April 15 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… குளித்தலை

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்          :      கடம்பவனேஸ்வரர்

உற்சவர்         :      சோமாஸ்கந்தர்

அம்மன்          :      முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள்

தல விருட்சம்   :      கடம்ப மரம்

தீர்த்தம்          :      காவிரி, பிரம்மதீர்த்தம்

புராண பெயர்    :      கடம்பந்துறை, குழித்தண்டலை

ஊர்              :      குளித்தலை

மாவட்டம்       :      கரூர்

 

ஸ்தல வரலாறு :

தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர்.

 

 

அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

 

கோயில் சிறப்புகள் :

  • சிவன் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.

 

  • கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.

 

  • காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளையில் திருஈங்கோய்நாதர் என்பது இங்கு சொல்லப்படும் சிறப்பாகும். அதாவது, குளித்தலை கடம்பரை காலையிலும், அய்யர் மலை சொக்கரை மதியமும், மாலையில் முசிறி திருஈங்கோய்மலை நாதரையும் வழிபட்டால், காசிக்கு போனதற்குச் சமம் என்பர்.

 

  • கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதா யுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.

 

  • சிவன் சாபவிமோசனம் கொடுத்தபோது, சப்த கன்னியர், அசுரனை அழித்துத் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டனர். சிவன் சப்த கன்னிகைகளுக்குப் பாதுகாப்பாக இருந்து, அசுரனை அழித்தார். சிவன் இத்தலத்தில் சப்தகன்னிகைகளுக்குப் பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம்.

 

  • சுவாமிக்கு நேர்பின்புறம் உள்ள சாமுண்டியை, துர்க்கையாக வழிபடுகின்றனர். துர்க்கைக்கு தனிச்சன்னதி இல்லை. பெண்கள், துர்க்கை வழிபாட்டை சிவன் சன்னதி முன்பு செய்கின்றனர்.

 

  • இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள விமானம் திரிதளம். ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. சிவன் வடக்கு நோக்கி இருப்பதால், கோஷ்டத்தின் பின்புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி உள்ளார். வழக்கமாகத் தெற்கு நோக்கி உள்ள சண்டிகேஸ்வரர் மேற்கு நோக்கியும், வடக்குப் பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு நோக்கியும் உள்ளனர். பிரகாரத்தில் உள்ளே நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி, தெய்வானை உள்ளனர்.

 

  • சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். “ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்’ என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார். இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருக்கின்றனர்.

 

  • இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.

 

  • அகத்தியர், கண்ணுவ முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர்.

 

  • அம்பாள் முற்றிலாமுலையம்மை தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறாள். இச்சன்னதிக்கு முன்புறம் “பரமநாதர்’ காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார்.

 

  • ‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்பது பொருந்தமேயாகும். பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்தவனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைத்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தலவிருட்சமாக இருக்கிறது

 

  • தைப்பூச திருவிழாவில் கடம்பர் கோவில், கடம்பவனேஸ்வரர் கோவில், ராஜேந்திரம் மத்யாகனேஸ்வரர் கோவில், அய்யர்மலை ரத்தினகிரிஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை, மரகதீஸ்வரர் கோவில், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில், வெள்ளுர் திருக்காமேஸ்வரர் கோவில், பெட்டவாய்த்தலை மத்தியார்ஜூனேஸ்வரர் கோவில் ஆகிய 8 கோவில்களில் இருந்து சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி கொடுப்பது வேறு எங்கும் காண கிடைக்காத அரிய காட்சி ஆகும்.

 

 

திருவிழா: 

மாசியில் 13 நாட்கள் பிரம்மோற்ஸவம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்,

குளித்தலை – 639 104.

கரூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4323 – 225 228

 

அமைவிடம் :

கரூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் குளித்தலை இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்று விடலாம்.

 

 

 

Share this:

Write a Reply or Comment

5 × 3 =