May 09 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஆய்க்குடி

  1. ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் )

உற்சவர்        :     முத்துக்குமாரர்

தல விருட்சம்   :     பஞ்சவிருட்சம்

தீர்த்தம்         :     அனுமன் நதி

ஊர்             :     ஆய்க்குடி

மாவட்டம்       :     தென்காசி

 

ஸ்தல வரலாறு :

பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி என அழைக்கப்பெற்றது. அதன் அருகே மல்லிபுரம் என்னுமிடத்தில் ஒரு குளம். அதனைத் தூர் அகற்றிச் செப்பனிட்டபோது, குளத்தின் அடியில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது அழகான சுப்ரமணியர் சிலை. அதனை எடுத்துக்கொண்ட மல்லன் என்ற பக்தர் ஒருவர், தமது வீட்டின் பின்புறத்தே ஆட்டுத் தொழுவத்தின் அருகில் கொட்டகை அமைத்து பூஜை செய்து வந்தார். ஒரு நாள்… அவரது கனவில் தோன்றிய ஸ்ரீ முருகப் பெருமான், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில் தம்மைப் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். மேலும், அதற்குரிய வழியைக் கேட்க, ஆட்டுத் தொழுவத்தில் இருக்கும் செம்மறியாடு நடந்து சென்று, அதுவே வழியைக் காட்டும் என்றும் அருளினார். அப்படியே அந்தச் செம்மறியாடும், ஓர் இடத்தில் சென்று நிற்க அங்கே, அரசும் வேம்பும் இணைந்திருந்த காட்சி கண்டார். அங்கேயே ஸ்ரீ முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து, ஓலைக் குடிசை எழுப்பி, சிறு கோயிலாக்கினார்.

இங்கே முருகப்பெருமான் ஒரு முகம் கொண்டு, நான்கு கரத்துடன் ஒரு பாலனாகத் திகழ்கிறார். முருகனுக்கு அருகே இருக்கும் மயிலின் முகம் இடது புறம் நோக்கியுள்ளது. ஓலைக் குடிசையாக இருந்த முருகன் கோயிலுக்கு பின்னர் வந்த சிற்றரசர்கள் திருப்பணிகள் செய்தனர். இருப்பினும் 1941ம் ஆண்டில், தற்போது நாம் காணும் இந்த வகையில் கோயில் சிறப்புற எடுத்துக் கட்டப்பட்டது.

மதுரையில் வாழ்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தை வரம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று, இறுதியாக ஆய்க்குடிக் கோவிலுக்கு வந்து பாலசுப்பிரமணிய சுவாமியைத் தனக்குக் குழந்தை பிறந்தால் முருகனுக்கு வைரவேல் சாற்றுவதாக வேண்டிக் கொண்டார். அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது. ஆனால் அவர் தனது வேண்டுதலை மறந்து போனார். முருகன் வணிகரின் மனைவியின் கனவில் தோன்றி வேண்டுதலை மறந்து போனதை நினைவுறுத்தினார். தன் மறதிக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரிய வணிகர் தன் வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக, வைரவேலை முருகருக்குச் சாற்றி ஆண்டுதோறும் படிப்பாயசம் நிவேதனம் செய்தார். இன்றும் இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு படிப்பாயசம் நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.

 

கோயில் சிறப்புகள் :

  • இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு,வேம்பு மாவிளக்கு, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்சவிருட்சங்கள் இக்கோயிலில் உள்ளன

 

  • சித்திரை மாதப் பிறப்பு முதல் சில தினங்களுக்கு உதய சூரியனது கிரணங்கள் மூலவர் மீது விழுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

 

  • சைவ, வைணவ ஒற்றுமை கருதி ராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வணங்க ஆரம்பித்தனர். எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியர “ஹரிராமசுப்பிரமணியர்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

 

  • இங்குள்ள நதிக்கு அனுமன் நதி என பெயரிடப்பட்டது. மூலவர் பாலசுப்பிரமணியர், இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

 

  • இங்கு ராமர் வந்து சென்றதாக கூறப்படுவதின் அடிப்படையில், மூலவருக்கு வைதீக ஆகமமுறையிலும், உற்சவருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

 

  • இங்குள்ள அனுமன் நதி கடுங்கோடையிலும் வற்றாத ஜீவநதியாக உள்ளது. இங்கு வந்து பாலசுப்பிரமணியரை வணங்கி வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறப் பெற்றவர்கள் பாயசத்தை நைவேத்யமாகப் படைத்து அதனை அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி (படிப்பாயசம்) சிறுவர்களுக்கு கொடுக்கின்றனர். சிறுவர்களின் வடிவில் சுவாமியே நேரே வந்து பாயசத்தை பருகுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

  • இங்கே குழந்தைகளுடன் முருகனும் சேர்ந்து படிப்பாயசம் சாப்பிடுவதாக தலமான்மியம் கூறுகிறது. ஒரு படி முதல் 12 படி வரையில் அரிசிப் பாயசம் செய்வது இங்கே பிரார்த்தனைகளில் முக்கியமானதாகும். இவர் பால சுப்ரமணியராக இருப்பதால், படிப்பாயசத்தில் சுக்கு, ஜீரகம், பாசிப்பருப்பு முதலியன சேர்க்கப்படுகின்றன.

 

  • இங்கே அரச இலை விபூதிப் பிரசாதம் சிறப்பு.

 

  • இந்தத் தலத்தின் முருகப் பெருமானை “வாழ்படச் சேனைப்பட’ என்னும் திருப்புகழால் அருணகிரிநாதர் பாடிப் பரவுகிறார். “பொங்கும் கொடிய சுற்றன்’ என்று தொடங்கும் திருப்புகழிலும் ஆய்க்குடி என்ற குறிப்பு உள்ளது.

 

திருவிழா: 

கந்தசஷ்டியின் போது 6 நாட்கள், சித்திரைப்பிறப்பு, வைகாசி விசாகம், புரட்டாசியில் சிறப்பு அபிஷேகம், தை மாதத்தில் பாரிவேட்டை, தைப்பூசம் மற்றும் திருக்கார்த்திகை.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 11 மணி வரை

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

ஆய்க்குடி- 627852

திருநெல்வேலி மாவட்டம்.

 

போன்:    

+91- 4633 – 267636

 

அமைவிடம் :

தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. 4 முனைச் சாலை வரும். அதில் வலப்புறம் திரும்பி 6 கி.மீ. தொலைவு சென்றால் ஆய்க்குடி கிராமம் வரும். செங்கோட்டையில் இருந்து கிழக்கில் சுமார் 13 கி.மீ. தொலைவு.

 

Share this:

Write a Reply or Comment

3 − 1 =