April 05 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஏரல்

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     சேர்மன் அருணாசல சுவாமி

ஊர்       :     ஏரல்

மாவட்டம்  :     தூத்துக்குடி

மாநிலம்   :     தமிழ்நாடு

 

ஸ்தல வரலாறு :

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு அந்நேரத்தில் அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய மரம்தான் கடவுள். ஏனெனில் அவன் கரை சேர உதவியது அதுதான். அவன் அதையே இப்படிக்கூட நினைத்துப் பார்க்கலாம்.

அதாவது கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு தூதுவனாகவோ அல்லது ஏதோ ஒரு ஆபத்பாந்தவனாகவோ கூட நினைக்கலாம். எது எப்படியோ தன் கஷ்டத்தில் உதவுபவருக்கு கடவுள் அந்தஸ்து கிடைக்கிறது. நாம் கோயில் கட்டி கொண்டாட இறைவன் புராணக் காலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமேயில்லை. அதனால் தான் நம் நாட்டில் தோன்றி  மக்களை நல்வழிப்படுத்திய மகான்களுக்கு இன்றும் நாம் கோயில்கட்டி கொண்டாடுகிறோம்.

 

தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி. இங்கு பிறந்த குமாரசாமி நாடார் ஒரு நாள் தனது ஊருக்கு வந்த முனிவர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாத பூஜை செய்து, அருஞ்சுவை விருந்து அளித்தார். அப்போது அந்த முனிவர் ஒரு தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமியிடம் கொடுத்தார். இந்த ஏட்டை தொடர்ந்து படித்து வந்ததன் பயனாக, மந்திரங்கள் சிலவற்றை கற்றுக் கொண்டு தினமும் தியானமும், பூஜையும் செய்து வந்தார்.

இதனால் அவருக்குள் ஒரு சக்தி உருவானது. அதன் பயனாக பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்த்தார். பார்வை பார்த்தல் என்று அப்பகுதியில் இதை கூறுவர். குமாரசாமி நாடாரிடம் பார்வை(வைத்தியம்) பார்த்ததால் விஷம் இறங்கியது என்று அப்பகுதி மட்டுமன்றி சுற்றுவட்டாரங்களிலும் பேச்சு பரவலாகியது. அந்த காலக்கட்டத்தில் தேள்கடி, பூரான் கடி முதலானவை அதிகமாக ஏற்படுவதுண்டு, சிலருக்கு விஷப்பூச்சிகள் கடித்து உடலில் சரும நோய்கள் ஏற்படுவதும் உண்டு. அவ்வாறு வரும் சரும நோய்களிலிருந்து விடுபடவும், விஷமிறக்கவும் மதுரை தெற்கே இருக்கும் பெரும்பாலான மக்கள், ஏரல் வந்து குமாரசாமி நாடாரிடம் பார்வை பார்த்து செல்வார்கள். இவருடைய புகழ் நாளுக்கு நாள் மேலும் பரவியது. இவரது மறைவிற்கு பின் இவருடைய சந்ததிகள் இந்த பணியை செய்து வந்தனர். அந்த வழித்தோன்றலில் ஒருவர் ராமசாமி நாடார்.

இவரது மனைவி சிவனணைந்தம்மாள். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்த பின்னும் குழந்தை இல்லை. ஒரு நாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த காவி உடை தரித்த துறவி, “நீ செட்டியாபத்து சென்று அங்கிருக்கும் ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்” என்று கூறினார். (ஏரலில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது செட்டியாபத்து) அதன்படி தம்பதிகள் வண்டி கட்டி, செட்டியாபத்து கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தனர். அன்றைய தினம் ராமசாமிக்கு கனவு வந்தது. அதில் முந்தைய நாள் தர்மம் கேட்டு வந்த காவித்துறவி தோன்றி, உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு அருணாசலம் என்று பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்ட குழந்தையாக வளருவான் என்று கூறினார். நாட்கள் சில சென்ற நிலையில் சிவனணைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். அதை வைத்தியச்சி கைபிடித்து சொன்னபோது மிகவும் சந்தோஷம் கொண்டனர் தம்பதியினர். ஏழு மாதமான நிலையில் சிவனணைந்த அம்மாளுக்கு மயக்கம், வாந்தி, சோர்வு என கருவுற்ற பெண்ணுக்கு இருக்கிற எந்த செயலும் இவரிடத்தில் இல்லை, இதனால் சற்று குழப்பம் அவர்களுக்கு உருவானது.

