அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்
அம்மன் : சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்
புராண பெயர் : திருப்பந்துருத்தி
ஊர் : மேலைத்திருப்பூந்துருத்தி
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு :
அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, வேறு சில பகுதிகள் கடல் போல் தேக்கமடைந்தன. இந்திரன் திருவையாறு ஐயாறப்பரை வணங்கி வேண்ட, காவிரி திரும்பினாள். நிலம் வெளீரென்று வெளியே தெரிந்தது. தெள்ளத் தெளிவாய் ஆற்று மண்ணும், வண்டலும் பூபோல மென்மையாக படிந்ததாக காணப்பட்ட இடமாதலால் ‘பூந்துருத்தி’ என அழைக்கப்பட்டது. பொதுவாக ஆற்றிடைக்குறையில் உண்டாகும் பகுதிக்கே துருத்தி என்று பெயர். அதுமட்டுமில்லாது ஈசன் சோழமன்னன் ஒருவனுக்கு கொல்லனின் உலைக்களத் துருத்தியையே சிவலிங்கமாகக் காட்டி பூஜிக்கச் செய்தார். பின்னர் அத்துருத்தியே சிவலிங்கமாக மாறியதால் திருப்பூந்துருத்தி என ஆயிற்று என்றும் கூறுவர். அப்பரடிகள் ‘‘பொருத நீர்வரு பூந்துருத்தி’’ எனக் கூறுவார். வண்டல் நிலமாதலால் பூஞ்செடிகள் நிறைந்து மலர் வனமாயிற்று. தேவர்கள் மலர் கொண்டு ஈசனை அர்ச்சித்ததை அப்பர் ‘‘வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’’ என்கிறார். அதனாலேயே இத்தல நாயகருக்கு புஷ்பவனேஸ்வரர் என்று பெயர்.
திருப்பூந்துருத்தி, சப்தஸ்தானம் எனும் ஏழூர்த் தலங்களில் ஒன்றாகத் தனிச் சிறப்பு பெறுகிறது. திருமழபாடியில் நந்திதேவர் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து பூக்கள் மலை மலையாக சென்று குவித்ததிற்காக நந்தியம் பெருமான் ஒவ்வொரு வருடமும் நன்றி செலுத்தும் வகையில் இத்தலத்திற்கு எழுந்தருள்வார். ஏழூர்த் திருவிழாவின் போது ஊரே களைகட்டும். சோழர் காலத்தில் ரத்தினமாக ஜொலித்த ஊர்களில் இதுவும் ஒன்று.
கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. முதல் ஆதித்த சோழன் முதல் ராஜேந்திரன் வரையான மாமன்னர்கள் கற்றளி கோயிலாக எடுப்பித்தனர். கோயில் முழுதும் கல்வெட்டுக்கள் பரவிக் கிடக்கின்றன. 1100 வருட விஷயங்களை மிக விரிவாக எடுத்துக்கூறும் கல்வெட்டுக்கள் பல உள்ளன.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தை தரிசித்து வலப்புறம் பார்க்க ஏழூர் பல்லாக்குகளும் எழுந்தருளும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. அதனருகேயே நந்தியம்பெருமான் சிவலிங்கத்திற்கு நேரேயில்லாது சற்று விலகியுள்ளது. இதுவே சம்பந்தருக்காக வழிவிட்டருளிய நந்தியாகும். சற்று உள்ளே நகர மூன்றாம் நிலை கோபுரமும் வாயிலில் பெரிய துவாரபாலகர்களும் காட்சியருளுகின்றனர். இன்னும் உள்ளே நகர ஆதிவிநாயகர் சந்நதியை தரிசித்து அர்த்த மண்டபம் தாண்டி கருவறை அடைய புஷ்பவனநாதர் எனும் பொய்யிலியார் சந்நதி அருள் மணம் பரப்பி அருகே வருவோரை நெக்குருகச் செய்கின்றது. துருத்தி என்றால் காற்றுப்பை எனும் பொருள் உண்டு. அதாவது உயிர்ச் சக்தியான பிராணனை சகல உயிர்களுக்கும் பரவச் செய்யும் ஆதாரமாக இவர் விளங்குகிறார். இன்னொரு காற்றுப்பை எடுக்கவொட்டாது அதில் சிவனருள் எனும் மலர்கொண்டு பிறவிப்பிணியை நீக்குகிறார்.
அதனாலேயே பூந்துருத்தி உடையார் எனும் நாமம் ஏற்றுள்ளார். பூவைப்போல் மென்மையும் கருணையும் கொண்ட அவர் வாழ்வில் ஏற்படும் துன்பத்தை தம் அருள்மலர் கொண்டு இதமாக நீவி இடர் களைகிறார். இறைவி அழகாலமர்ந்தநாயகி எனும் இனிய நாமம் கொண்டவள். மங்கலத்தைக் கூட்டித்தரும் கொடைநாயகி. அகமும், புறமும் மலர்ந்து சௌந்தர்யம் கூட்டுவிக்கும் புன்னகை தவழும் தேவி. சௌந்தர்யநாயகி எனும் இன்னொரு பெயரும் இவளுக்கு உண்டு.
