April 02 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… குன்றக்குடி

குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்          :     சண்முகநாதர்

அம்மன்         :     வள்ளி, தெய்வானை

தல விருட்சம்   :     அரசமரம்

தீர்த்தம்         :     தேனாறு

புராண பெயர்    :     அரசவனம்

ஊர்             :     குன்றக்குடி

மாவட்டம்       :     சிவகங்கை

 

ஸ்தல வரலாறு :

முருகப் பெருமானின் வாகனம் மயில் என்பது நமக்குத் தெரியும். சூரசம்ஹாரத்தின் போது மரமாக நின்ற சூரனை சக்தி வேல் கொண்டு முருகப் பெருமான் பிளந்தபோது வெளிப்பட்ட மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் மாறிய புராணமும் நமக்குத் தெரியும். அப்படியென்றால், அதற்கு முன்பு முருகனுக்கு வாகனம் இல்லையா? முருகன் ஞானப்பழம் பெறுவதற்காக மயில் மீது ஏறி உலகத்தை வலம் வந்ததாகப் புராணங்கள் சொல்கின்றனவே. எனில், அந்த மயில் என்ன ஆயிற்று?

அழகே வடிவானவன் என்பதனால்தான் முருகன் அழகிய மயிலைத் தன் வாகனமாகக் கொண்டான். அந்த அழகு மயிலுக்கு முருகன் ஒரு சாபமும் கொடுத்தார். அந்தச் சாபம், மயிலை மலையாக மாற்றியது!   அப்படி மலையாக மாறிய மயில், முருகனின் திருவருளை வேண்டி தவம் செய்தது.  மயில் போன்ற வடிவில் அமைந்திருக்கும் அந்த மலை அமைந்த தலம் குன்றக்குடி

கயிலையம்பதியில் ஞானமூர்த்தியாம் ஈசன் தமது சக்தியை இரு பகுதிகளாக்கி, ஒரு பாகத்தை போக சக்தியாகவும், மற்றொரு பாகத்தை முருகக் கடவுளாகவும் மாற்றினார். ஞான சக்தியை முருகனின் இதயத்தில் பதித்து, இச்சா சக்தியையும், கிரியா சக்தியையும் தந்தார். அழகன் முருகனுக்கு ஞானசக்திதரன், குகன், விசாகன் என்றெல்லாம் திருப்பெயர்கள் சூட்டி, அவனுக்கு கயிலையின் இடப்பாகத்தில் ஆலயம் அமைத்துத் தந்து, அங்கிருந்தபடி ஐந்தொழில் களையும் செய்துவரும்படி பணித்தார். மேலும், முருகனுக்கு வாகனமாக அழகிய மயிலை அளித்த ஈசன், அவனுக்குத் துணையாக அஷ்ட வித்தியேஸ்வரர்களையும் அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில், ஆலம் உண்ட அண்ணலைத் தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலைக் கண்டவர்கள், அதன்மீது அனுதாபம் கொண்டார்கள். காரணம்..?

சூரன் தன் தம்பியருடன் காஞ்சிபுரத்தில் தவ நிலை மேற்கொண்டிருந்தான். முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினை அடைய வேண்டும் என்பதே அவர்களது தவத்தின் நோக்கம். அவர்களது தவம் நிறைவடைந்து, தவப் பயனும் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே முருக வாகனமாகத் திகழும் மயிலின் நிலை என்னாவது? இதை எண்ணியே பிரம்மாதி தேவர்கள் மயிலின் மீது அனுதாபம் கொண்டார்கள். அத்துடன், “உன் இறைவனின் வாகனமாக மாறவேண்டி சூரன் தனது தம்பியருடன் காஞ்சிபுரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்” என்ற விஷயத்தையும் மயிலிடம் கூறிச் சென்று விட்டார்கள். தேவர்கள் கூறியது கேட்டு மிகவும் வருந்திய மயில், தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும் விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.

சூரனும் அவனுடைய சகோதரர்களும், முருகப் பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினைத் தாங்கள் அடையவிடாமல் மயில் மூலம் தடுத்து விட்ட தேவர்கள் மீது சினம் மிகக் கொண்டனர். அவர்களைப் பழிதீர்க்கும் நாளை எதிர்நோக்கி நின்றனர். அந்த நாளும் வந்தது.

முருகப்பெருமானைத் தரிசிக்க வந்த திருமாலும், பிரம்மாவும் தங்கள் வாகனங்களான கருடனையும், அன்னத்தையும் வெளியில் விட்டுச் சென்றனர். அவ்வேளையில் சூர சகோதரர்கள் மயிலிடம் சென்று, “மயிலே! உன்னால் தங்களை விட விரைவாகச் செல்லமுடியாது என்று கருடனும், அன்னமும் இழிவாகப் பேசிக் கொண்டன” என்று பழிச்சொல் கூறினர்.

அதைக் கேட்ட மயில் சிறிதும் ஆலோசிக்காமல் கோபம்கொண்டு கருடனையும், அன்னத்தையும் விழுங்கி விட்டது. முருகப் பெருமானை வழிபட்டுத் திரும்பிய திருமாலும், நான்முகனும் தங்கள் வாகனங்களைக் காணாது முருகப்பெருமானிடம் முறையிட்டனர். நடந்ததை உணர்ந்த முருகப் பெருமான் மயில் விழுங்கிய கருடனையும், அன்னத்தையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். முருகனின் உத்தரவு கேட்டு கருடனையும், அன்னத்தையும் விடுவித்தது மயில். திருமாலும், நான்முகனும் திரும்பிச் சென்றனர்.

