May 14 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் உத்தமர் கோவில்

  1. அருள்மிகு உத்தமர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்                      :     புருஷோத்தமன்

தாயார்                     :     பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி

தல விருட்சம்       :     கதலி (வாழை)மரம்

புராண பெயர்    :     கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்

ஊர்                            :     உத்தமர் கோவில்

மாவட்டம்             :     திருச்சி

 

ஸ்தல வரலாறு :

ஈசனைப் போலவே பிரம்மதேவனும் ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒருசமயம் ஈசன் என்று நினைத்து பிரம்மதேவனுக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினார் பார்வதிதேவி. இந்த சம்பவத்தால், இனியும் குழப்பம் வரக்கூடாது என்று எண்ணி ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்தார். இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதோடு மட்டுமல்லாமல் பிரம்மதேவருடைய கபாலமும் (மண்டை ஓடு) அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. ஈசனுக்கு படைக்கப்பட்ட உணவு அனைத்தும் கபாலமே எடுத்துக் கொண்டது. பசியால் வாடினார் ஈசன். இதன் காரணமாக அந்த கபாலத்தையே யாசகம் வாங்கும் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனர் கோலத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அப்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தபோது, திருமால், ஈசனின் பாத்திரத்தில் உணவு அளிக்கும்படி திருமகளிடம் கூறினார். திருமகளும் ஈசன் வைத்திருந்த கபாலத்தில் உணவிட்டாள். அதுவே பூரணமாக நிரம்பி ஈசனின் பசியைப் போக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரைப் பெற்றார். திருமாலும் பள்ளி கொண்ட கோலத்தில் ஈசனுக்கு காட்சி தந்தார்.

பிரம்மதேவருக்கு பூலோகத்தில் தனக்கு ஒரு கோயில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. திருமால், பிரம்மதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மதேவரும் இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டு தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மதேவரின் பக்தியை சோதிக்க எண்ணிய பெருமாள், கதம்ப மரத்தின் வடிவமாக அங்கு நின்று கொண்டார். இதை உணர்ந்த பிரம்மதேவர் கதம்ப மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். பிரம்மதேவரின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள், பிரம்மதேவருக்கு காட்சி கொடுத்து எப்போதும்போல் இத்தலத்தில் இருந்து தன்னை வழிபட்டு வருமாறு கூறினார். மேலும் பிரம்மதேவருக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இத்தலத்தில் தனியாக பிரம்மதேவருக்கு வழிபாடு இருக்கும் என்று கூறினார் பெருமாள். பிரம்மாவும் இத்தலத்தில் தங்கினார். பிற்காலத்தில் பிரம்மதேவருக்கு சந்நிதி எழுப்பப்பட்டது.

பிரம்மதேவருக்கு இடதுபுறத்தில் ஞான சரஸ்வதி தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞான சரஸ்வதியின் கையில் ஓலைச் சுவடி, ஜெபமாலை உள்ளது. பிரம்மதேவருக்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதி தேவிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் ஆயுள் கூடும். கல்வி சிறக்கும். குருப்பெயர்ச்சி காலத்தில் பிரம்மதேவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

இத்தல விமானத்தின் பெயர் உத்யோக விமானம். அதன் கீழ் கருவறையில் மூலவர் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். பூரணவல்லி தனிசந்நிதியில் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமிக்கும் தனிச்சந்நிதி உள்ளது. பெருமாளுக்கு பின்புறத்தில் மேற்கு பார்த்தபடி ஈசன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இவர் பிரகாரத்தில் பிட்சாடனர் கோலத்தில் (உற்சவர்) அருள்பாலிக்கிறார்.

 

கோயில் சிறப்புகள் :

  • சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் பிச்சாண்டார் கோவில் என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை உத்தமர் கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

 

  • பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன்,

 

  • பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம்.

 

  • சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுவதால் இத்தலம் சப்த குருத்தலம் என்ற சிறப்பைப் பெறுகிறது.

 

  • ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும்.

 

  • திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே ஆழ்வார்பட்டவர்த்தி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

 

  • படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை மேற்கொள்ளும் மும்மூர்த்திகளும், கதம்ப மகரிஷியின் கடுந்தவத்தின் காரணமாக தத்தம்தேவியருடன் காட்சியளித்தது இந்த உத்தமர்கோயிலில்தான்.

 

  • சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய 29-ஆவது திருவிளையாடலான பிச்சாண்டார் திருக்கோலம் பூண்டது இங்குதான். அதாவது சிவபெருமான், பிச்சாடனராக வந்து தன் தோஷம் நீங்கப் பெற்றது இத்திருக்கோயிலில்தான்.

 

  • பக்தர் ஒருவருக்காக பிரம்மா, சிவன், திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம், உத்தமர் கோயில். தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மா அருள்பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருநாளன்று சிவனும், பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிச் சிறப்பு.

 

  • இந்த கோயில் மட்டுமே நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகியோர் பதிகங்களைப் தேவாரத் திருத்தலமாகவும், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த 108 திவ்ய ஸ்தலங்களுள் 3-வது தலமாகவும் திகழ்கிறது. சைவர்களுக்கு ‘பிச்சாண்டார் கோயில்’ எனவும் வைணவர்களுக்கு இது ‘உத்தமர் கோயில்’ என்றும் திகழும் அதிசயக் கோயிலாகவும் இது விளங்குகிறது.

 

  • எண்ணற்ற சந்நிதிகளும் சிறப்புகளும் கொண்ட இந்த ஆலயத்தில் உள்ள தசரத லிங்கம் சிறப்பானது என்கிறார்கள். பிள்ளை வரம் வேண்டி இங்கு வந்து வழிபட்ட தசரத மன்னருக்கு ஈசன் பிள்ளை வரம் தந்ததால் தசரதன் உருவாக்கிய லிங்கம் இது என்கிறார்கள்.

 

  • இத்திருக்கோயிலில் வியாசர் காலத்தில் ஆஞ்சனேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டது, இடதுகாலை முன்வைத்து வலது காலைப் பின்வைத்து சர்வகாரியத்தையும் ஜெயம் செய்வதால், இங்குள்ள ஆஞ்சனேயர் ஜெய ஆஞ்சனேயர் எனப் பெயர் பெற்று விளங்கும் தனிச்சிறப்புக்குரியவர்.

 

  • மகப்பேறு வேண்டுவோர் இத்திருக்கோயிலில் ராமபிரானின் தந்தை தசரத மகாராஜா பூஜித்த தசரத லிங்கத்தை வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

 

  • கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர்.

 

  • தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.

 

  • பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு.

 

திருவிழா:

சித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா. கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி

அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோயில்,

பிச்சாண்டார்கோயில் (உத்தமர் கோயில்),

மண்ணச்சநல்லூர் வட்டம்,

திருச்சி மாவட்டம். 621 216

 

போன்:

0431- 2591486, 2591405.

 

அமைவிடம் :

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமர் கோயில்.

 

Share this:

Write a Reply or Comment

6 + 1 =