May 17 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புள்ளம்பூதங்குடி

  1. அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்

தாயார்          :     பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி

தல விருட்சம்   :     புன்னை மரம்

தீர்த்தம்         :     ஜடாயு தீர்த்தம்

புராண பெயர்    :     பூதப்புரி

ஊர்             :     திருப்புள்ளம்பூதங்குடி

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு :

தசரத சக்கரவர்த்தியின் மகன் ராமபிரானாக அவதரித்தார் திருமால். சீதாபிராட்டியுடன் திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் ராமபிரானுக்கு முடிசூட்ட முடிவாயிற்று. கைகேயி தசரத சக்கரவர்த்தியிடம் பெற்ற வரத்தால் ராமபிரான் கானகம் செல்லும்படியாக ஆயிற்று. அவருடன் சீதாபிராட்டியும் இளைய பெருமாளும் சென்றனர். பஞ்சவடி என்னும் இடத்தில் இவர்கள் மூவரும் தங்கியிருந்த குடிலில் இருந்து சீதாபிராட்டியை இலங்கை வேந்தன் ராவணன் கவர்ந்து சென்றான். அவ்வாறு கவர்ந்து செல்லும் வழியில் அவனுடன் தன்னுடைய இறக்கைகளைப் பயன்படுத்தி போரிட்டார் கழுகுகளின் அரசர் ஜடாயு. அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். மயங்கிய நிலையிலும் ‘ராமா ராமா’ என்று அவரது உதடுகள் முனகிய வண்ணம் இருந்தன. அப்போது சீதாபிராட்டியைத் தேடி ராமபிரானும் இளைய பெருமாளும் அவ்விடத்துக்கு வந்தனர். ‘ராமா ராமா’ என்ற முனகல் சத்தம் கேட்டு, சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றனர் ராமபிரானும் இளைய பெருமாளும். கழுகரசனை அங்கு பார்த்தனர். ஜடாயு, அவர்களிடம் சீதாபிராட்டியை ராவணன் கவர்ந்து, தென் திசையில் சென்ற விஷயத்தையும் தான் எவ்வளவு போராடியும் பிராட்டியை மீட்க முடியவில்லை என்பதையும் கூறி வருத்தப்பட்டார். சற்று நேரத்துக்கெல்லாம் உயிர் துறந்தார் கழுகரசன்.

ராமபிரானுக்கு வருத்தம் மேலிட்டது. இருப்பினும் ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்ய எண்ணினார். ஜடாயு ராமபிரானின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு உற்ற நண்பன். நட்பின்படி பார்த்தால் ராமபிரானுக்கு பெரிய தந்தை. பொதுவாக ஒருவருக்கு ஈமக்கிரியைகள் செய்யும்போது, செய்பவரின் மனைவி உடன் இருக்க வேண்டும் என்பது விதி. இதை உணர்ந்த ராமபிரான் மானசீகமாக சீதாபிராட்டியை நினைத்தார். உடனே ராமபிரானுக்கு உதவி புரிய சீதாபிராட்டியின் மறு அம்சமாகிய பூமிபிராட்டி தோன்றினார். பூமிபிராட்டியுடன் இணைந்து ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார் ராமபிரான். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

 

கோயில் சிறப்புகள் :

  • எல்லா ராமர் கோயில்களிலும் ராமர் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இந்த வல்வில் ராமர் கோயிலில் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி புஜங்க சயன கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் சயனித்தவாறு பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

 

  • திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, “அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே’ என 10 பாசுரம் பாடினார்.

 

  • தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் “வல்வில் ராமன்’ என அழைக்கப்படுகிறார்.

 

  • கழுகரசனான ஜடாயு என்ற புள்ளுக்கு (பறவை) மோட்சம் அருளி ஈமக்கிரியை செய்த நிகழ்வைக் குறிக்கும் தலம் என்பதால் திருபுள்ளபூதங்குடி என்று பெயர் பெற்றது. (புள் – பறவை, பூதம் – உடல்). இத்தலத்தில் சோபான விமானத்தின்கீழ் ராமபிரான் சயன கோலத்தில் (பள்ளி கொண்ட கோலத்தில்) கிழக்கே திருமுகம் காட்டி அருள்பாலிப்பது சிறப்பானதாகும்.

 

  • வைணவ சம்பிரதாயத்தில் 2 பூதபூரிகள் உண்டு. பூதபுரி என்றால் பூத கணங்களுக்கு சாப விமோசனம் கிடைத்த இடம் என்பது பொருள். முதல் பூதபுரி – காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமானுஜர் அவதரித்த இத்தலத்தை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். இரண்டாவது பூதபுரி – புள்ளபூதங்குடி – ஆச்சாரியர்கள் சிறப்பித்தார்கள்

 

  • ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் நமக்குப் இறைவனின் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளை உணர்த்துவதாகவே தோன்றுகிறது. இத்தலத்தின் விபரம் விரிவாக பத்ம புராணம், ப்ரும்மாண்ட புராணம் இரண்டிலும் கூறப்பட்டுள்ளது.

 

  • க்ருத்ர ராஜன் என்ற மன்னன் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்தான். இத்தல பெருமாளை தரிசித்தான். அதன் காரணமாக இத்தலத்தில் உள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் என்ற பெயர் பெற்றது.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்,

திருப்புள்ள பூதங்குடி- 612301,

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 94435 25365

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து (17கிமீ) திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. கும்பகோணம், சுவாமிமலை, மருத்துவகுடி, ஆதனூர் வழியாக புள்ளபூதங்குடி சென்றடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

14 + 12 =