May 12 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடைக்கழி

  1. திருவிடைக்கழி முருகன் திருக்கோவில் வரலாறு

 

மூலவர்                    :      முருகன் (திருக்குராத்துடையார்)

தல விருட்சம்       :      குரா மரம்

தீர்த்தம்                    :      சரவண தீர்த்தம், கங்கை கிணறு

புராண பெயர்    :      திருக்குராவடி

ஊர்                              :      திருவிடைக்கழி

மாவட்டம்               :      நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு :

திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான். உயிர்களை காக்கும் பொருட்டு கீழச்சமுத்திரம் வந்து, மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை, வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தார்.  அசுரனாக இருந்தாலும் சிவபக்தன் என்பதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க பராசக்தியின் ஆலோசனைப்படி, முருகன் இத்தலத்திலுள்ள குராமரத்தின் அடியில் சிவனை நோக்கி தவமிருந்து பலனடைந்தார். குராமர நிழலில் அமர்ந்து சிவனை வழிபட்டதால் ‘திருக்குராவடி’ என இத்தலத்திற்கு பெயர் வந்தது. தரிசிப்போரின் பழி, பாவம் போக்கும் இத்தலமுருகனை, ‘திருக்குராத்துடையார்’ என கல்வெட்டுகள் கூறுகின்றன.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி தருகிறது. உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் தெய்வானை தனி சன்னிதியில் தவக்கோலத்தில் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி. தலவிருட்சம் குராமரம் தழைத்துக் காட்சி தருகிறது. முருகப்பெருமான் சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம் (பத்ர லிங்கம்) அமைந்துள்ளது. இதற்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். தனிச் சன்னிதியில் திருக்காமேஸ்வரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம். பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டி இடதுபுறம் செல்லும்போது சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்களை வழிபடலாம். உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியவற்றை வணங்கி தொழலாம்.

 

கோயில் சிறப்புகள் :

  • முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி.

 

  • சோழநாட்டுத் திருச்செந்தூர் எனப் போற்றப்படுகிறது இந்தக் கோவில்

 

  • அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

 

  • குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக விளங்குகிறது. மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாகவும் உள்ளது என்பது அதிசமான நிகழ்வு.

 

  • குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி.

 

  • இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம்.

 

  • இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.

 

  • திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

 

  • முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளியை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

 

  • இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர்.

 

  • சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

 

  • இந்த ஆலயத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, கோவில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் மட்டுமே காட்சி தருவார். ஆனால், இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகப்பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

 

  • கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

  • தெய்வயானைக்குத் தனிச் சந்நிதி; தவக்கோல தரிசனம்.

 

  • இங்கு தான் முருகன், தெய்வானைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல உள்ளது சிறப்பு.

 

  • முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், சிவனருளால் முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் ‘விடைகழி’ எனப்படுகிறது.

 

  • அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.

 

  • ஏழுநிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. ஆறடி உயரத்தில் முருகன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். சுவாமியின் வலதுகை அபயம் தரும் விதத்திலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் உள்ளன.

 

  • திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலம், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலம்,

 

  • சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் புறப்படுகிறது. வெள்ளிக்கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இந்த பாதயாத்திரை வழிபாட்டில் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து இங்கிருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர்.

 

  • இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.

 

  • தமிழ்நாட்டில் தல விருட்சம் சிறப்புப் பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று காஞ்சிமாவடி. மற்றது திருவிடைக்கழி குராவடி. இந்த குரா மரத்தடியிற்றான் ராகு முருகனைப் பூசித்து வரம் பெற்றதால் இது ராகுதோசம் நீக்கும் ஸ்தலம்  எனப்படுகிறது. இந்த குரா  மரத்தடி நிழலில் இன்றும் முருகன் விரும்பி உலாவுவதாக ஸ்தலபுராணம் சிறப்பிக்கின்றது.

 

  • ராகு என்பதை திருப்பி நோக்கினால்  குரா  எனவரும். எனவே, ராகு கிரகத்துக்கும் குராமரத்துக்கும் ஏதோ ஒரு வகை தொடா்பு இருப்பது புரிகிறது. இந்த ஊரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. அப்படித் தீண்டினாலும் நஞ்சு ஏறியாரும் மரணிப்பதில்லை

 

  • இந்தக் கோயிலில் நவக்கிரக சந்நிதியும் இல்லை

 

திருவிழா: 

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசத்தின் போது, சுவாமிமலையிலிருந்து நடைபயணமாக வருவது பெரிய திருவிழாவாக நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

 

முகவரி:  

அருள்மிகு முருகன் திருக்கோயில்,

திருவிடைகழி-609310

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

அமைவிடம் :

சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து மேற்குறிப்பிட்ட வழியாகவும், செம்பொன்னார்கோயில் வழியாகவும் இயக்கப்படும் பேருந்துகள் ஆலய வாசல் வரை செல்லும்.

 

Share this:

Write a Reply or Comment

four × 1 =