இப்படி இருக்கையில் நிறைமாதமாக இருந்த சிவனணைந்தம்மாள், விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில் அதாவது 2.10.1880 அன்று அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர்.  உடனே ராமசாமி நாடார் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார். அருணாசலம், மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தது. அருணாசலம், பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு அவர் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். வாலிபப் பருவம் அவரை நெருங்க, அவர் தனது எண்ணத்தை இறை தேடலில் செலுத்தி வந்தார். தனது வழி முன்னோடிகள் செய்து வந்த விஷக்கடி மருத்துவத்தினையும் இவர் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் பேராதரவு இருந்தது. இதற்கிடையில் இவரது அறிவாற்றலையும், ஆங்கிலப் புலமையையும் கண்ட அன்றைய ஆங்கில அரசு இவரை சிறுதொண்ட நல்லூருக்கு முன்சீப்பாக (நிர்வாக அதிகாரி) நியமித்தார்கள்.

அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருணாசலம், அதைச் சிறப்பாக செய்து வந்தார். சிறுவயதாக இருந்தாலும் வரி வசூல் செய்வது. அந்தக் கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளை பஞ்சாயத்து பேசி முடிப்பது என்று 8 ஆண்டுகளாக இப்பணியை மிகச்சிறப்பாக செய்து வந்தார். இதற்கிடையில் ஒரு நாள் செய்த வசூலை உண்மை நிலவரமாக சொல்லாமல், குறைத்து மாவட்ட அதிகாரிக்கு சொல்லுமாறு, மேலதிகாரியான வருவாய்த்துறை அதிகாரி இவரிடம் கூற, பொய் சொல்ல வேண்டுமா என்று நினைத்த இவர் மறு நிமிடமே தான் வகித்து வந்த பதவியை துறந்து விட்டார். அந்தப் பதவியை விட்ட உடனே ஆன்மிகத்தில் தனது ஈடுபாட்டை அதிகமாக்கினார். சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும், தங்களது குடும்ப சொத்துகளை பார்வையிட அருணாசலம் வெள்ளை வேட்டியும், கோட்டும் அணிந்து தலைப்பாகையுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி செல்வார். அவருடைய ராஜ தோரணையை கண்டு உறவினர்களும், ஊராரும் வியந்து நிற்பர்.

 

இதற்கிடையில் அருணாசலத்துக்கு திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதையறிந்த அவர் 28 வயது ஆகட்டும். அப்ப பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டார். அப்பழுக்கற்ற மனிதராய், பிரம்மச்சாரியாக வாழ்ந்த இந்த மகானை கவனித்துக் கொண்டே வந்த, அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் ஆகியோர் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அருணாசலத்தினை நியமித்தார்கள். அந்தக் காலங்களில் ஊராட்சி, பேரூராட்சி தலைவர்களைகூட சேர்மன் என்று அழைப்பது வழக்கம். சேர்மனான அருணாசலம், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். தெருவிளக்குகளை அமைத்தார். அந்த விளக்குகள் தற்போது போல அல்லாமல் எண்ணெயால் எரியும் தீப விளக்குகள். இந்த விளக்குகள் இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க பணியாளர்களை நியமனம் செய்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து கொடுத்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு பழகி வந்தார்.

 

அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால், பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார். ஒரு நாள் அப்பகுதியைச் சேர்ந்த  பால்நாடார் என்பவரைப் பாம்பு கடித்து விட்டது. அப்போது அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த விஷத்தினை உறிஞ்சச் செய்தார். இதைக்கண்ட அனைவரும் மெய் சிலிர்த்தனர். அவருக்குள் ஏதே ஒரு தெய்வ சக்தி இருப்பதை அந்த ஊர்காரர்களும், உறவினர்களும் உணர்ந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரை சேர்மன் சாமி என்றே அழைக்கத் தொடங்கினர்.

ஒரு நாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி  கருத்தபாண்டியை அழைத்து, காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடிமாதம் 13ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) அன்று உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன். என்னுடைய உடலை விட்டு ஜீவன் போனாலும் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து வருவேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்குச்செய்யும் சடங்குகளை செய்து அப்படியே இருந்த நிலையில் குழி தோண்டி வையுங்கள். அப்போது வானத்தில் கருடன் ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல் மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள். செய்ய வேண்டிய சடங்குகளை செய்யுங்கள் என்று முக மலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.

