அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : பரமஸ்வாமி
உற்சவர் : சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : ஜோதி விருட்சம், சந்தனமரம்.
புராண பெயர் : திருமாலிருஞ்சோலை
ஊர் : அழகர்கோவில்
மாவட்டம் : மதுரை
ஸ்தல வரலாறு :
ஒரு காலகட்டத்தில் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. யாரும் தவறு செய்யாமலும் இருந்தனர். ஒருநாள் ஒருவன் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டு வந்தான். அதைக் கண்ட தர்மதேவன், அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சிவபெருமான், உலகில் தர்ம, நியாயம் அழியாமல் காப்பது உன் பொறுப்பு என்று தர்மதேவனிடம் கூறி, அதற்குரிய உருவத்தை அளிப்பதாகச் சொன்னார். அதன்படி தர்மதேவனுக்கு பற்கள் வெளியே தெரியும்படியான உருவம் அளிக்கப்பட்டது. (தவறு செய்தால் தர்மதேவன் தண்டிப்பார் என்று மனிதர்கள் பயப்படும்படியான உருவம் அளிக்கப்பட்டது)
தனது உருவம் குறித்து வருந்திய தர்மதேவன், தான் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாவது அழகாக இருக்க வேண்டும் என்று இந்த அழகர் கோவிலில் திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டார்.
தர்மராஜனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சுந்தரராஜப் பெருமாளாகக் காட்சி கொடுத்தார். பெருமாளின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளுக்கு தினமும் ஒருவேளையாவது பூஜை செய்து, அவரை வலம் வர வேண்டும் என்று விண்ணப்பித்தார். அதன்படி இன்றும் இக்கோயிலில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். மேலும் அவரது விருப்பப்படி விஸ்வகர்மாவால் சோமசந்த விமானம் (வட்ட வடிவம்) கொண்ட கோயில் கட்டப்பட்டது.
வைகுண்டத்தில் திருமாலைக் காணாமல் திருமகள் அவரைத் தேடி அழகர் கோவில் வந்தார். பெருமாளுடன் திருமகளும் இத்தலத்தில் தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், திருமகளும் பெருமாளைக் கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். பெருமாள், பிராட்டியின் திருமணக் கோலம் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டதால், அழகர் ‘கள்ளழகர்’ ஆனார். இதனாலேயே பெருமாளை நம்மாழ்வார், ‘வஞ்சக் கள்வன் மாமாயன்’ என்று போற்றுகிறார்.
அழகர் ஆற்றில் இறங்குதல்:
திருமால் இவ்வுலகை அளக்க தனது திருவடியைத் தூக்கினார். அப்போது திருமாலின் தூக்கிய திருவடிக்கு பிரம்மதேவர் பூஜைகள் செய்தார். அப்போது திருமாலின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதில் இருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. இது புனித தீர்த்தமாகக் கருதப்படுவதால் இந்த தீர்த்தத்தில் அமர்ந்து சுபதஸ் மகரிஷி திருமாலை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார். அச்சமயத்தில் மகரிஷியைக் காண துர்வாச முனிவர் வந்தார். திருமால் நினைப்பில் இருந்த மகரிஷி துர்வாச முனிவரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர், மகரிஷியை தவளையாக (மண்டூகம்) மாறும்படி சபித்தார். தனது நிலையை எடுத்துக் கூறிய மகரிஷி, தனக்கு சாப விமோசனம் அருளும்படி துர்வாசரை வேண்டினார். அதற்கு துர்வாசர், “வேதவதி என்ற வைகை ஆற்றில் தவம் செய். அழகர் கோவிலில் இருந்து பெருமாள் வரும் சமயத்தில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார்.
அழகர் கோவிலில் இருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை அணிந்து கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். சித்திரை பௌர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் கோவிலில் இருந்து மதுரை வந்து மீண்டும் கோயில் திரும்பிச் செல்லும் வரை அழகர் 7 வாகனங்கள் மாறுகிறார்.
இக்கோயிலின் ராஜ கோபுரம் முழுமை அடையவில்லை. ஆரிய மண்டபம், கல்யாண சுந்தரவல்லி தாயார் சந்நிதி, திருக்கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளன.
மீனாட்சி கல்யாணத்துக்கு மதுரை வரும் கள்ளழகர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் புறப்படுகிறார்.
கோயில் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலா யோக நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவற்றைக் கொண்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
கோயில் சிறப்புகள் :
- பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
- இத்தலத்தில் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பு.
- இங்கே பெருமாள், சுந்தரராஜராக அருள் பாலிக்கிறார். இந்தக் கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் ஆனதாகும்.
- பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள்.
- ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்களில் சொல்லப்படுகின்றது.
- இக்கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது.
- சைவ, வைணவ பேதம் இல்லாமல் இத்தலத்தில் ஆராதனை நடைபெறுகிறது.
- சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்று அழைக்கப்படும் இத்தலம் இளங்கோவதியரையர் என்னும் முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது.
- தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருப்பது தனிச்சிறப்பு.
- கருப்பண்ணசுவாமி : இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
- அழகர் கோயில் தோசை காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது
- நூபுர கங்கை : சிலம்பாறு – ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.
- பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் .சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
- மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் “கள்ளழகர்’ ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், “வஞ்சக்கள்வன் மாமாயன்’ என்கிறார்.
- சித்திரைத் திருவிழா தொடங்கியதும், அழகர் முன்பு திருவுளச்சீட்டு எழுதிப் போடப்படும். சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை என எழுதப் பட்டிருக்கும் அந்தச் சீட்டுகளில் ஒன்றை, அழகரை வேண்டிக்கொண்டு எடுக்கவேண்டும். எடுக்கப்படும் சீட்டினில் எந்த நிறம் குறிபிடப் பட்டுள்ளதோ, அந்த நிறத்திலான பட்டுத் துணியை உடுத்திக்கொண்டு, வைகையில் எழுந்தருள்வார் அழகர்.
திருவிழா:
சி்த்திரைத் திருவிழா – 10 நாட்கள்
ஆடிப் பெருந்திருவிழா – 13 நாள்
ஐப்பசி தலை அருவி உற்சவம் – 3 நாள்
மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில்,
அழகர் கோவில்- 625 301
மதுரை மாவட்டம்.
போன்:
+91 – 452-247 0228
அமைவிடம் :
அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ளது