அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கழுகுன்றம்

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்

அம்மன்         :     திரிபுரசுந்தரி

தல விருட்சம்   :     வாழை மரம்

தீர்த்தம்         :     சங்குதீர்த்தம்

புராண பெயர்    :     கழுகுன்றம், திருக்கழுகுன்றம்

ஊர்             :     திருக்கழுகுன்றம்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு :

வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்ய, அந்த மலையின் மீதே சிவன் லிங்க ரூபமாக அருள்பாலிக்கும் தலமே திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில். முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில் வந்து வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது

மிருகண்டு முனிவர்- மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தைஇல்லை. அவர்கள் ஈசனை நோக்கி தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார். இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர். மகன் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயனுக்கு 16வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமன் வந்தான். எமனைக் கண்டதும் மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.

எமன், பாசக்கயிறை வீச, அந்த கயிறு மார்க்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான். பின்னர் மார்க்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்க்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம்.அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். குளத்தில் நீராடினார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்க்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது. இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

 

மலைக்கோவில்:

மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன. இப்போது அவைகள் வருவதில்லை.

மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் வழியாகவே கீழே இறங்கி வரலாம். ஆயினும் கீழே இறங்குவதற்கு மற்றொரு பாதையும் உள்ளது. அவ்வழியே இறங்கி வந்தால் பல்லவர் மகேந்திரவர்மன் காலத்திய (கி. பி. 610 – கி.பி. 640) குடைவரைக் கோவில் ஒன்றுள்ளதைக் காணலாம். கோவிலினுள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளது.

தாழக்கோவில்:

இக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுட்ன் அமைந்துள்ளது. இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோகுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. 4 கால் மண்டபத்தையடுத்து 2வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

2வது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்டஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை. இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது. அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள்.

 

கோயில் சிறப்புகள் :

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும்.

 

  • இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் ‘வேதகிரி ‘ எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

 

  • மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.

 

  • பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர், என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர்.

 

  • மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்

 

  • சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம்

 

  • வேதமே மலையாக அமைந்த தலம்

 

  • கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம்

 

  • இறைவன் காதலித்து உறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம்

 

  • என்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.

 

  • உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் புகழப்பெற்ற தலம்.

 

  • சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம்.

 

  • மார்க்கண்டன் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்ற தலம்.

 

  • சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது. மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்த்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சங்கு பிறந்து கொண்டிருப்பதால், சங்கு தீர்த்தம் எனப் பெயர்பெற்றது.

 

  • வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார்.

 

  • ஈசனை இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து, சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

 

  • தேவாரம் பாடிய மூவரும் இம்மலையே சிவரூபமாக எண்ணி அதன் மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிந்தபடியே பதிகம் பாடினர். அவர்கள் அவ்வாறு பாடிய இடம் ‘மூவர் பேட்டை’ என்று வழங்கப்படுகிறது. இங்கு மாணிக்கவாசகரையும் சேர்த்து நால்வர் கோயில் ஒன்று உள்ளது.

 

  • ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அறுபத்து மூவருடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி கிரிவலம் வரும் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

 

  • மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் 1. இந்திர தீர்ததம, 2. சம்பு தீர்த்தம், 3. உருத்திர தீர்த்தம், 4. வசிட்ட தீர்த்தம், 5. மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், 7. மார்க்கண்ட தீர்த்தம், 8. கோசிக தீர்த்தம், 9. நந்தி தீர்த்தம், 10. வருண தீர்த்தம், 11. அகலிகை தீர்த்தம், 12. பட்சி தீர்த்தம்

 

  • இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

 

  • அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.

 

  • அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது

 

  • இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார்.

 

  • இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா நடைபெறுகிறது.

 

  • பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.

 

திருவிழா: 

சித்திரை பெருவிழா – 10 நாட்கள் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஆடிப்பூரம் – அம்பாள் உற்சவம் -10 நாட்கள்

 

திறக்கும் நேரம்:

அடிவாரக் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

மலைக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்..

 

முகவரி:  

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்,

திருக்கழுக்குன்றம் – 603109,

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91-44- 2744 7139, 94428 11149

 

அமைவிடம் :

மாமல்லபுரம் சாலையில் திருக்கழுக்குன்றம் இருப்பதால் செங்கல்பட்டிலிருந்து பேருந்து மூலம் திருக்கழுகுன்றம் சென்றடையலாம். சென்னை, காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருக்கழுகுன்றத்திற்கு பஸ் வசதி நிறைய உண்டு.

 

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

three × three =