March 03 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பேரூர்…

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     பட்டீஸ்வரர்

அம்மன்         :     பச்சைநாயகி, மனோன்மணி

தல விருட்சம்   :     புளியமரம், பனைமரம்

ஊர்             :     பேரூர்

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு :

பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார்.

அதன்படி காமதேனுவும் இமயமலைக்குச் சென்று அருந்தவமிருந்தது. ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அச்சமயம் நாரத முனிவர் தாம் வழிபட்ட தசஷிண கைலாயத்தைப் பற்றி காமதேனுவிடம் சொன்னார். காமதேனுவும் கன்றுடன் நாரதர் கூறிய இடத்தை அடைந்து அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சிமா நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டுத் தவமிருந்தது.

ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, மேய்ச்சலின்போது, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை, மேயலில் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவவெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்தன. இதைக் கண்டு பதறிப்போனது தாய் காமதேனு. காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். பார்வதி தேவியின் வளைத்தழும்மை என் மார்பகத்தில் ஏற்றுக்கொண்டதுபோல், உன் கன்றின் குளம்படித் தழும்பையும்  நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் என்று ஆறுதல் கூறினார் காமதேனுவிடம்.

இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டிய சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலேயே உனக்கு அருளுகிறேன். அதுவரை இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காண்பாயாக! மேலும் உன் நினைவாக இத்தலம் பட்டிபுரி, காமதேனுபுரம் என்று வழங்கப்படும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும் என்று அருளினார்.

 

கோவை திருப்பேரூர் ஆலயம் தொன்மையும் பழமையும் கொண்டது. இத்திருக்கோயிலின் கற்பக்கிரஹத்தை கரிகால் சோழன் அமைத்தான். ஆறாம் நூற்றாண்டில், அப்பர் பெருமான் இவ்வாலயத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் ஒரு பாண்டிய மன்னன், வைணவ ஆலயம் ஒன்றை இங்கே நிறுவினான்.

ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இவ்வாலயம் வந்து பாடியதை தேவாரம் எடுத்துக் காட்டுகிறது. இவ்வாலயத்துள் அமைந்திருக்கும் புகழ்வாய்ந்த கனகசபை, மதுரை அளாகத்ரி நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலின் தெப்பக்குளம் மிக அழகானது. பதினாறு வளைவுகளைக் கொண்டது.

இத்திருக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பவை – காஞ்சிமாநதி என்னும் நொய்யல் நதியாகும். (இப்போது இந்த நதியின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பை மற்றும் பாலித்தீன் கழிவுகளால் மாசுபட்டு மறைந்துள்ளது. பெரிய மழை ஒன்று பெய்தாலொழிய இந்நதி வழித்தடத்தைக் காண முடியாது.) அடுத்து சோழன் துறை, இதனருகில் பட்டிவிநாயக ஆலயம், வடகைலாசம், தென்கைலாசம் ஆலயங்கள்.

 

“ஆரூரார் பேரூரார்” எனவும், “பேரூர் பிரமபுரம் பேராவூரும்” எனவும் அப்பர் சுவாமிகள் தனது ஷேத்திரக் கோவையில் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். ஆக சுமார் கி.பி. 650-க்கு முன்னரே திருப்பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருப்பதென்று தெரியவருகிறது.  (பேரூர் பற்றிய தனி தேவாரம் மறைந்து போய்விட்டதாக கருத்துண்டு). பல தேவர்களும் பல அரசர்களும் பல முனிவர்களும் இவ்விறைவனை வழிபட்டு உய்தி பெற்றார்கள் என்பதற்கு இப்பேரூர் புராண படலங்களில் தெரியும்.

பற்பல தேவர்கள் முனிவர் அரசர் போன்றோர்கள் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டது புராணச் சரிதத் சான்றில் உள்ளன. இத்தலத்தின் மூர்த்தியாகிய பட்டிநாதர், பட்டீசர் என்ற பெயர், பசுவாகிய காமதேனுவினால் பட்டியிட்டுப் பூசிக்கப்பெற்ற வரலாறு ஆகும். குழகன் குளப்புச் சுவடுற்ற படலத்தில் கூறிய அடையாளங்களாகிய கன்றுக்குட்டியின் கால்குளம்புச் சுவடுகள் மூன்றும் சுவாமி திருமேனியில் இன்றும் உள்ளன.

