May 08 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சீர்காழி

  1. அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     பெரியநாயகி, திருநிலைநாயகி

தல விருட்சம்   :     பாரிஜாதம், பவளமல்லி

புராண பெயர்    :     பிரம்மபுரம், சீர்காழி

ஊர்             :     சீர்காழி

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு :

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அசைக்க கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

 

திருஞானசம்பந்தர் வரலாறு

திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். இக்கோயிலில் சிவபெருமான் சட்டைநாதராகக் காட்சித் தருகிறார். பைரவர் கோலத்திலும் நின்று ஆகாச பைரவர் அவதாரமாக அருள்பாலிக்கிறார்.  சீர்காழி இரட்டைத்தெருவில் வசித்து வந்த சிவபாதகிருதயர், புனிதவதி ஆகியோரது மனம் உருகிய வழிபாட்டின் மீது இரக்கம் கொண்ட இறைவன்  அவர்களின் வேண்டுகோளின்படி முருகப்பெருமானே மகவாகப் பிறக்கும்படி அருள்புரிந்தார். அதேபோன்று 7-ம் நூற்றாண்டில் ஒரு திருவாதிரை திருநாளன்று  சம்பந்தர் பிறந்தார். சம்பந்தர் மூன்று வயதாக இருந்தபொழுது ஒருநாள் தனது தந்தையுடன் சட்டைநாதர் கோயிலிலுக்குச் சென்றார். சம்பந்தரைக் கோயிலில் உள்ள பிரம்மதீர்த்தக்  குளக்கரையில் அமரவைத்துவிட்டு சிவபாதகிருதயர் குளத்தில் மூழ்கி மந்திரத்தை ஜெபித்தபடி நீராடினார். சிறிதுநேரம் ஆகியும் தந்தை வெளிவராததைக் கண்டு சம்பந்தர் மலை மீது காட்சியளிக்கும் தோணியப்பரை நோக்கி அம்மே, அப்பா என்று அழுதார். இதனைக் கண்ட சிவபெருமானும், பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் அழும் குழந்தையருகே வந்தனர். அப்போது சிவபெருமான் பார்வதிதேவியிடம் உனது குமரன் அழுகிறான். இவனுக்கு உன்னுடைய தனத்திலிருந்து பாலூட்டுவாயாக என்று திருவாய் அருளினார். அதேபோன்று பார்வதிதேவியும் தனத்திலிருந்து பாலைப் பொற்கிண்ணத்தில் எடுத்து குழந்தைக்கு ஞானப்பாலை ஊட்டினார். அது முதல் சம்பந்தராக இருந்தவர் திருஞானசம்பந்தராக  போற்றப்பட்டார். பின்னர் சுவாமி – அம்மன் ஒருசேரக் காட்சி தந்து மறைந்தனர்.

நீராடி வந்த சிவபாதகிருதயர், திருஞானசம்பந்தர் கடைவாயில் பால் ஒழுகுவதைக் கண்டு யாரிடம் பால் வாங்கிக் குடித்தாய் என்று கிண்ணத்தைப் பறித்துத் தூக்கியெறிந்தார். அந்த பொற்கிண்ணம் எதிரில் உள்ள சுவரில் மோதி நின்றது. தற்போதும் அந்த சுவடைக் கோயிலில் காணலாம். பின்னர் ஒரு சிறுகுச்சியால் திருஞானசம்பந்தரை அடித்து யாரிடம் பால் குடித்தாய் என்றார். அப்போது திருஞானசம்பந்தர் தனது சுட்டுவிரலால் அம்மையுடன் தோன்றிய அப்பனை சுட்டிக்காட்டி ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கும் முதல்  திருப்பதிகத்தைப் பாடினார். இதனை பார்த்த சிவபாதகிருதயர் தெய்வக் குழந்தையான திருஞானசம்பந்தரை வணங்கிக் கொண்டாடினார். அது முதல் வேதநெறி தழைத்தோங்க தலங்கள்தோறும் சென்று திருஞானசம்பந்தர்  சிவனை நோக்கித் திருப்பதிகங்கள் பாடிவரலானார்.

 

கோயில் சிறப்புகள் :

  • “காசியில் பாதி காழி” என்பது பழமொழி, காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். காசியை தரிசித்த புண்ணியம் இங்கு கிடைக்கும். இதுவே எல்லாவற்றிற்கும் மூல க்ஷேத்திரம்.

 

  • பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான்.