 

அவர்களுக்கு இன்னல் விளைவித்ததன் காரணமாக மயிலின் மீது சினம் கொண்ட முருகப் பெருமான் மயிலை மலையாகும்படி சபித்தார். `ஆலோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டோமே’ என்று வருந்திய மயில், பெருமானிடம் சாப விமோசனம் கேட்டது. தவறை உணர்ந்து வருந்திய மயிலிடம் பரிவுகொண்ட முருகப்பெருமான், “நீ பாண்டிய நாட்டில் திருப்பத்தூருக்குக் கிழக்கே உள்ள அரசவனத்துக்கு (குன்றக்குடி) போய் மலையாக இரு. அங்கு நான் வந்து உனக்குச் சாப விமோசனம் தருகிறேன்” என்று அருளினார்.

அதன்படியே, குன்றக்குடிக்கு வந்துசேர்ந்த மயில், முருகப்பெருமானை நோக்கும் விதத்தில் வடக்கே முகமும், தெற்கே தோகையுமாகவுள்ள மலையின் வடிவம் கொண்டு, தவத்தினைத் தொடங்கித் தொடர்ந்தது.

முருகன் குன்றக்குடிக்கு எழுந்தருளி, மலை வடிவில் இருந்த மயிலை இரு பகுதிகளாக மாற்றி, ஒன்றுக்கு சாரூப்ய பதவி அளித்தவர், மற்றொரு பாகத்தைத் தொடர்ந்து மலையாகவே இருக்குமாறு கூறினார். சாபம் நீங்கப் பெற்ற மயில், `முருகப் பெருமான் தொடர்ந்து அந்த மலையின் மீது எழுந்தருளி, அண்டி வந்து வணங்குபவர்க்கு வேண்டிய வரம் அருளவேண்டும்’ என்று வரம் கேட்டது. அதன்படி, முருகப்பெருமான் வள்ளி – தேவசேனா சமேதராக குன்றக்குடி மலையின் மீது கோயில்கொண்டார்.

 

கோயில் சிறப்புகள் :

 

  • கருவறையில் சண்முகநாதர் ஆறு திருமுகங்களுடனும், பன்னிருகைகளுடனும் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். வலப்பக்கத்தில் வள்ளியம்மையும், இடப்பக்கத்தில் தெய்வானையும் தனித் தனி மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். இத்திருக்கோலத்தை வேறு எங்கும் காண இயலாது.

 

  • முருகனின் மயில் வாகனமும், திருவாசியும், மூலமூர்த்தமும் ஒரே சிலையாக எழிலுடன் வடிக்கப் பெற்றிருக்கிறது.

 

  • குன்றக்குடி மலை இரண்டு பகுதிகளாகத் திகழ்கின்றது. ஒன்று மலைக்கோயில்; மற்றொன்று கீழைக்கோயில். கீழைக்கோயிலின் பெரும்பகுதிகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன

 

  • மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார்.

 

  • மலையடிவாரத்தில் தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. மலையின் நுழைவாயில் தோகை வடிவமாதலால் அதனருகில் வீற்றிருக்கும் விநாயகருக்குத் தோகையடி விநாயகர் என்று பெயர் வந்தது.

 

  • முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

 

  • மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளது

 

  • இக்கோயிலில் குடவரைக்‌கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

 

  • அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு

 

  • கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

 

  • கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

 

  • குன்றக்குடிக்கு மயூரகிரி என்றும் திருநாமம் உண்டு. கிரி என்றால் மலை. மயூரி என்றால் மயில். சாப விமோசனத்துக்காக, இங்கெ மயில் மலையாக நின்று தவமிருந்தது. இந்த மலை ஒரு மயிலைப் போல் அமைந்திருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம்.

 

  • மருதுபாண்டியர் ஆட்சி காலத்தில் மன்னர் பெரிய மருதுவின் முதுகில் ராஜபிளவை எனும் கட்டி ஏற்பட்டது. வைத்தியர்களால் கைவிரிக்கப்பட்ட நிலையில், குன்றக்குடி முருகனின் அருளால் பெரிய மருது குணமடைந்தார். இதனையடுத்து மருதுபாண்டியர் சகோதரர்கள் இந்த கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர்.

 

  • நல்ல விளைச்சல் கண்ட விவசாயிகள், தங்களது வேண்டுதலின்படி விளைபொருட்களில் ஒரு பகுதியை வைக்கோலுக்குள் வைத்து உருண்டையாகக் கட்டி கொண்டு தலையில் வைத்து ஆடிப் பாடி உற்சாகத்துடன் காணிக்கை செலுத்தும் ‘கோட்டைக் காவடி’ நிகழ்வு இந்த கோயிலில் மட்டுமே காணப்படுகிறது.

 

  • அருணகிரிநாதர் இந்த முருகக் கடவுளை திருப்புகழ் பாடியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகளும் இந்தத் தலத்து இறைவனைப் பாடியுள்ளார்.

 

திருவிழா:

  • பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா

 

  • தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா

 

  • சித்திரை – பால்‌பெருக்கு விழா

 

  • வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா

 

  • ஆனி – மகாபிசேகம்

 

  • ஆடி – திருப்படிபூஜை

 

  • ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா

 

  • புரட்டாசி – அம்புபோடும் திருவிழா

 

  • ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்,

குன்றக்குடி – 630 206

சிவகங்கை மாவட்டம்.

 

போன்:

+91 – 4577 – 264227, 97905 83820

 

அமைவிடம்:

காரைக்குடியிலிருந்து குன்றக்குடி 10 கி.மீ., தூரத்தில் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து கோயிலின் தூரம் : திருப்பத்தூர் – 12 கி.மீ.,

Share this:

Write a Reply or Comment

1 × four =