 

திருப்பேரூரின் வளமும் புண்ணியமும் பெருமையுமேயன்றி, இத்தலத்தினைச் சூழ்ந்துள்ள மலைகளின் பெருமையும் மிக மேம்பட்டவையாகும். ஐந்து பெருந் தேவர்களுக்கு இடமாகிய ஐந்து மலைகள் இதனைச் சுற்றி விளங்குகின்றன. அவை –

1.சிவமயமாகிய வெள்ளிமலை (இப்பொழுது நீலிமலை எனப்படுகிறது)

2.உமாதேவியார் மலை (ஐயாசாமி மலை)

3.பிரம்மன் மலை (பெருமாள்முடி மலை)

4.விட்டுணுமலை

5.முருகக் கடவுளாகிய மருதமலை ஆகியவை.

இவ்வைந்து மலைகளும் ஆதிமா பிராகிருதம் திருப்பேரூரைச் சூழ்ந்து கோட்டைபோல அரணாய் உள்ளன.

 

ஐம்பெரும் அதிசயங்கள்

  1. எலும்பு கல்லாகுதல்.
  2. இறவாப் பனை, பிறவாப் புளி.
  3. புழுக்காத சாணம்.
  4. உயிர் பிரியும்போது வலது செவி மேலாக இருத்தல்.

5.செம்பு பொன்னாகுதல்.

 

  1. எலும்பு கல்லாகுதல்

இத்தலத்தை அடைந்தோர்க்கு, அழியா நிலைமையைத் தரும் என்பதின் சான்றே, இங்குள்ள காஞ்சிமா நதியில் (நொய்யல்) இடப்படுகின்ற மனித அஸ்தியின் எலும்புகள் கல்லாக மாற்றப்பட்டு, நிலைபெறுதல்தான் உண்மையான சான்று. இந்நதியில் நீரோட்டம் இருக்கும்போது, கோவையிலுள்ளோரும், கேரளாவினைச் சார்ந்தோரும், இறந்தவர்களின் அஸ்தி எலும்புகளை இந்நதியில் இட்டுச் சடங்கு செய்து வந்தனர். ஆக தன்னை அடைந்தோர்க்கு அழியா நிலையைத் தருவது இதுவே!

 

  1. இறவாப் பனை

இத்தலத்தின் இறவாப் பனையின் வயது எவ்வளவோ ஆண்டுகள். இறப்பே இல்லாது வாழ்வது இப்பனை. பிறப்பும், இறப்பும் உபாதிகள் எல்லாம் இத்தலத்தை அடைந்தோர்க்கு நீக்கம் பெறுவர் என்பதற்குச் சான்றுதான் இந்த இறவாப் பனை. ஆக பிறப்பும் இறப்பும் இல்லாதவர் இறைவனின் அருள் இதனை உணர்த்துவதாகும். (இந்த பனை இறவாத் தன்மை கொண்டது).

பிறவாப் புளி

இந்த பிறவாப் புளியின் விருட்சத்தை, நம் நல்வினைப் பயனின் காரணத்தினாலே, நாம் இந்த கலியில் இதைக் காணும் பேற்றைப் பெற்றோம். இந்த இறவாப் புளியின் விருட்சமானது, பட்டீசரின் திருக்கோயிலுக்கு எதிரிலேயே இருக்கிறது. இந்தப் புளியமரக் கனியின் விதைகள் முளைப்பதில்லை. நீங்கள் இவ்விதையினை எடுத்துச் சென்று எங்கே ஊன்றினாலும் அது முளைப்பதில்லை. அப்படியே முளைக்க ஊன்றிய விதைகள், முளை வந்ததும் தீய்ந்து போகும். இது அன்றைய நாளிலிருந்து இன்றைக்கும் இது கண்கூடாக காணலாம் ஆக இத்தலம் என்றும் அழியா நிலைபெற்றவை என்பதை நமக்கு காட்டுவதாகும்.

 

  1. புழுக்கா சாணம்

இத்தலத்தில் விழும் கோ-வின் சாணங்கள், எவ்வளவு நாளானாலும் அதில் புழு உருவாவதில்லை. (மற்ற எல்லா இடத்திலும் கோ-வின் சாணங்களில் மறுநாளிலே புழுக்கள் பிறந்து நெளியும்.) ஆக, இத்தலத்தை அடைந்தோர்க்கு மேலும் பிறப்பில்லை என்பதான சான்று இது.