கோயில் சிறப்புகள் :
- திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.
- பூந்துருத்தி காடவநம்பி “யின் அவதாரத் தலம்
- இத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது
- ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இவ்விடம் சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது; விழா நடைபெறுகிறது.)
- அப்பர் அமைத்த – “திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்” என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.
- அப்பர் பெருமான் உழவாரத்தொண்டு செய்த தலம்
- அப்பரடிகள் கயிலை மகாதேவனைக் காண வேண்டி, நோய் உற்று உருண்டும், புரண்டும், ஊர்ந்தும் உணர்வற்றுப் போனார். இறையருள் ஐயாறப்பரிடம் சேர்க்க திருவையாற்றுத் குளத்தில் மூழ்கி எழ, ஐயாறப்பர் கயிலையை கண்ணுக்குள் நிறுத்தினார். கண்ணாரக் கண்டவர் திருவையாறுக்கு அருகே புஷ்பவனநாதர் எனும் நாமத்தோடு திகழும் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளினார். ஞாயிறும், திங்களும் தோயும் திருமடம் அமைத்து மதி தவழும் சோலையமைத்தும் உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார்.
- இந்திரன், திருமால், லட்சுமி, சூரியன், காசிபர் ஆகியோர் வழிபட்ட தலம். இந்திரன் மலர்வலம் அமைத்து வழிபாடு செய்து உடல்நலம் பெற்றான். கழுகு உருவம் பெற்ற விஞ்ஞயர் இருவர் இத்தலத்தை அடைந்து மலர் வழிபாடு செய்து தம் உண்மை உருவம் பெற்றனர்.
- அப்பர் உழவாரத்தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது.
- திருஞானசம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்திற்கு வந்தபோது அப்பர் ஒருவரும் காணாதபடி அவருடைய சிவிகையைத் தாங்கிவந்தது இத்தலத்தில் நிகழ்ந்ததாகும். மேலும் அப்பர் அடிகளார் திருமடம் அமைத்து திருப்பணி செய்து வந்ததும் இத்தலமேயாகும்.
- பூந்துருத்தி விட்டு வேறொரு தலம் நோக்கி தாம் அழைக்கப்படுவதை அப்பரடிகளிடம் கூற அப்பர் சம்பந்தருடன் பூந்துருத்தியின் எல்லைவரை சென்று கண்களில் நீர் மல்க விடை கொடுத்தார். வையம் முழுதும் ஞானம் வளர்க்கச் செல்லும் குழந்தையையும், அவரைத் தாங்கும் சிவிகையும் வெகுதூரம் நகர்ந்து புள்ளியாக மறையும் வரை பார்த்திருந்துவிட்டு திருமடம் நோக்கி நடந்தார் திருநாவுக்கரசர். இத்தலத்தில் நிகழ்ந்த மாபெரும் நெகிழ்ச்சிக்குரிய விஷயம் இது. அதனாலேயே தமிழகத்தில் திருப்பூந்துருத்தி உபசாரம் என்ற பழமொழியை உதாரணம் காட்டிப் பேசுவர்.
- கோயிலில் கொற்றவை துர்க்கை ஒற்றைக்காலில் நின்று மகிஷனை வதைத்த பாவம்போக்கிக் கொள்ள இறைவனை வழிபட்டு சாந்த துர்க்கையாக நிலை கொண்டாள்.
- ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் வினவ, பூந்துருத்திக்கு வருக எனப் பணித்த ஞான குரு அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர். இக்கோலம் வேறெங்கும் காணமுடியாத அற்புதம்.
- திருமழபாடி நந்திதேவர் திருமணத்திற்கு மலர்கள் தந்து உதவியதாகவும் அதற்கு நந்திதேவர் வந்து நன்றி கூறிவதாகவும் அமைந்த விழாவே “ஏழூர் வலம் வரும் விழா’ (சப்த ஸ்தான விழா) என்பர். ஆதலால் மலரோடு இத்தலம் தொடர்புடையது நன்கு பொருந்துவதைக் காணலாம். சோழநாட்டில் சில இடங்கள் மலர்தோட்டங்களாக இருந்துள்ளன. அவ்விடங்கள் “மலரி’ என்றும் “மலர்க்காடு’ என்றும் வழங்கி வந்துள்ளன.
- காசிப முனிவர் கடும் தவமிருந்து காசி, கங்கை உட்பட பதிமூன்று தீர்த்தங்களையும் ஆதிவிநாயகர் அருகேயுள்ள கிணற்றில் பொங்கியெழச் செய்தார். பொங்கிய கங்கையின் மத்தியில் விஸ்வநாதர் காட்சி தந்தார். இது ஒரு அமாவாசையன்று நிகழ்ந்தது. எனவே இக்கோயிலை அமாவாசையன்று கிரிவலமாக வருவது பெருஞ்சிறப்பாகக் கருதப்படுகிறது.
திருவிழா:
சப்த ஸ்தான திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம், திருவாதிரை, மகா சிவராத்திரி, பாரிவேட்டை
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
போன்:
+91 – 9486576529
அமைவிடம் :
அட்டவீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாறில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.