 

  • சீர்காழி பெரிய கோயில் எனும் சட்டநாதர் கோயில் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமானது. இக்கோயில் நான்கு கோபுர அமைப்புகளுடன் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வர், திருநிலைநாயகி அம்மன், சட்டநாதர், தோணியப்பர், உமாமகேஸ்வரி, திருஞானசம்பந்தர் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகின்றனர்.

 

  • திருஞானசம்பந்தர் சன்னதியில் பெருமான் லிங்க வடிவமாகவும் அம்மையார் ஸ்திரசுந்தரி என்ற திருநாமத்திலும் அருள்பாலிக்கிறார். மூன்று மூர்த்தங்களை உடையது திருக்கயிலாயத்தைத் தனக்கு சிறப்பிடமாகக் கொண்டு வீற்றிருக்கின்ற சிவபெருமான். குருமூர்த்தமாக மக்களுக்கு உபதேசம் செய்தும், லிங்க மூர்த்தமாக பல தலங்களில் கோவில் கொண்டருளியும் சங்கமமூர்த்தமாக அன்பர்களுக்கு வேண்டுவன அளித்தும் அருள்செய்து வருகிறார். இம்மூன்று மூர்த்தமாக பல கோயில்களில் தனித்தனியே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் இங்கு மூன்று மூர்த்தங்களாக ஒருங்கே அருள்பாலிப்பது சிறப்பு.

 

  • உலகமே கடல் நீரால் சூழ்ந்தபொழுது சீர்காழி மட்டும் அழியாமல் நின்றதைக் கண்ட சிவபெருமான், தோணியில் வந்து இங்கு கரை சேர்ந்ததால் தோணிபுரம் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு சீர்காழி தலமானது 12 காரணப் பெயர்களை கொண்டுள்ளது.

 

  • சிவன் – பார்வதி உருவ வழிபாடாகக் கயிலாய காட்சியாக வேறு எங்கும் காண முடியாத அற்புத தரிசன காட்சியாகும். தோணியப்பர், உமாமகேஸ்வரி சுவாமிகளுக்கு ஆண்டுக்கு 8 முறை தைலக் காப்பு எனும் சாம்பிராணித் தைலம் சாத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும்தான் இப்பெருமான் வீதியுலா எழுந்தருள்வார்.

 

  • காளிங்கன் என்னும் பாம்பு பூஜித்தமையால் ஸ்ரீகாளிபுரம் என்றும் நாளடைவில் மருவி காழி, சீர்காழியானது என்பர்.

 

  • உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது.

 

  • திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துதாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • திருஞானசம்பந்தர் இக்கோயிலில் சுவாமி சன்னதிக்கு இடப்பாகத்தில் அம்மன் சன்னதிகளுக்கு நடுவில் தனி சன்னதியில் மூலவராக அருள்பாலிக்கிறார். இவ்வமைப்பு அம்மையப்பருக்கு இடையே முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற சோமாஸ்கந்தவடிவை நினைவூட்டுவதாக உள்ளது. அதேபோல் உற்சவர் திருஞானசம்பந்தர், பிரம்மபுரீஸ்வர சுவாமி சன்னதியில் அருள்பாலிக்கிறார். திருஞானசம்பந்தர் சன்னதியில் பக்தர்களுக்கு நாள்தோறும் ஞானப்பால் வழங்கப்படுகிறது. அதே போல் திருஞானசம்பந்தருக்கு ஆண்டுக்கு 7 முறை சிறப்பு வழிபாடு, புறப்பாடு நடைபெறுகிறது.

 

  • காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்

 

  • திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது.

 

  • திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் கோயில் இது

 

  • சுந்தரர் இங்கு வந்தபோது, இஃது, சம்பந்தப்பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி.

 

  • திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தரை வணங்கி, அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி.

 

  • கணநாத நாயனார் அவதரித்த ஊர். இத்திருக்கோயில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

 

  • 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.

 

  • தலமரம் பாரிஜாதம், பவளமல்லி. தீர்த்தம் பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி என்று 22 தீர்த்தங்கள் உள்ளது.

 

திருவிழா:

சித்திரை திருவாதிரையில் பிரம்மோத்ஸவம் தொடங்கும். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

மலைக் கோவிலில் அருள்பாலிக்கும் உமா – மகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில்,

சீர்காழி- 609 110.

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91- 4364-270 235, +91- 94430 53195

 

அமைவிடம் :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் சட்டநாதர் கோயில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

twelve − 10 =