April 23 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவாலங்காடு

  1. அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்

அம்மன்         :     வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள்

தல விருட்சம்   :     பலா, ஆலமரம்

தீர்த்தம்         :     முத்தி

ஊர்             :     திருவாலங்காடு

மாவட்டம்       :     திருவள்ளூர்

 

ஸ்தல வரலாறு :

 

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம் என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இதைக்கண்ட காளி இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள் முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும் என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

 

புனிதவதி என்ற அம்மையார் காரைக்கால் எனும் ஊரில் பெருவணிகருக்கு தவப் புதல்வியாய் பிறந்தாள். நாகப்பட்டினத்து வணிக நீதிபதியின் மகனான பரமதத்தனுக்கும் புனிதவதிக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடுந்ததும் புதுமணத் தம்பதியினரை தனதத்தனார் தனிக்குடித்தனம் அமர்த்தினார். பரமதத்தனின் இல்லம் தேடி உதவி வேண்டி வந்தவர் ஒருவர் அவரிடம் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். அக்கனிகளை அவர் புனிதவதியிடம் ஒப்படைத்தார். அவ்வேளையில் பரம தத்தனின் இல்லம் தேடி சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் அமுதுண்ண வந்தார். அவ்வேளையில் அமுது ஆகாததால் மாங்கனிகளுள் ஒன்றை கொடுத்து அனுப்பி வைத்தார் அவ்வம்மையார். பின் கணவன் உணவருந்தும் வேளையில் இன்னொரு கனியை அமுதுடன் படைத்தார். கனி சுவை மிகுந்து காணப்பட்டதால் மீண்டும் சுவைக்க மற்றொரு கனியையும் கேட்டார். செய்வதறியாது திகைத்த அம்மையார் சிவனை வேண்டினார். இறைவனருளால் இன்னொரு கனியையும் பெற்றாள். கணவன் இக்கனி எப்படி வந்ததென வினவினான். சிவனருளால் கனி கிட்டியதாக அம்மையார் கூறினார். அம்மையார் பதிலில் திருப்தியடையாத பரமதத்தன் அப்படியென்றால் சிவனிடம் வேண்டி இன்னொரு கனி பெற்றித் தருமாறு கேட்க சிவனருளால் மீண்டும் ஒரு கனி தோன்றி மறைந்தது.

 

அம்மையாரின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து அவரிடமிருந்து ஒதுங்கி வாழ தீர்மானித்தார். அதுமுதல் தன் இல்லற உறவுகளின் தொடர்புகளை அறுத்து வாழ்ந்தான். இதனிடையே வணிக நிமித்தம் வெளியூர் சென்ற வேளையில் பாண்டி நாட்டு ஒரூரில் மறுமணம் செய்தான். மறுமண வாழ்க்கையின் மூலம் ஒரு பெண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தனர் . அக்குழந்தைக்கு புனிதவதியென்று பெயர் சூட்டி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். இதனிடையே புனிதவதியாரின் பெற்றோர்கள் தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் மருமகனின் இருப்பிடம் சென்றடைந்தனர். பரமதத்தரோ தன் மனைவி மகளுடன் அம்மையாரின் காலில் வீழ்ந்து வணங்கினார்கள். தன்னிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்த கணவனின் செய்கை பிடிக்காத புனிதவதியார் தன் உடலை வருத்தி பேய் உருக்கொண்டு அம்மையார் கயிலாயம் வரை சென்று திருக்கயிலாயத்தை மிதிக்க கூடாது என்று தனது தலையால் நடந்து சென்றடைந்தார். தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார். பெருமான் புனிதவதியாரை அம்மையே என்றழைக்க அம்மையார் சிவபெருமானை அப்பா என்றழைத்தார். என்னவரம் வேண்டுமென்று வினவ அம்மையார் பிறவாமை வரம் வேண்டுமென்றும் மீண்டும் பிறந்தால் ஐயனை மறவாதமனம் வேண்டுமென்றும் ஐயனின் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினார். அம்மையார் திருவாலங்காட்டில் சென்றமர்க என்று இறைவன் அருளினார். அம்மையாரும் திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடும் பாடல்கள் பாடி இறைவனின் காலடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

கோயில் சிறப்புகள் :

 

  • சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலம்.

 

  • நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை. பஞ்ச சபைகளில் நடராஜர், இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.

 

  • 63 நாயன்மார்களுள் ஒருவர் காரைக்கால் அம்மையார். இவர் ஈசனை தரிசிக்க கைலாயத்துக்கு தலைகீழாக நடந்து சென்றார். அப்போது ஈசன் இவரை, “அம்மையே” என்று அழைத்தார். பின்னர் “யாது வரம் வேண்டும்?” என்று கேட்டார், அப்போது காரைக்கால் அம்மையார் ஈசனிடம், “பிறவாமை வேண்டும், அப்படியே பிறந்தாலும் உனது நடனத்தைக் காணும் பேறு வேண்டும்” என்றார். ஈசனும் அவ்வண்ணமே அருள் செய்தார். அதன்பிறகு திரு ஆலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், மூத்த திருப்பதிகம் பாடினார்.

 

  • சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல தீர்த்தம் தருகின்றனர். காளியுடன் சிவன் போட்டி நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தீர்த்தம் தரப்படுகிறது.

 

  • வடஆரண்யம் என்றால் ஆலமரக்காடு என்று பொருள்படும். பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது. இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

 

  • இங்குள்ள அம்பாளை, “சமிசீனாம்பிகை’ என்பர். “சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’ இவளது விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ள தால், இப்படி ஒரு பெயரை சூட்டினர்.

 

  • கிழக்கில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார்.

 

  • தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள், சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

 

  • இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

 

  • மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.

 

  • அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும்

 

  • பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன.

 

  • பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார்.

 

  • இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும் சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது.

 

  • இரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

 

  • காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு முத்தபதிகம் 22 ம் திருவிரட்டை மணிமாலையென 20 ம் அற்புத திருவந்தாதி 101 பாடல்களுமென 143 பாடல்களைப் பாடியுள்ளார்.

 

  • காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய திருஞானசம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் தங்கினார் அன்று இரவு துயிலும்போது அவர் கனவில் வந்த இறைவன் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • திருவாலங்காடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் இரண்டு ஊர்கள் உண்டு. இரண்டு ஊர்களிலும் வட ஆரண்யேச்வர் கோவில் உண்டு. இரண்டு ஆலயங்களிலும் வண்டார்குழலி என்பது தான் அம்மன் பெயர்..இரண்டும் புகழ் பெற்ற இரண்டு சிவ ஸ்தலங்கள் ஆகும். இரண்டாவது திருவாலங்காடு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ளது.

 

திருவிழா:

மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் நான்கு கால வழிபாடுகள், நடராசருக்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. பங்குனியில் பெருவிழா, ஆடி அமாவாசை கழிந்த செவ்வாய் முதல் அடுத்த செவ்வாய் வரை பத்ரகாளியம்மனுக்கு திருவிழா நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்,

திருவாலங்காடு-609 810,

திருவள்ளூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 44 2787 2074, 99407 36579

 

அமைவிடம் :

சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

five × one =