April 15 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பட்டூர்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர்

அம்மன்         :     பிரம்மநாயகி

தல விருட்சம்   :     மகிழமரம்

தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம்

புராண பெயர்    :     திருப்பிடவூர், திருப்படையூர்

ஊர்             :     சிறுகனூர், திருப்பட்டூர்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு :

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன் ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநாய அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.

 

கோயில் சிறப்புகள் :

  • மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் 15 16 17 ஆகிய நாட்களில் காலையில் சூரியக் கதிர்கள் பிரம்மபுரீஸ்வரர் மீது பட்டு வணங்குகிறது. அம்பாள் பிரம்ம நாயகி மற்றும் பிரம்ம சம்பத்கவுரி. அம்பாள் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது.

 

  • இத்தலம் ஒரு சிவனுடைய தலமாக இருந்தாலும் இங்குள்ள பிரம்மாவின் சந்நிதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூலவருக்கு வடக்கு பக்கத்தில் தனிச் சன்னதியில் ஆறேகால் அடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் அருள் பாலிக்கிறார் பிரம்மா. இந்தியாவிலேயே மிகப் பெரிய பிரம்மா இவர்தான்.

 

  • சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என வரிசையாகத் தரிசிக்கலாம்.

 

  • நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.

 

  • நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

 

  • சூரபதுமனை அழிக்க முருகக்கடவுள் படை திரட்டினார். படை வீரர்களுடன் அவர், தலங்கள் பலவற்றிலும் தங்கிச் சென்றார். அப்படி வருகிற வழியில், சிவபூஜை செய்வதற்காக முருகக் கடவுள் தங்கிய திருவிடம், திருப்படையூர் என அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் திருப்படவூர், திருப்பிடவூர் என்றெல்லாம் மருவி, தற்போது திருப்பட்டூர் எனப்படுகிறது. குருவின் கடாட்சம் பூரணமாக நிறைந்திருக்கிற அற்புதத் திருவிடம் திருப்பட்டூர்

 

  • குரு பிரம்மாவும், குரு விஷ்ணுவும், குரு பரமேஸ்வரனும் தரிசனம் தந்து அருளாட்சி செய்கிற இந்தத் திருப்பட்டூரில்… அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா எனப் பெயர் பெற்ற, பிரணவ மந்திரத்தை எடுத்துரைத்த, ஞானகுரு என்று அனைவராலும் போற்றப்பட்ட கந்தப் பெருமானும் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பதால், குருமார்கள் அனை வரின் அருட்கடாட்சமும் ததும்பி நிற்கிற திருவிடமாக மகிமை பெற்றிருக் கிறது திருப்பட்டூர்.

 

  • இங்கே, முருகன் காட்சி தருகிற விதத்தில் ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக, முருகக்கடவுளின் வலது திருக்கரத்தின் கீழே மயிலின் திருமுகம் அமைந்திருப்பது போலத்தான், விக்கிரகத் திருமேனி வடிக்கப்பட்டிருக்கும். இந்த மயிலை, தேவ மயில் என்பார்கள். இந்தத் திருப்பட்டூர் தலத்தில், அழகன் முருகனின் இடது கரத்தின் கீழே, மயிலின் திருமுகம் இருப்பது போல், விக்கிரகத்திருமேனி வடிக்கப்பட்டிருக்கிறது. காண்பதற்கு அரிதான திருக்கோலம் இது என்கின்றன ஞானநூல்கள். அதேபோல், இடது கரத்துக்குக் கீழே முகம் காட்டுகிற மயிலை, அசுர மயில் என்று சொல்வார்களாம். சூரபதுமனை அழிப்பதற்காகப் படை திரட்டி, தங்கிச் சென்ற திருப்படையூர் என்கிற திருப்பட்டூர் திருத்தலத்தில், அசுர மயிலாக இடம் மாறிக் காட்சி தருகிற அற்புதக் கோலத்துடன் முருகப்பெருமானைத் தரிசிப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர்

 

  • இக்கோயிலிலுள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்று அழைக்கப்படுகிறார் வள்ளி தெய்வானையுடன் (கிரியா இச்சா சக்திகளாக) இக்கோயிலில் காட்சியளிக்கிறார். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீசுவரர் என்ற பெயரில் உள்ளார்.

 

  • பெரிய புராணத்தில் வரும் வரலாற்றுக்குச் சான்றாக – இத்தலத்தில் உள்ள சாஸ்தா – ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார்.

 

  • சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனைப் பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை சாஸ்தா அய்யனார் என்று அழைக்கப்படும் மாசாத்தய்யனாரைக் கொண்டு இத்திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் சிவபெருமான். பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு திருப்பட்டூரில் அய்யனாருக்கு மிகப்பெரிய கற்கோயில் அமைந்துள்ளது. ஞான உலா அரங்கேற்றிய அய்யனார் என்ற பெயரில் கையில் அரங்கேற்றம் செய்த ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு காலகட்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பலர் இங்கு வந்து போரில் வெற்றி பெற வேண்டியிருக்கிறார்கள். பின்னர் மாபெரும் வெற்றிகளைப் பெற்று அவர்களின் குலதெய்வமாக அய்யனாரை வணங்கியிருக்கின்றனர்.

 

  • கால பைரவர் பொதுவாக அனைத்து சிவன் கோவிலிலும் வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி இருப்பார். ஆனால் இக்கோவிலில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளது போல் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.

 

  • திருநாவுக்கரசர் திருஅதிகை வீரட்டானம் தலத்திற்குரிய பதிகத்தில் இக்கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுந்தரர் திருவாரூர் தலத்திற்குரிய பதிகத்தில் இத்தலத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 

  • ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். இருப்பினும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.சூரியனுக்குரிய ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.

 

  • ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

 

  • பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் “பதஞ்சலி பிடவூர்’ எனக் கூறப்பட்டுள்ளது.

 

  • சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

 

  • பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

 

திருவிழா: 

இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30- மதியம் 12 மணி,

மாலை 4- இரவு 8 மணி.

 

முகவரி:

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,

சிறுகனூர், திருப்பட்டூர்-621 105,

திருச்சி மாவட்டம்.

 

போன்:

+91 431 2909 599

 

அமைவிடம் :

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பஸ்களில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

 

 

May be an image of 1 person and temple

 

 

Share this:

Write a Reply or Comment

seventeen − 15 =