அருள்மிகு ஜெகந்நாத பெருமாள் கோயில் வரலாறு
மூலவர் : ஜெகந்நாதப்பெருமாள்
தாயார் : திருமங்கைவல்லி
தல விருட்சம் : பாரிஜாதம்
தீர்த்தம் : பிருகு புஷ்கரிணி
ஊர் : திருமழிசை
மாவட்டம் : திருவள்ளூர்
கடவுளின் அருளோடு, மகம் நட்சத்திரத்தில் உதித்த திருமழிசை ஆழ்வார் பிறந்த புண்ணிய பூமி இந்த திருமழிசை. இவர் திருமாலின் சக்ராயுதத்தின் அம்சமாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் புகழ் பெற்ற புண்ணிய கோயில்.
ஸ்தல வரலாறு :
திருமழிசை வைணமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப்படுவதால் அந்த அர்த்தத்தில் மழிசை எனப்பெயர் வந்தது. அத்துடன் இத்தலத்தின் திருமகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந்து இருப்பதால் `திரு’ என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு திருமழிசை என்று அழைக்கப்படுகிறது. மிகவும் புகழ்பெற்று விளங்கிய இந்தத் தலத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந்தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ்வார் தோன்றினார்.
ஒருமுறை அத்திரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் பிரம்மனிடம் சென்று பூலோகத்தில் தாங்கள் தவம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு தகுந்த இடத்தை காட்டுமாறும் வேண்டினர். பிரம்மன், தேவசிற்பியை அழைத்து ஒரு தராசைக்கொடுத்து அதன் ஒரு பக்கத்தில் திருமழிசை தலத்தையும், மறுபக்கத்தில் பூமியில் உள்ள பிற புண்ணியதலங்களையும் வைத்தார். அப்போது, திருமழிசைத்தலம் இருந்த தட்டு கனமாக கீழே இழுத்தபடியும், பிற தலங்கள் இருந்த தட்டு மேலெழும்பியும் இருந்தது.இக்காட்சியைக்கண்டு வியந்த பிரம்மரிஷிகள் திருமழிசைத்தலத்தின் மேன்மையை அறிந்து, பிரம்மனிடம் ஆசி பெற்று இங்கு வந்து தவமிருந்தனர். அவர்களுக்கு பெருமாள், அமர்ந்த கோலத்தில் ஜெகந்நாதராக காட்சி தந்தருளினார்.
இக்கோயில் யாரால் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் சில கல்வெட்டுகளால் இதன் தொன்மை தெரிகிறது. 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வந்ததாக சில கல்வெட்டுகள் கூறுகின்றன. திருமழிசையாழ்வார் 8ம் நூற்றாண்டை சேர்ந்தவராதலால் இக்கோயில் இந்த இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என தெரிகிறது. இக்கோயில் சோழ கட்டடக்கலையிலேயே அமைந்திருந்தாலும் பல்லவர்களின் கலைநயத்துடன் ஒரு மண்டபமும் இருக்கிறது.
கோயில் சிறப்புகள் :
- திருப்புல்லாணியில் சயனகோலம், பூரியில் நின்ற கோலத்தில் காட்சிதந்த பெருமாள், இங்கு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தந்ததால் இத்தலம் “மத்திய ஜெகந்நாதம்’, “பூர்ணஜெகந்நாதம்’ என்ற சிறப்பு பெயரைப்பெற்றுள்ளது.
- ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் புகழ் பெற்ற புண்ணிய க்ஷேத்ரம். பல்வேறு இந்து மத சமயத்தினரும் வாழ்ந்த செழிப்பான இந்த இடம் கி பி 1255ம் ஆண்டு கல்வெட்டில் கோவில்களுக்கு நிலம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது.
- மூலவராகவும் உற்சவராகவும் பெருமாள் காட்சி அளிக்கிறார்.
- இங்கு அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள், ருக்மணி சத்யப்பாமா சமேதராக கிழக்கு முகமாக அருள் பாலிக்கிறார்கள். அங்கு பிருகு மார்க்கண்டேய மகரிஷி தவகோலத்தில் சேவிப்பவர்களாக கர்ப்ப கிரகத்திலேயே உள்ளனர்.
- திருமகளும், என்கொல் என்னும் ஆழ்வார் பாசுரத்திற்கேற்ப தாயார் இத்தலத்தில் திருமங்கைவல்லியாக கட்சியிளிக்கிறரார்.
- தனி சன்னதியாக ஸ்ரீ பக்திஸாரர் எனப் பெயர் வழங்கப்படும் அருள்மிகு திருமழிசைப்பிரான், வைஷ்ணவி தாயார், தும்பிக்கை ஆழ்வார், அழகிய சிங்கர் சன்னதி, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனி சன்னதி, வாகன மண்டபம், பரமபத வாசல் என்று அனைத்து ஸ்வாமிகளும் ஆகம முறைப்படி அமைந்துள்ளது.
- திருமழிசை ஒன்றினை மட்டும் தரிசித்தால் கிட்டும் பலன் ஏனைய சேத்திரங்களுக்குச் சென்று கிடைக்கக்கூடிய பலன்களைவிட மேம்பட்டது என்று திருக்கச்சி நம்பிகள் தன் பாடல்களில் சுட்டிக்காட்டுகிறார்.
- இக்கோயிலில் தனி சன்னதியில் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர் வராகமுகத்தான் என அழைக்கப்படுகிறார். அவரை வழிப்பட்டால் வேண்டியது உடனே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
- கருவறை சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர், தனது வயிற்றில் ராகுவும், கேதுவும் பின்னியுள்ளபடி காட்சி தருகிறார். இவரை வணங்கிட ராகு, கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.
- ஜெகந்நாதப்பெருமாள் கோயிலிலிருந்து 10 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கே பெருமாள் வீற்றிருந்த பெருமாளாக அஷ்டலட்சுமியுடன் எழுந்தருளியிருக்கிறார். தன் வலப்பக்கம் ஸ்ரீதேவியும், இடப்பக்கம் பூதேவியும் மார்பில் இரு லட்சுமி மற்றும் கிரீடத்தில் 4 லட்சுமியுடனும் அருள்பாலிக்கிறார். இப்படி பெருமாள் அஷ்டலட்சுமியுடனும் எழுந்தருளியிருக்கும் தலம் வேறெங்கும் இல்லை.
திருவிழா:
ஆனியில் பிரம்மோற்சவம்,
ஐப்பசியில் மணவாள மாமுனி உற்சவம்,
தை மகத்தில் ஆழ்வார் விழா,
மாசியில் தெப்பத்திருவிழா.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், திருமழிசை – 602 107 திருவள்ளூர் மாவட்டம்.
போன்:
+91- 44 – 2681 0542
அமைவிடம்:
சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில், பூவிருந்தவல்லிக்கு மேற்கே 3 கி.மீ தொலைவில், சென்னை திருப்பதி பேருந்து சாலையில் அமைந்துள்ளது. இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து போக்குவரத்து வசதியும் உண்டு.