May 07 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பாபநாசம்

  1. அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பாபநாசநாதர்

அம்மன்         :     உலகம்மை, விமலை, உலகநாயகி

புராண பெயர்    :     இந்திரகீழ க்ஷேத்திரம்

ஊர்             :     பாபநாசம்

மாவட்டம்       :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு :

முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த பரமேஸ்வரன் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட, அகத்தியரோ தங்கள் திருமண காட்சி காண முடியாதே என வருந்த, பரமேஸ்வரன் இங்கு நடைபெறும் திருமணக்கோலத்தில் பொதிய மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்திலே சித்திரை மாதப்பிறப்பு தினத்தன்று வந்து காட்சி கொடுப்போம் என்று உறுதியளிக்கிறார். அவ்வாறே அகத்தியரும் அங்கிருந்து விடைபெற்று வரும் போது தாமிரபரணி தீர்த்தத்தை இறைவனிடமிருந்து தமது கமண்டலத்தில் பெற்று வந்துள்ளார்.

பின்னர் அகத்தியர் தென்பகுதி அடைந்து பரமேஸ்வரன் கூறியதை நிறைவேற்றிட, சித்திரை திங்களன்று திருமணக்கோலத்தில் இடபவாகனத்தில் அமர்ந்தபடி வானில் பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சியளித்து, அகத்தியரை பொதியமலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை இம்மலையின் உச்சியிலிருந்து தாமிரபரணி நதியாக பாய விட்டு விட வேண்டும் என்று கட்டளையிட்டார்.

இன்றும் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த வைபவம் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் தேதியன்று இரவு 12: 00 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆக அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது

 

உலகநாயகி அம்பாள் பெருமை :

பாபநாசத்துக்கு அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில், ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையாரான நமச்சிவாயக் கவிராயர் வாழ்ந்து வந்தார். இவர் உலகநாயகி அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தினம்தோறும் அர்த்தஜாமத்தில் பாபநாசம் கோயிலுக்குச் சென்று அம்பிகையை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இல்லம் திரும்பும் வழியில் அம்பாள் மீதான பக்திப் பாடல்களைப் பாடி வருவார். ஒருநாள் இவர் அம்பிகையை தரிசித்துவிட்டு திரும்பும்போது, அம்பிகை இவரைப் பின் தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில், இவர் பாடி வரும்போது தெறித்து அம்பிகையின் மீது பட்டது. அதே கோலத்துடன் அம்பிகை கோயிலுக்கு எழுந்தருளினார். மறுநாள் காலையில் அர்ச்சகர், பூஜைக்கு வரும்போது, அம்பிகையின் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மன்னரிடம் தெரிவித்தார். மன்னரும் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு, இந்த பாதகச் செயலைச் செய்தவரை தண்டிக்கவும் அறிவுறுத்தினார். அன்றிரவு மன்னர் கனவில் தோன்றிய அம்பாள், நடந்ததை விவரித்தார். மறுநாள் காலை கவிராயரை வரவழைத்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணினார் மன்னர். அதன்படி கவிராயரை அரண்மனைக்கு வந்து கவிபாட அழைத்தார் மன்னர். அதே நேரத்தில் அம்பாளின் கரத்தில் பூச்செண்டை வைத்து, பொன் கம்பிகளால் கட்டினார்.

கவிராயர், அரண்மனைக்கு வந்து கலித்துறையில் அந்தாதி ஒன்றைப் பாடினார். அம்பிகையின் கரத்தில் இருந்த பொன்கம்பிகள் ஒவ்வொன்றாக அறுந்து, பூச்செண்டு கவிராயரின் கைகளுக்குச் சென்று, கவிராயரின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது.

 

கோயில் சிறப்புகள் :

  • பெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளி அகத்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் திருமணக் கோலக் காட்சித் தந்தருளிய தலமிதுவாகும்

 

  • சுவாமிக்கு பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.

 

  • தன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் – பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் – வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் – பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் – பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம்.

 

  • தீர்த்தம் – தாமிர பரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம் முதலியன. (இவற்றுள் கல்யாண தீர்த்தமும் பைரவ தீர்த்தமும் மலையுச்சியில் உள்ளன.)

 

  • இத்தலத்து லிங்கத்திற்கு ” முக்கிளா லிங்கம்’ என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார்.

