March 27 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருப்பாண்டிக்கொடுமுடி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்         :     கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர்.

அம்மன்         :     பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி.

தல விருட்சம்   :     வன்னி

தீர்த்தம்         :     தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி

புராண பெயர்    :     திருப்பாண்டிக்கொடுமுடி

ஊர்             :     கொடுமுடி

மாவட்டம்       :     ஈரோடு

 

ஸ்தல வரலாறு :

உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் பெரியவர்’ என்ற பிரச்சனை கடவுள்களுக்கும் இருந்துதான் வந்தது. இப்படித்தான் ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன் தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்நு பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ ஒவ்வொன்றும் ஒரு தலமானது. சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறது. மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும் தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார். இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை நாயகி

 

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம். மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைப்புள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும். அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வ திக்கும் தனி சந்நிதி உள்ளது.இக்கோவிலில் உமா மகேஸ்சுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் சந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

 

கோயில் சிறப்புகள் :

 

  • இத்தலம் மும்மூர்த்தித் தலம் என்பர்

 

  • கொடுமுடி. புராணபெயர் திருப்பாண்டிக்கொடுமுடி மூலவர் கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி, மலை கொழுந்திஸ்வரர். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களை காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் ஆகும்.

 

  • இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • தலவிருட்சம் வன்னி. இத்தலத்தில் உள்ள ஆண் மரமாக கருதப்படும் வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.

 

  • வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது.

 

  • தேவாரப்பாடல் பெற்ற கொங்கு ஏழ் சிவத்தலங்களில் 6வது தலம் கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருப்பாண்டிக்கொடுமுடி என்று புராணகாலத்தில் அழைக்கப் பட்டது கொடுமுடி தலம்.

 

  • பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது.

 

  • அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமான் மேல் திருப்புகழ் பாடியுள்ளார்.

 

  • இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார்.

 

  • ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம்.

 

  • ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது.

 

  • பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.

 

  • பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும் ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

 

  • மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

 

  • திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும் சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆனால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார்

 

  • காவிரிக்கு இந்தத் தலத்தில் தனிச் சிறப்பு உண்டு. பூலோகம் செழிக்கும் வகையில், விநாயகர் காக்கை வடி வெடுத்து அகத்திய முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரி நதியைப் பெருகியோடச் செய்தார் என்பது நாம் அறிந்ததே! அப்படி காவிரி கவிழ்க்கப்பட்ட இடம் கொடுமுடித்துறை என்பர். இங்கு கொடுமுடிநாதரை தரிசிப்பதற்காகவே வந்தது போல், தெற்கு நோக்கி வந்து, பின் இங்கிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறாள் காவிரி.

 

  • பரத்வாஜருக்கும் இந்தத் தலத்துக்கும் என்ன தொடர்பு? வேத ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தவரும், தவத்தில் சிறந்தவருமான பரத்வாஜர், ஒரு முறை பல தலங்களை தரிசித்து கொடுமுடி திருத்தலத்தை அடைந்தார். தினமும் காவிரியில் நீராடி, வன்னி மரத்தின் அடியில் பொன்னம்பலத்தில் நடனமாடும் நடராஜப் பெருமானின் திருவடிகளைச் சிந்தித்துத் தவமிருந்தார் பரத்வாஜர். மகுடலிங்கரையும் தவறாமல் வழிபட்டார். பெருமான் அவருக்குத் திருவருள் செய்ய வேண்டி சிவ கணங்கள், முனிவர்கள் சூழ, நந்தியும் திருமாலும் மத்தளம் கொட்ட, பிரம்மன் பொற்றாளம் இசைக்க… தும்புரு, நாரதர் ஆகியோர் யாழ் இசைக்க, யாவரும் கண்டு மகிழும்படி சித்திர நடனம் செய்தருளினார். திருநடனம் கண்டு முனிவர் பெரிதும் மகிழ்ந்தார். இப்படி சிவனருள் பெற்ற பரத்வாஜரின் பெயரால் பரத்வாஜ க்ஷேத்திரம் என போற்றப்படும் கொடுமுடியில் அவரது பெயரால் ஒரு தீர்த்தமும் உள்ளது.

 

  • பெருமாள் சந்நிதியின் இரு புறமும் பன்னிரு ஆழ்வார்கள், பரமபத நாதர், வேங்கடாசலபதி, கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மூலவர் வீர நாராயணப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.

 

  • சைவ- வைணவ ஒற்றுமைக்கு பெயர் பெற்றது கொடுமுடி. வீதியுலாக்களில், சிவனும் விஷ்ணுவும் ஒன்றாகவே வலம் வருவர்.

 

திருவிழா: 

சித்திரை திருவிழா 11 நாள் நடக்கிறது. ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்,

திருப்பாண்டிக் கொடுமுடி

கொடுமுடி – 638 151

ஈரோடு மாவட்டம்.

 

போன்:    

+91- 4204-222 375.

 

அமைவிடம் :

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது.

 

 

Share this:

Write a Reply or Comment

nine + 14 =