 

  1. உயிர் பிரியயில் வலது செவி மேலாக இருத்தல்

இந்தத் தலத்தில் இறப்பவர் யாவரும், இறக்கும் சமயம் அவர்களின் வலது செவி மேலாக இருந்தவாறே இறக்கின்றனர். இன்றைக்கும் இது கண்கூடு. இத்தலத்திலே இறப்பு உயிர்கள் எவையாயினும், அவையெல்லாம் அதற்கு முன் எவ்வாறு கிடப்பில் கிடந்து உழன்றாலும், உயிர் பிரியும் சமயம், இத்தல இறைவன், அவர்களின் வலது செவியில் திருவைந்தெழுத்தை உபதேசம் செய்து, தன்னடியிற் சேர்த்துக்கொள்கிறான் ஆக, காசியைப்போல பிறவாப் பெருமையை, இத்தலத்தில் இறப்போர்க்கு இத்தல இறைவன் கொடுத்து வருகிறான்.

 

  1. செம்பு (உலோகம்) பொன்னாகுதல்

இந்த பேரூர் தலத்திலே, வடகைலாயம் எனுமிடத்தில் உள்ள திருக்கோயிலிலே, பிரம தீர்த்தம் என்றும், குண்டிகை தீர்த்தம் என்றும் கூறப்படும் கிணறு ஒன்று இருக்கிறது. (இந்த வடகைலாயக் கோயிலின் நந்தவனத்திற்கு அருகில் ஒற்றையாக நிற்கும் பனைமரமே இறவாப் பனை ஆகும்.) இந்த கிணற்றுத் தீர்த்தத்தில் குளித்து வந்தோர், பைத்தியம் மற்றும் பெருநோய்கள் பீடித்தோர், நோய் ஒழியப் பெற்றிருக்கிறார்கள்.

அப்படி இங்கு வந்து குளித்தோர், இக்கிணற்றிலே செப்புக் காசு ஒன்றை இட்டு விடுவர். அதன் பின் இக்கிணற்று நீரை குளிப்பார்கள். (அந்நாளில் செப்புக் காசுகள் வழக்கத்தில் இருந்தது.) இதில் இடப்படும் செப்புக் காசுகள் சிலகாலம் சென்று, செப்புக் காசிலிருக்கும் களிம்புகள் நீங்கித் தங்கமாக ஒளிர்ந்தன. அந்தத் தங்கத்தைப் பார்த்துவிட்டு, “ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவீசும் பொன்” என்று தாயுமானாரே கூறியிருக்கிறார். ஒளிவிடும் பொன் என்பதை, இக்காலத்தில் (radium) என்போம்.

1918-ம் வருடத்தில், இந்தக் கிணற்றை சேறு வாரி சுத்தம் செய்தபோது, அந்தச் சேற்றுத் தூர்வையிலே, இந்தக் கிணற்றில் போடப்பட்ட செப்புக் காசுகள், பொன்னாய் மாறி ஒளிர்ந்தன. ஆக, செம்பினில் களிம்பு நீக்கி பொன்னாக்கி இருக்கிறது இந்த தீர்த்தம்.

இத்தலத்தினைச் சுற்றிச் சூழப்பட்டிருக்கும், எவ்வித நீர் நிலைகளிலும் இவ்விதத் தன்மை இருக்கப் பெறவில்லை என்பது உறுதி. முன் சமயத்தில், கிணற்றுத் தீர்த்தத்தில் காணப்படும், பெளதீகப் பொருள்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். அதனை ஆய்வு செய்தோர், இது மனித உணர்விற்கு மேற்பட்டவை என கூறினர்.

 

கோயில் சிறப்புகள் :

  • சிவலிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம்.

 

  • கோயிலின் முன்பு “பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது.

 

  • இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.

 

  • சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்தர் வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.

 

  • முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார்.

 

  • அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர்.

 

  • இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்.

 

  • இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் “இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.

 

  • சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.

 

  • சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாககொண்டாடப்படுவதால் இத்தலம் “மேலைச்சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது.

 

  • நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நடராசப்பெருமானுக்கு ஆண்டில் பத்துமுறை அபிஷேகம் செய்விக்கப் படுகிறது.

 

  • பெருமாள் கோயில்களில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதம் கதவு திறக்கப் படும். ஆனால் கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. பங்குனி உத்திரம், ஆருத்ரா, போன்ற தினங்களில் நடராஜர், சிவகாமி அம்மன் வீதியுலா சென்று திரும்பும் சமயம் சிவகாமி அம்மன் மட்டும் இந்த சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்கு உரிய வாசலில் தங்கை அம்பிகை உரிமையாக நுழைவதாக சொல்லுகிறார்கள்.