 

சுவாமிகள் வாக்கினைக் கேட்ட கருத்தபாண்டி நாடார் கலங்கி கண்ணீர் வடித்தார். தன்னுடைய இறுதிக் காலம் இதுதான் என முடிவு எடுத்த சேர்மன் சுவாமிகள் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றார். அங்குள்ள கோப்புகள் அனைத்தினையும் பார்த்து முறையாக கையொப்பம் வைத்தார். 28. 07. 1908. அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு ஒன்று கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி இதோ வருகிறேன் என்று கூடியிருந்த அனைவரையும் பார்த்து புன்னகை சிந்தும் பொன்முகத்தோடு கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது. (பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டது. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது.

சுவாமிகள் படித்த நூல்கள், பயன் படுத்திய விலை மதிப்பு மிக்க பொருள்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமி அமர வைக்கப்பட்டிருந்த குழியை மலர்களாலும், மண்ணாலும் நிரப்பினார்கள். சுவாமி தெய்வ நிலையடைந்த ஒரு சில நாளில் அவர்களோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றனர். அப்போது, பாம்புகள் கூட்டம் படையெடுத்து வந்தது. அவர்களை படமெடுத்து விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார். அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தனது தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். எப்போதுமே ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் மீது சுவாமிக்கு அலாதி பிரியம் உண்டு. சுவாமி சமாதி நிலை அடைந்தாலும் அந்தப் பிரியம் அவரை விட்டுப் போகவில்லை. ஆகவே அந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

கிறிஸ்வர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்தவர்கள் மெக்வர், டேவிட்சன் ஆகியோர் ஆவர்.

 

அவர்கள் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர்வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு வரும் முன்பு அவர்கள் வந்த குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன. ஆகவே அவர்கள் குதிரையை விட்டு இறங்கி சுவாமியின் கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். அந்தக் காட்சியை பார்த்த அவர்கள் வேர்வை கொட்ட அந்த இடத்தில் காலணிகளை கழற்றி விட்டு தனது தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்று சேர்ந்ததும் கலெக்டர், கோயில் உள்ள பகுதியான இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது. சுவாமியின் தெய்வ நிலை பெற்ற ஆண்டு 1908. அன்றிலிருந்து மக்கள் ஏரலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இது குறித்து ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர், 1916ம் ஆண்டு எழுதிய அரசு குறிப்பேட்டில் கூறியதாவது.

ஏரல் நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து சேர்மனாக இருந்த அருணாசல நாடார் என்பவரது கோயில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றது. தீராத நோயால் கொடுமையடைந்த ஆதிதிராவிட பெண் ஒருத்தி கனவில் வந்த அருணாசல நாடார் தனது சமாதியைச் சுற்றி வந்தால் உனது நோய் குணமாகும் என்று கூறினார். அதன்படி அந்தப் பெண் சுற்றி வந்தாள். அவளது நோய் குணமானது. அந்த அற்புதத்தின் செய்தி சுற்றி வட்டாரத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கோயில் சிறப்புகள் :

  • சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது.

 

  • மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் தான் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்துவந்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் பல நோய்கள் தீருகிறது.

 

  • பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.

 

  • சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்களைத் தாண்டி விட்டது. ஆனால் தற்போதும் சுவாமிகள் பல விதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார்.

 

  • சுவாமியின் திருக் கோலம் இங்கு ராஜ திருக் கோலமாகும். நின்ற கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது.

 

திருவிழா: 

இங்கு சித்திரைத் திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை.ஆகிய மூன்று திருவிழாக்கள் முக்கிய விழாக்களாகும். மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி,

ஏரல் – 628 801

தூத்துக்குடி மாவட்டம்.

 

போன்:    

+91- 4630-271 281

 

அமைவிடம்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ஏரல் உள்ளது. திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அடிக்கடி பஸ் உள்ளது.  திருநெல்வேலியிலிருந்து – திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோட்டில் தென்திருப்பேரையில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஏரல் தாமிரபரணிக்கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் கோயில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

20 − twelve =