April 14 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தாடிக்கொம்பு

அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     சவுந்தர்ராஜ பெருமாள்

தாயார்          :     சவுந்திரவல்லி

தல விருட்சம்   :     வில்வ மரம்

தீர்த்தம்         :     குடகனாறுநதி.

புராண பெயர்    :     தாளமாபுரி

ஊர்             :     தாடிக்கொம்பு

மாவட்டம்       :     திண்டுக்கல்

 

ஸ்தல வரலாறு :

மாண்டூகம் என்றால் வடமொழியில் தவளை என்று பொருள்.கோயிலின் தல புராணங்கள் படி தவளையாக மாறும் படியான சாபத்தை பெற்ற மாண்டூக முனிவர் தனது தவளை வடிவம் நீங்கி, மீண்டும் பழைய நிலையை பெறுவதற்கு இந்த தாடிக்கொம்பு தலத்திற்கு வந்து தவம் இயற்றினார்.

அப்போது தாலாசுரன் என்கிற அரக்கன் மாமுனிவரை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதனால் வருந்திய முனிவர் தனது துன்பத்தை போக்குமாறு திருமாலை நினைத்து வேண்டினார். – மாண்டூக முனிவரின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் மதுரை கள்ளழகர் வடிவில் வந்து அசுரனை வதம் செய்து முனிவரின் சாபத்தை போக்கி அருளினார். தனது துன்பத்தைப் போக்கிய பெருமாள் இத்தலத்திலேயே தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் புரியுமாறு முனிவர் வேண்டினார். அதை ஏற்று அவ்வாறே திருமால் சவுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.

 

கருவறையின் முன், மஹாலெட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி, பதும நிதி தங்கள் பத்தினிகளுடன் காட்சியளிக்கின்றனர். குபேரனின் இரு பக்கத்திலும் இவர்கள் எப்போதும் வீற்றிருப்பார்கள். வலது புறம் சங்கநிதி தனது இடது கையில் வலம்புரி சங்கும், வலது கை வர முத்திரையுடன், தன் பத்தினியுடன் அருள்புரிகிறார். இடதுபுறம் பதுமநிதி, தன் வலதுகையில் பத்மத்துடனும் (தாமரை) இடது கை வரமுத்திரையுடனும் தன் பத்தினியுடன் அருள்பாலிக்கிறார். இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும்.

விஜயநகர பேரரசு வம்சத்தில் வந்த அச்சுத தேவராயர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான பெருமாள் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரிலும், லட்சுமிதேவி சவுந்தரவல்லி தாயார் என்கிற பெயரிலும் வணங்கப்படுகிறார்கள்.

 

கோயில் சிறப்புகள் :

  • மூலஸ்தானத்தில் சவுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுவதால், மதுரையைப் போலவே, இங்கும் சித்ராபவுர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார். இவ்விழாவின் போது மண்டூகருக்கு சுவாமி அருளிய வைபவம் பாவனையாக நடக்கும்.

 

  • ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடக்கும். பின், தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார். இந்த தரிசனத்தைக் காண்பவர்கள் பாவ விமோசனம் பெறுவர் என்பது நம்பிக்கை.

 

  • இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர்.

 

  • தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது.

 

  • இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷமானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்கு பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.

 

  • இந்த கோயிலை சிற்பக்கோயில் என்று சொல்லுமளவுக்கு பிரம்மாண்டமான கலைவண்ணங்களைக் காணலாம். தாயார் கல்யாண சவுந்திரவல்லி தனி சன்னதியில் இருக்கிறார். இவளது சன்னதி முகப்பில், நின்ற நிலையில் விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி உள்ளனர்.இச்சன்னதி முன் மண்டபம் சிற்ப சிறப்பை வெளிப்படுத்தும் கலைக் கூடமாக வடிக்கப் பட்டுள்ளது. இங்குள்ள தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்து வதாண்டவர், ஊர்த்து வகாளி, அகோர வீரபத்திரர், ரதி, கார்த்தவீரியார்ஜூனன் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

 

  • சவுந்தரராஜபெருமாள் கோவில் பிரகாரத்தில் வடமேற்கில் ஸ்ரீஆண்டாள் சன்னதி உள்ளது. ஆண்டாள் மூலவர், உற்சவர் என்ற நிலையில் காட்சியளிக்கிறார். இச்சன்னதிக்கு தனி விமானம் உண்டு.

 

  • பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரு பிரபந்தங்களை பாடியுள்ளார்.

 

  • ஆண்டாளின் உற்சவர் சிலை ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரங்க மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் முக்கிய இடம்பெறுகிறது. ஆண்டாள் சன்னதியின் வெளிப்புர சுவர்களில் தசாவதார சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. 20 கல்தூண்களை கொண்ட பெரும் மண்டபம் மூலவருக்கு எதிரே விசாலமாக உள்ளது.

 

  • மதுரைக்கு அருகே உள்ள 2 திருமாலிருஞ்சோலை என்ற திவ்யதேசத்தோடு தாடிக்கொம்பு தலத்திற்குத் தொடர்புள்ளதை தென்னிந்திய கோயில் சாசனம். ‘திருமாலிருஞ்சோலை அழகருக்கு வடக்கு வீடான புறமலை தாடிக்கொம்பு’ என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காட்டழகர் கோயில், திருமாலிருஞ்சோலை அழகரின் தெற்கு வீடாகக் கருதப்படுகிறது. அதனாலேயே இந்த மூன்று தலங்களிலும் சித்திரை உற்சவத்தில் ‘அழகர் ஆற்றில் இறங்குவதில்’ ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இதற்கு அடிப்படை புராண ஒற்றுமை இருப்பதே காரணமாக இருக்கலாம்.

 

  • திருக்கோவிலில் ஷேத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோவிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

 

திருவிழா: 

சித்திரைத் திருவிழா

ஆடிப் பவுர்ணமி பெருந்திருவிழா

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்,

தாடிக்கொம்பு-624 709

திண்டுக்கல் மாவட்டம்.

 

போன்:    

+91- 451-255 7232, 93629 36203

 

அமைவிடம் :

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் ரோட்டில் 9 கி.மீ., தூரத்தில் தாடிக்கொம்பு உள்ளது. பஸ் வசதி உண்டு.

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

6 − 1 =