March 22 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… கோயம்புத்தூர்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கோனியம்மன்

தல விருட்சம்   :     மகிழ மரம், அரச மரம், நாகலிங்க பூ மரம்

ஊர்             :     கோயம்புத்தூர்

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு :

கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன், தனது ஆட்சியின் கீழ் வசிக்கும் மக்கள், வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம், பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீர்படுத்தினான். அந்த வனத்தின் மையப்பகுதியில் பெரிய புற்று இருந்தது. பெரும்பாலும் நேராக இருக்கும் புற்று. ஆனால் இங்கே கோணலாக, அதாவது வளைந்து, நெளிந்து இருந்தது. அந்த பகுதியில் தம் மக்களோடு குடியேறினான். அந்த பகுதியை ஆட்சி செய்து வந்தான். புற்று இருந்த ஊர் புற்றூர் ஆனது. அதுவே புத்தூரானது. கோவன் ஆண்டு வந்த புத்தூர் என்பதால் கோவன்புத்தூர் என்றாகியது. ஒரு சமயம் கடும் பஞ்சம் நிலவியது. குடிக்கவே நீரின்றி, மக்கள் வாழ வழியின்றி பரிதவித்தனர். சுத்தமான நீர் இல்லாததாலும், போதுமான உணவு கிடைக்காததாலும் பலர் நோய்வாய்ப்பட்டனர். சிலர் செத்து மடிந்தனர். அதனைக்கண்ட கோவன், இந்த நிலை நமது பகுதிக்கு வந்து விட்டது என்றெண்ணி. நாகதேவதையை நினைத்து, புற்று இருந்த இடத்தில் ஒரு கல்லை ஊன்றி அவளே படைக்கும் ஆற்றலும், காக்கும் ஆற்றலும் கொண்டவள் எனக்கூறி வழிபட்டு வந்தான். தம் மக்களையும் வழிபட வைத்தான்.  தனக்கு எல்லாமும் ஆனவள். என் தாய், இந்த புற்று அம்மன் தான். இவளே சக்தி வாய்ந்த தெய்வம். எனக்கு எல்லாமே இந்த அம்மா தான் என்று தன் மக்களிடம் அடிக்கடி கூறி வந்தான்.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஏதாவது வேண்டுதல் என்றால் கோவன் அம்மாவிடம் முறையிட்டால் உடனே பலன் கிட்டும் என்று கூறி வந்தனர். அதுவே கோவன் அம்மன் என்றானது. பின்னாளில் அது மருவி கோவனம்மன், கோனியம்மன் என அழைக்கப்படலாயிற்று. கோவன்புத்தூரே பின்னாளில் கோயம்புத்தூரானது. கோனியம்மன் நகரின் நடுவில் கோயில் கொண்டு மக்களைக் காத்து வருகிறாள்.

 

பத்து வீடுகள் (குடிசைகளானாலும்) சேர்ந்தாற்போல் அமைந்தால்கூட, அருகில் மண்திட்டு அமைத்து, அரசும் வேம்பும் நட்டு, கல்லோ மண்ணோ பிடித்து ஒரு பிம்பம் செய்து, அதையே காவல் தெய்வமாக வணங்குவது தமிழர் வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில், தான் அமைத்த புத்தூரிலும், அவ்வாறே செய்தார் கோவன்..

காவல் தெய்வம் என்று சொன்னாலும், பெரும்பாலும் அன்னையையே காவல் தெய்வமாகக் கொள்வதும் வழக்கம். என்ன இருந்தாலும், குழந்தைக்கு அன்னைதானே அன்பு பாதுகாப்பு! அதன்படி, ஊரின் வடக்குப் பகுதியில், தான் நட்ட கல்லையே, அம்பிகையாக, அன்னையாகக் கோவன் வழிபட்டாராம். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். , இருளர்கள்  அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

கோட்டையின் வெளியில் கோனியம்மன் ஆலயம் அமைத்து கோட்டைக்குக் காவல் தெய்வமாகவும்,  குலதெய்வமாகவும், போரில் வெற்றி தரக்கூடியவளான துர்கையை, கோயில் எழுப்பிக் கும்பிட்டனர். கோனியம்மனாக வழிபடப்படுகிறாள். துர்கை பாதுகாப்பு கொடுப்பாள் (துர்கம் என்பதே கோட்டை என்று பொருள்படும்); துர்கை வெற்றியும் தருவாள் (அந்தக் காலத்து அரசர்கள், போருக்குச் செல்லும் முன்னர், துர்கையையும் காளியையும் வழிபட்டுவிட்டுச் செல்வார்கள். கோசர்கள் கட்டிய கோயிலே, கோவை நகருக்கு நடுவில், தற்போது கோலாகலமாக விளங்கும் கோனியம்மன் ஆலயம்.

 

 

கோயில் சிறப்புகள் :

  • கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள்.

 

  • தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.

 

  • வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

 

  • இன்று வரையிலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப காரியங்களுக்கும் முன்பு கோவையின் அரசியாக திகழும் கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர்.

 

  • கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

 

  • மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர். பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.

 

  • அருணகிரிநாதர் கோவை மேவிய கோனியம்மன் என்று பாடியதாக கூற்று உண்டு. கோவைகிழார் இதுவோ எங்கள் கோவை எனும் நூலில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் தெய்வம் என்றும், கோவை அரசி என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

 

  • தங்களது வாழ்வும் வளமும் யாவும் அம்பிகையே என்று நினைக்கும் தர்மத்தின் வெளிப்பாடுதான், கோனியம்மன் என்கிற பெயர். கோன் என்றால் அரசன் அல்லது தலைவன் என்று பொருள். கோன் என்பதன் பெண்பால் கோனி ஆகும். அனைவருக்கும் அரசி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், யாவர்க்கும் (யாவற்றுக்கும்) தலைவி என்னும் பொருள்கள் புலப்படும்வகையில், தங்களுடைய அன்னையை, கோனி என்றே மக்கள் அழைத்தனர்.

 

திருவிழா: 

மாசியில் 14 நாள் திருவிழா, தமிழ்மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக் கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி. ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்,

பெரியகடை வீதி,

கோயம்புத்தூர்.

 

போன்:

+91-422- 2396821, 2390150

 

அமைவிடம் :

கோவை டவுன்ஹால் பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ., சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., தூரம்.

 

 

Share this:

Write a Reply or Comment

eighteen + 16 =