 

  • ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

 

  • அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை, இந்திரன் தனது குருவாக ஏற்றான். அசுரர்களின் நன்மை கருதி, அவர்களுக்காக, துவஷ்டா யாகம் ஒன்றை நடத்த எண்ணினார். அதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்து, யாகத்தை நடத்தி முடித்தார். தகவல் அறிந்த இந்திரன், குருநாதர் என்றும் பாராமல் அவரைக் கொன்றுவிட்டான். இதன் காரணமாக, இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷத்தில் இருந்து விமோசனம் பெற, இந்திரன் பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்தான். பாபநாசம் தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டால், தோஷம் நீங்கும் எனறு குரு பகவான் ஆலோசனை வழங்கினார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைப் பகுதிக்கு வரும்போதே தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரனின் தோஷத்தை நீக்கிய சிவபெருமான் என்பதால், இத்தல ஈசன் ‘பாபநாசநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், இத்தலத்துக்கு ‘இந்திரகீழ ஷேத்திரம்’ என்ற பெயரும் வந்தது.

 

  • உலகநாயகி, உலகம்மை, விமலை என்று அழைக்கப்படும் இத்தல அம்பாள், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . அவரது சந்நிதி முன்னர் உள்ள உரலில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதை இடிப்பது வழக்கம். இந்த மஞ்சளே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யும்போது பயன்படுத்தப்படும். அபிஷேக மஞ்சள் நீரை உட்கொண்டால், திருமண வரம், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

 

  • சித்த மருத்துவத்தின் தந்தையாகப் போற்றப்படும் அகத்தியர், பொதிகை மலையில் இருந்து பல மூலிகைகளைக் கண்டறிந்துள்ளார். சப்தரிஷிகளுள் ஒருவராகப் போற்றப்படும் அகத்திய முனிவர், ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற நூலைப் படித்த பிறகே ராவணனை போரில் வெல்லும் வித்தையை ராமபிரான் அறிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. பாபநாசத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் அகத்திய முனிவருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

 

  • பாபநாசநாதர் கோயிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகள் கொண்டதாக அமைந்துள்ளது. கோயிலில் உள்ள அனைத்து கருவறைகளையும் உள்ளடக்கி கருங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது

 

  • பாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .

 

  • கோயிலில் நடராஜப் பெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராஜர் ‘புனுகு சபாபதி’ என்று அழைக்கப்படுகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூச தினத்தில் நடராஜப் பெருமான், நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் அருளியுள்ளார். இதன் காரணமாக, தைப்பூச தினத்தில் இங்கு நந்திதேவருக்கு சந்தனக் காப்பு செய்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 

  • பொதிகை மலையில் உருவாகி, மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி, இக்கோயிலுக்கு அருகே சமநிலை அடைந்து பாய்கிறது. தினமும் உச்சிகால பூஜையின் போது நைவேத்தியம் செய்யப்பட்ட உணவு, தாமிரபரணி நதியில் உள்ள மீன்களுக்கு அளிக்கப்படுகிறது.

 

  • இங்கு சுவாமி, அம்மையோடு இடபவானத்தில் அமர்ந்தபடி திருமணக்கோலம் காட்டியருள, முன்னே அதனை தரிசித்தபடி அகத்தியரும் அவர் மனைவி லோபாமுத்ரையும் காட்சிதருகிறார்கள். சுவாமிக்கு குடைபிடித்தபடி குண்டோதரனும் இங்கு உள்ளார். இதுபோன்று ஒரே சன்னதியில் கல்சிற்ப மேனியராய் சுவாமி-அம்மையோடு இடபவாகனராய் காட்சியளிப்பது அபூர்வம்.

 

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.

 

  • இத்தலம் மாணிக்கவாசகரின் (திருவாசகத்திலும்) திருவாக்கிலும் இடம் பெற்றுள்ளன.

 

  • பங்குனியில் தெப்பத் திருவிழாவும், தேர்த் திருவிழாவும், சித்திரை முதல் நாள் அகத்தியருக்குத் திருமணக் காட்சி தரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

 

  • இக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒருவகை பிரசாதமும், அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகிறது.

 

திருவிழா: 

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்,

சித்திரைப் பிறப்பன்று அகத்தியருக்கு திருமணக்காட்சி விழா,

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்,

பாபநாசம்-627 551,

திருநெல்வேலி மாவட்டம்..

 

போன்:

+91- 4634 – 223 268.

 

அமைவிடம் :

திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பாபநாசத்திற்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் இருக்கிறது.

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

twenty − twenty =