அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
உற்சவர் : மாயக் கூத்தர்
தாயார் : அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.
தீர்த்தம் : பெருங்குளத்தீர்த்தம்
புராண பெயர் : திருக்குளந்தை
ஊர் : பெருங்குளம்
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்தல வரலாறு :
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருக்குளந்தை என்று அழைக்கப்படும், சிற்றூரில் வேதசாரர் என்ற அந்தணர் வசித்து வந்தார். இவர்களின் இல்லறம் நல்லறமாகவே சென்றாலும் இவர்களுக்கு மக்கள் பேறு இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது. இதனால் தம்பதியர் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தனர். தங்கள் குறைகள் நீங்க இவர்கள் பல்வேறு திருக்கோவில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டனர்.
இவர்களின் பக்திக்கு இறங்கிய பெருமாள், தன்னுடன் இருந்த மகாலட்சுமியை அழைத்து அவர்களின் குறையை போக்க குழந்தையாக அவதரிக்கும்படி கூறுகிறார். மகாலட்சுமியும் இதற்கு சம்மதிக்க இவர்களின் கருணையினால் குமுதவல்லி கர்ப்பம் தரிக்கிறாள். சரியாக பத்தாவது மாதம் குமுதவல்லிக்கு குழந்தை பிறக்கிறது. மகாலட்சுமியே குழந்தையாக வந்து அவதரித்தாள். அந்த குழந்தைக்கு கமலாவதி என்று பெயர் சூட்டி பாலூட்டி, சீராட்டி, பாசமழை பொழிந்து வளர்த்து வருகின்றனர் அந்த தம்பதியினர்.
பருவம் எய்திய கமலாவதி பேரழகியாகவும், கல்வியில் சிறந்த மங்கையாகவும் வளர்ந்து வந்தாள். இவளின் அழகில் மயங்கி பக்கத்து ஊர்களிலிருந்து நிறைய பேர்கள் பெண் கேட்டு வந்தனர். ஆனால் கமலாவதியோ சதா சர்வ காலமும் ஆண்டாளை போல பரந்தாமனை நினைத்தபடியே வாழ்ந்து வந்தாள். இந்நிலையில் கமலாவதிக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்ய, கமலாவதி பரந்தாமனை நினைத்தபடியே தன்னை வந்து ஆட்கொள்ளுமாறு வேண்டி கொண்டிருந்தாள்.
கமலாவதியை ஆட்கொள்ள செவிசாய்த்த பெருமாளும் ஒருநாள் மாய கண்ணன் தோற்றத்தில் திருக்குளந்தை ஊருக்கு வருகிறார். அவரை கண்ட கமலாவதி அவர் திருமுகத்தில் இருந்த தெய்வீக ஒளியை கண்டு அவரை கண்ணபிரானாக உணர்கிறாள். இப்படியிருக்க ஒருநாள் கமலாவதி தன் தோழியர்களுடன் குளத்திற்கு சென்று குடத்தில் நீர் நிரப்பி திரும்பி வருகையில் பெருமாள், கமலாவதி முன் தோன்றி அவளை ஆட்கொண்டார். அவருடைய திருமுகத்தை கண்ட நொடியில் கமலாவதியும் அவருடன் சென்று தற்போது கோயில் சன்னதி அமையப்பெற்ற இடத்துக்கு சென்று மறைந்துவிட்டனர். இதனை கண்ட தோழியர்கள் பதறியபடியே ஊருக்குள் சென்று நடந்ததை கூற, வேதசாரன் தன் மனைவியை அழைத்து கொண்டு ஊர் மக்கள் புடை சூழ அந்த இடத்திற்கு வந்து தன் மகள் கமலாவதியை தேடுகிறான். அங்கு பெருமாளும், கமலாவதியும் அர்ச்சாவதார திருமேனியாய் காட்சியளிக்க, அப்போது வானத்தில் இருந்து பெருமாள் அசிரீரியாக., வேதசாரனே உன் பக்திக்கு இறங்கி மகாலட்சுமியையே உமக்கு குழந்தையாக பிறக்க செய்தோம், தற்போது அவள் என்னை சேரும் நேரம் வந்ததால் யாமே அவளை ஆட்கொண்டோம் எனக் கூறியருளினார். இதனைக் கேட்ட ஊர் மக்களும், வேதசாரன் மற்றும் அவன் மனைவி குமுதவல்லியும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டு பெருமாளை துதித்தார்கள்.
