருமகர்த்தா. மறுநாள் பொழுது விடிந்தவுடன் நேராக கோயிலுக்குச் சென்றார் தர்மகர்த்தா. அர்ச்சகரிடம் முதல்நாள் கோயிலுக்கு வந்தவர்களில் எட்டணா காணிக்கை அளித்தவர் யார் என்று கேட்டபோது அவரும் பார்வையாளர் புத்தகத்திலிருந்து வாரியார் முகவரியைக் கொடுத்தார். உடனடியாக தருமகர்த்தா, ‘தாங்கள் காணிக்கையாக அளித்த தொகையை இறைவன் ஏற்க மறுத்து விட்டதால் அது இப்போது திருப்பி அனுப்பப்படுகிறது’ என்று எழுதி மணியார்டரில் எட்டணாவை வாரியார் முகவரிக்குத் திருப்பி அனுப்பிவிட்டார். எந்தக் கோயில் வரலாற்றிலும் கண்டிராத அதிசயம் இது. வாரியாரிடம் அவர் காணிக்கையைத் திருப்பி அனுப்பச் செய்த வயலூர் முருகன் அவர் மூலமாகவே பல இலட்சங்களைத் திரட்டச்செய்து கோபுரம், மண்டபம் என்று கோயிலை பன்மடங்கு விரிவுபடுத்திக் கொண்டான் என்பதுதான் அதிசயிக்க வைக்கும் மற்றொரு செய்தி. காரணம் வயலூர் கோயிலை எழுப்பிய சோழ மன்னன் அதை மேலும் விரிவுபடுத்த விரும்பியபோது வயலூர் முருகன் அதை ஏற்கவில்லை. பின்னாளில் வாரியார் வாயிலாக அதை ஏற்க திருவுளங்கொண்டது நம்மைப் போன்றவர்கள் வாரியாரின் மேன்மையை அறியச் செய்வதற்காகத்தான் போலும்!.

மணியார்டரில் திருப்பி அனுப்பப்பட்ட காணிக்கையைக் கண்டு கலங்கிப் போனார் வாரியார். இதுபற்றி அறிய, திருச்சியில் உள்ளாட்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணிப்புரியும் நண்பரைச் சந்தித்துக் காரணம் தெரிந்து வரப் புறப்பட்டுப் போனார். வாரியார் திருச்சி வந்திருப்பதை அறிந்த கோயில் தருமகர்த்தா அவரைத் தேடி வந்து தம் கனவைப் பற்றிக் கூறினார். இது கேட்டு கோயில் கோபுரம் எழுப்பும் திருப்பணியை முருகன் தம்மிடம் எதிர் பார்ப்பது போல் உணர்ந்தார் வாரியார். இத்தகையதொரு கட்டுமானப் பணிக்கான தொகையைத் தான் எப்படித் திரட்ட முடியுமென்று திகைத்தார். சென்னையில் தந்தையாருடன் உபந்நியாசங்கள் செய்து வந்த வாரியார், அது போன்று உபந்நியாசங்களைச் செய்தாலும் வசூலாகும் தொகையால் கோபுரம் எழுப்ப முடியுமா? என்று யோசித்தார். இதற்குள் அவரது நண்பர்களும் முருகனது அன்பர்களும், செல்வந்தர்களும் தாங்களும் இத்திருப்பணியில் இணைந்து உதவ முன்வந்தனர். திருச்சியில் மாதந்தவறாமல் வாரியார் சொற்பொழிவு நிகழலாயிற்று. மூன்றே ஆண்டுகளில் பல்லோரின் உறுதுணையுடன் திருப்பணிக்குழுத் தலைவராக இருந்து முயன்று நிதிதிரட்டிய கிருபானந்தவாரியார் கோபுரப்பணியைச் செம்மையாக முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி முடித்தார்.

வயலூர் முருகன் தன் குறிக்கோளை வாரியார் மூலம் நிறைவேற்றிக் கொண்டான். வயலூர்ப் பதிதனில் உறையும் முருகனை வாழ்த்திப் பதினெட்டு திருப்புகழ் பாடல்கள் (பதினெட்டுப் பாடல்களுமே அடிகளால் மிகவும் நீளமானவை) பாடியுள்ள அருணகிரியார் ஒரு பாடலில் ‘என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும்… என்னால் தரிக்கவும் இங்கு நானார்’ என்று கூறுவதுபோல், ‘எல்லாம் என்னப்பன் முருகன் திருவுளப்படி நடந்தது’ என்று கூறி மகிழ்ந்தார் வாரியார்.