 

  • ஒருமுறை சமக்குறவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனிடம் திருப்பணிக்காக பொருள் வேண்டி, பேரூர் திருத்தலம் வந்தார். அப்போது சுந்தரரிடம் விளையாட விரும்பிய ஈசன், அம்பிகையுடன் விவசாயி வேடம் பூண்டு அருகிலுள்ள வயலுக்குச் சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்தார். பேரூர் ஆலயத்திற்கு சென்ற சுந்தரர், அங்கு சுவாமியையும், அம்பாளையும் காணாது திகைத்தார். அவரது திகைப்பைக் கண்ட நந்தி, ஈசன் வயலில் நாற்று நடும் இடத்தைக் காட்டிக்கொடுத்தார். சுந்தரர் வயலுக்குச் சென்று அங்கு ஈசனும், அம்பாளும் விவசாயி கோலத்தில் சேற்றில் தங்கள் திருப்பாதம் பதித்து நாற்று நட்டுக் கொண்டிருப்பதையும், கூடவே இந்திரன், பிரம்மன், விஷ்ணுவும் வயலில் நீர் பாய்ச்சி, வரப்புகளை சீர்செய்வதையும் கண்டார். அப்போது பார்வதிதேவி பச்சை ஆடை உடுத்தி இந்திராணி, சரஸ்வதி, லட்சுமியுடன் சேர்ந்து கும்மியடித்து நாற்று நடவுப்பாடல்களை பாடியபடி நாற்று நட்டுக்கொண்டிருப்பதையும் கண்டு துதித்து நின்றார். விநாயகரும், முருகரும் விவசாயக் குழந்தைகளாய் வந்து அங்கே வயலில் உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து வயல்வெளியில் வீசி குறும்பாக விளையாடிக்கொண்டிருப்பதையும் கண்டார். பின்னர் சுந்தரர் வயலினுள் இறங்கி நாற்று நட்டுக்கொண்டிருந்த பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனை  வணங்கி மீண்டும் ஆலயத்திற்குள் வருமாறு அழைத்து நின்றார். அம்மையும், அப்பனும் சுந்தரருடன் வரமறுக்க, ஈசனின் ஜடாமுடியை பிடித்திழுத்து வந்து ஆலயத்தினுள் சேர்ப்பித்தார். பின்பு ஈசனை துதித்து பதிகம் பாடி பொன், பொருள் வேண்டி நின்றார். அப்போது ஈசன், ‘சுந்தரா! இத்தலத்தில் உனக்கு எமது ஆனந்த திருநடனம் காட்டுகிறேன். சேரமான்பெருமான் உனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். நீ வேண்டும் பொன், பொருளை அங்கு அவன் உனக்கு அளித்திடுவான்’ என்று அருளி மறைந்தார். இந்த நிகழ்வு பேரூர்ப் புராணத்தின் 19-வது படலமான பள்ளுப்படலம் பகுதியில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு ‘பச்சை நாயகி’ன்னு பெயர். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் செழிப்பாக வளரவும் இவளது சன்னிதியில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். இங்கு சுந்தரருக்கும், சேரமான் பெருமாளுக்கும் தனி சன்னிதிகள் இருக்கு. அன்று சுந்தரர் பொருட்டு ஈசன் வயலில் இறங்கி நாற்று நட்ட நிகழ்வு அதன் தொடர்ச்சியாய் இன்றும் பேரூர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் நாளின் முந்தைய தினம் நடைபெற்று வருகிறது.

 

  • சுந்தரமூர்த்தி நாயனாருக்காக ஸ்ரீநடராஜர் தமது தில்லை திருநடனத்தை காட்டியருளிய தலம் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். எனவே, இவ்வூர் நடராஜர் `குடக தில்லை அம்பலவாணன்’ என்று சிறப்பிக்கப்படுகிறார்.

 

திருவிழா: 

திருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பேரூர் பட்டீஸ்வரர் கோயில்,

பேரூர்- 641 010.

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

போன்:

+91- 422-260 7991

அமைவிடம் :

கோயம்புத்தூரிலிருந்து(6 கி.மீ.) சிறுவாணி செல்லும் வழியில் பேரூர் உள்ளது. டவுன் பஸ் வசதி இருக்கிறது.

 

ENTRANCE OF PERUR TEMPLE
Share this:
Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Write a Reply or Comment

one × three =