அசுமசாரன் மீது கூத்தாடிய வரலாறு:
முற்காலத்தில் அசுமசாரன் என்னும் அரக்கன் ஒரே சமயத்தில் ஆயிரம் பெண்களை மணம் முடிக்க ஆவல் கொண்டு ஒவ்வொரு பெண்களாக கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைக்கிறான். ஒருவழியாக 998 பெண்களை சிறைபிடித்த பின்னர், மீதமுள்ள இரண்டு பெண்களை தேடி வான் வழியே சஞ்சரிக்கும் போது, வேதசாரனின் மனைவி குமுதவல்லியை காண்கிறான். அவளின் அழகில் மயங்கிய அசுமசாரன் அவளையும் கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைத்தான்.
இங்கு வேதசாரன் தன் மனைவியை காணாமல் பெருமாளிடம் முறையிட, பெருமாள் வேதசாரனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நேராக இமயமலைக்கு சென்று குமுதவல்லியையும் மற்ற 998 பெண்களையும் மீட்டு அனுப்பி வைத்துவிட்டு, திருக்குளந்தை சேர்கிறார். அப்போது இந்த விஷயத்தை அறிந்து கொண்ட அரக்கன் அசுமசாரன் திருக்குளந்தைக்கு வந்து பெருமாளுடன் போரிடுகிறான். அப்போது பெருமாள் விசுவரூபம் எடுத்து அசுமசாரனின் பாதங்களை பிடித்து தலைகீழாக அவனைத் தூக்கி தரையில் அடித்து அவனை கீழே கிடத்தி அவன் தலை மீது ஏறி கூத்தாடினாராம். இதனால் தான் இத்தல பெருமாளுக்கு மாயகூத்தன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் வேங்கட வாணன் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் மேல் வர்ணம் பூசப்பட்டுள்ளது. அருகிலேயே வேதசாரரும் அவரது மனைவி குமுதவல்லியும் கைகூப்பி நிற்கின்றனர். அருகே பிரகஸ்பதியும் உள்ளார். கோயில் வாயில் அருகே உள்ள பந்தல் மண்டபத்தில் திருமஞ்சனக் குறடு உள்ளது. கோயிலுக்குள் கழுநீர்த் துறையான் சந்நிதி, கொடி மடம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உள்ள உற்சவரே மாயக்கூத்தர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இருபுறத்திலும் அலர்மேல் மங்கைத் தாயாரும், குளந்தைவல்லித் தாயாரும் உள்ளனர்.
மூலவரை தரிசித்த பின்னர் இரண்டு கருடாழ்வாரைக் காணலாம். ஒருவர் புதிய மேனியுடனும் மற்றொருவர் புராதனமானவராகவும் உள்ளனர். கையில் பாம்பொன்று ஏந்தி, பெருமாள் எழுந்தருள்வதற்கு ஏற்ற முறையில் கால் மடித்து சிறகை விரித்து நிற்கிறார். மேலும் ஆழ்வார்கள், உடையவர், சேனைமுதலியார், மணவாள மாமுனிகள் சந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலுக்கு கீழ்புறம் வழுதீசர் கோயில் உள்ளது. பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த உக்கிரப் பெருவழுதியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன் இங்கு கோயில் கொண்டுள்ளார்.
கோயில் சிறப்புகள் :
- இங்கு கருவறையில் உள்ள பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதியை போன்றே திருக்கோலம் காட்டியருளுகிறார்.
- நம்மாழ்வார் ஒரே ஒரு பாடல் மூலம் மங்களாசாசனம் செய்தத் தலம்
- இந்த தலத்தில் நம்மாழ்வார் தன்னைக் காதலியாகவும், மாயக்கூத்தனை காதலனாகவும் பாவித்து பாசுரங்கள் படைத்துள்ளார். அந்த அளவுக்கு இந்த ஸ்ரீநிவாசா பெருமாள் மாயகூத்தர் அழகுற காட்சியளிக்கிறார்.
- இக்கோவில் விமானமும் திருப்பதியே போன்றே ஆனந்த நிலைய விமானம் என்றே அழைக்கப்படுகிறது.
- திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, ரங்கநாதனை மணமுடித்ததை போலவே இந்த திருக்குளந்தை தலத்திலும் கமலாவதி நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, பரந்தாமனை மணமுடித்தாள், மேலும் இங்கு திருவில்லிப்புத்தூரைப் போலவே பெருமாளுடன் கருடாழ்வாரும் உற்சவராக இருப்பதும் இரண்டு தலத்திற்கும் உள்ள ஒற்றுமை ஆகும்.
- பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அவனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார்.
- இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.
- முற்காலத்தில் தேவர்களின் குருவாக விளங்கிய பிரகஸ்பதி என்னும் வியாழ பகவான், பெண்ணாசையால் ஏற்பட்ட மோகத்தால் சாபம் பெற்றுவிட, அந்த சாபம் தீர இங்கு பெருமாளை வழிபட்டு சாப நிவர்த்தியும் பெற்றுள்ளார். அப்படி அவர் முன் பெருமாள் காட்சியளிக்கும் போது முன்னர் அசுமசாரன் அரக்கனை அழித்து அவன் மீது மாயக்கூத்தாடிய அந்த நடன கோலத்தை தனக்கு காட்டியருள வேண்டும் என கேட்க, அவருக்கு மாயக்கூத்தாடிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
- முன்பு குமுதவல்லியை அசுமசாரன் கடத்தி சென்ற போது, அவளை மீட்க செல்ல பெருமாள் ஆயத்தமாக கருடனை தன் ஓர கண்ணால் பார்க்க, கருடனோ தன்னை விட்டால் பெருமாளை சுமக்க யாரும் இல்லை என்ற நினைப்பில் ஆணவத்தோடு மெதுவாக புறப்பட தயாராக, அதனை அறிந்த பெருமாள் உடனே தன் முதுகில் கருடனை சுமந்தபடி இமயமலைக்கு பயணித்தாராம். இதனால் மனம் வருந்தி தனது ஆணவம் நீங்கி பெருமாளின் பாதங்களில் சரணடைந்தாராம் கருடாழ்வார். எனவே கருடனின் ஆணவம் தீர்ந்ததாக ஒரு வரலாறும் இங்கு கூறப்படுகிறது.
- இங்கு தாயார்களுக்கு என தனி சன்னதி இல்லை. கருவறையில் பெருமாளுக்கு முன் அலர்மேலுமங்கை தாயாரும், இங்கு பிறந்து வளர்ந்து பெருமாளை மணாளனாக பெற்ற கமலாவதி என்னும் குளந்தைவல்லி தாயார் பெருமாளின் மார்போடு ஐக்கியமான கோலத்திலும் வேங்கடவாண பெருமாளோடு சேர்த்தியாக காட்சி அளிக்கிறார்கள்.
- இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு மாயக்கூத்தர் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார். இவருடன் இங்கு கருடாழ்வரும் இரு கரங்கள் கூப்பியபடி உற்சவராக காட்சி தருவது சிறப்பம்சம்.
- இக்கோவில் மடப்பள்ளியில் இருந்து கழனி தண்ணீர் வெளியேறும் இடத்தில் கழனி தொட்டியான் என்னும் திருநாமம் கொண்டு ஒரு காவல் தெய்வமானவர் காட்சித் தருகிறார். இந்த மாயக்கூத்தன் திருக்குளந்தை தலத்தை பூர்வீகமாக கொண்ட பல குடும்பங்களுக்கு இவர் குல தெய்வமாக விளங்கி வருகிறார். இவருக்கு தை மாதம் கடை வெள்ளி அன்று திருவிழா நடைபெறுகிறது.
திருவிழா:
- பங்குனி மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் இறுதியில் நடைபெறும் தெப்ப திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
- வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல பெருமாள் மாயக்கூத்தர் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில்,
பெருங்குளம் – 628 752
திருக்குளந்தை
தூத்துக்குடி மாவட்டம்.
போன்:
+91 4630 256 476
அமைவிடம்:
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருபுளிங்குடிக்கு வடக்கே 10கிமீ தொலைவிலும், திருவைகுண்டத்திலிருந்து வடகிழக்கே 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருக்குளந்தை.