 

கோயில் சிறப்புகள் :

  • இந்த வயலூரில் குடிகொண்டு இருக்கும் முருகப்பெருமான் ஒரு உண்மையை விளக்குகிறார். முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார்.

 

  • திருவண்ணாமலையில் அருணகிரியாரை காப்பாற்றிய முருகப் பெருமான், ‘முத்தைத் திரு’ என அடியெடுத்துக் கொடுத்தார். அதன் பின்னர் அருணகிரியார் திருப்புகழ் ஏதும் பாடவில்லை. முருகப் பெருமானின் அருள் வேண்டி காத்திருந்தார் அருணகிரியார். இதைத் தொடர்ந்து அவரை வயலூருக்கு வருமாறு (அசரீரி) அழைத்தார் முருகப் பெருமான். மகிழ்ந்த அருணகிரியார் வயலூருக்குச் சென்றார். ஆனால், அங்கு அவருக்கு முருகப் பெருமான் தரிசனம் தரவில்லை. வருத்தமடைந்த அருணகிரியார், “அசரீரி பொய்யோ?” என உரக்கக் கத்தினார். அப்போது விநாயகர் அவர் முன் தோன்றி, “அசரீரி உண்மையே” என்று கூறி, அங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டி அருளினார். தனது வேலால் அருணகிரியாரின் நாக்கில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன் பின்னர், அருணகிரியார் இத்தல முருகனைப் போற்றி 18 பாடல்கள் அருளினார்.

 

  • அருணகிரியாருக்கு காட்சி தந்த ‘பொய்யா கணபதி’ விசேஷ மூர்த்தியாக கொண்டாடப்படுகிறார். கணபதியைப் போற்றி அருணகிரியார் திருப்புகழில்காப்புச் செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ அந்த அளவுக்கு பொய்யா கணபதி பொருளை சீராகக் கொடுப்பார் என்று அச்செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றி, தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருள்வதால், இவர் ‘பொய்யா கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனக் கூறப்படுகிறது. அருணகிரியாருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ஆனி மாத மூல நட்சத்திர தினத்தில் இவர் முருகப் பெருமானுடன் புறப்பாடாகிறார்.

 

  • பொதுவாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும் கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜர் இத்தலத்தில் மாறுபட்டு, காலைத் தூக்காத கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோலம் நடனமாடுவதற்கு முந்தைய நிலையாக கருதப்படுகிறது. அதனால் இவரது சடாமுடி முடியப்பட்ட நிலையில் இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் காணப்படவில்லை. ‘சதுர தாண்டவ நடராஜர்’ என்று அழைக்கப்படும் இவருக்கு மார்கழி திருவாதிரை நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

 

  • சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருக்கிறார்.

 

  • சிவன் கோயிலில் முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம்.

 

  • மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர்.

 

  • ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது.

 

  • ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.

 

  • வயலூரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார்.

 

  • நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக உள்ளார். அ

 

  • ருணகிரி நாதருக்கு கல்யாண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட கல்யாணங்கள் நடைபெறும்.

 

  • திருப்புகழை பாடும் தன்மையை தந்தது வயலூர் முருகனே என்பதால் அருணகிரி நாதருக்கு இத்தலத்தில் விஷேச ஈடுபாடு. வாரியார் சுவாமிகளின் தனிப்பட்ட ஈடுபாட்டால் புகழ்பெற்ற முருகன் திருத்தலம்.

 

  • கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

 

  • அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

 

  • அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

 

திருவிழா: 

வைகாசி விசாகம் – 12

கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) – 7 நாட்கள்

பங்குனி உத்திரம் – 4 நாள் திருவிழா

தைப் பூசம் – 3 நாள்

வைகாசியில் நடைபெறும் சட்டத் தேர்விழாவுக்கு எண்ணற்ற பக்தர்கள் இங்கு வருவதுண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை,

மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை.

 

முகவரி:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

குமாரவயலூர்- 620102

திருச்சி மாவட்டம்.

 

போன்:

+91 431 2607 344, 98949 84960.

 

அமைவிடம் :

திருச்சி நகரிலிருந்து – 11 கி.மீ., தமிழகத்தில் மிக முக்கிய நகர் திருச்சி என்பதால் போக்குவரத்து வசதி எளிது. திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோயிலை சென்றடையலாம்.

Share this:

Write a Reply or Comment

1 × one =